தமிழ் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் 'இரட்டைக்குழல் துப்பாக்கி'

மாயாஜால மந்திரத்தினால் கூட சில நம்பமுடியாத நிகழ்வுகள் இலங்கை அரசியலில் நடை பெறுவது விந்தையிலும் விந்தை.

'கனவில் நினையாத காலம் எமை வந்து பிரித்த கதை கூறவா'? என்ற கண்ணதாசனின் கவிதை வரிகள் நிதர்சனமாகி 10 மாதங்கள் கூட கடக்கவில்லை. குறைப்பிரசவத்திலே பல 'திடீர்' அரசியல் குழந்தைகள் இலங்கையிலே பிரசவமாகி விட்டன. இருப்பினும் மிக நிதானமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் பழமை வாய்ந்த இரு தமிழ் அரசியற் கட்சிகளை கவனத்திற் கொள்ளலாம்.

* தமிழ் தேசிய கூட்டமைப்பு

* தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி(தமிழ் காங்கிரஸ்)

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிப்படுத்தி இருப்பதானது,

'தாயக பூமியில் சுயநிர்ணயத்துடன் ஒருமித்த நாட்டில் சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சித் திட்டம்'

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிப்படுத்தி இருப்பதானது,

'தமிழ்மக்கள் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவ இறைமைகொண்ட தேசம் என்ற அடிப்படையில் ஒரு நாட்டுக்குள் இரு தேசங்களின் கூட்டு'

இவ்விரு விஞ்ஞாபனங்களும் தமிழ் மக்களின் நிரந்தர தீர்வை நோக்கி நகர்வதாகவே தெரிகிறது. இருந்தாலும், இதற்கான நீதிபதிகள் ஈழம்வாழ் தமிழ்மக்களே.

இந்த இரு கட்சிகளும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிரும் புதிருமாக போட்டியிட வசைபாடி வருகிறது. தமிழ்மக்களின் வாக்குகள் உடைந்து பாராளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவடைய வாய்ப்புக்கள் நிறைய உண்டென்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டாலும், பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தால் என்ன சாதித்துவிடலாம் என்று எண்ணும்போது, இதுவரை காலமும் எதைத்தான் சாதித்துவிட்டதென்றால் 'வெறும் கானல் நீர்தான்' என்பது பதிலாக அமையும்.

பாராளுமன்ற பதவிக்குமப்பால் எமது சிந்தனைகளை மேல்நோக்கி நகர்த்திப் பார்த்தால் பெரும் உண்மை வெளிவரும். அது சிங்கள அரசை நோக்கியிருக்கும் இருகுழல் துப்பாக்கியாக அமையப்போகின்றதென்பது வெளிப்படை. அதாவது, இவ்விரு தமிழ் கட்சிகளுக்கும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்மக்கள் தமது வாக்குகளை முழுப்படியாக அளித்தால்(பிரதிநித்துவம் இல்லாவிடினும்) முற்றுமுழுதாக தமிழீழ மக்கள் தாயகம், தன்னாட்சி, சுயநிர்ணயம், திறமைகொண்ட தேசம் போன்றவைகளுக்கு வாக்குப் பண்ணியதாகவே அமையும் என்பதில் ஐயமில்லை. அதுவானது,

பிரிந்துவாழ்வதற்கான ஆணையை தமிழீழ மக்கள் பிரகடனப் படுத்தி உள்ளார்கள் என்பதை சிங்களத்திற்கு கூறியிருக்கும் செய்தியாக அமையப் போகிறது. பாராளுமன்றப் பிரதிநித்துவம் இல்லாமல் போனாலும் தமிழ்மக்கள் உடைந்துவிட்டார்கள் என்ற சிங்களத்திற்கு இனிப்பான செய்தி தேர்தலின்பின் கசப்பான செய்தியாகிவிடும்.

தமிழ் அரசியற் கட்சிகளின் பிளவால் தமிழ்மக்கள் உடைந்து விட்டாலும், உள்ளுணர்வான தமிழீழ கொள்கையிலிருந்து விலகாது உறுதியாக உள்ளார்கள் என்பதை சிங்கள தேசமும், சர்வதேசமும் எதிர்வரும் தேர்தல் முடிவுகளிலிருந்து படிக்கப்போகும் பாடமாகும்.

மல்லிகையூரான்

Basel 24 Mar 2010
Thanall

<<வாசலுக்கு

Content Management Powered by UTF-8 CuteNews