இலங்கையின் வடகிழக்கு மாகாணத்திலே பறிபோகக் கூடாதென தமிழர்கள் நோக்கும் பகுதிகளில் திருக்கோணமலை மாவட்டமும், அம்பாறை மாவட்டமும் பிரதானமானவை எனலாம். இத்தாயகப் பகுதிகளை சிங்களம் தனதாக்கிக்கொள்ள எடுத்துவரும் முனைப்புகள் சொல்லி மாளாது. இந்த நிலையில் சிங்களத்திற்கு வழி சமைத்துக் கொடுக்க எதிர்வரும் பொதுத் தேர்தல் வாய்ப்பாக அமையப்போகின்றது என எண்ணும் பொழுது கவலை கொள்ளாமல் இருக்க முடியாது.
2000 ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது திருக்கோணமலையிலே பல புத்திஜீவிகளை உள்ளடக்கிய மகாசபை ஒன்று அமைத்து, பல கோணங்களாக பிரிந்திருந்த தமிழ் கட்சிகளை ஒரு கூரையின்கீழ் கொண்டுவருவதற்கு பல பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டன. 'கிளித்தட்டு' பாய்ந்து பல கட்சிகள் புறப்பட ஆயத்தமான போது இவற்றை ஒன்று சேர்க்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்துடன் ஓர் உணர்வாளர் உண்ணாநோன்பு அனுஷ்டித்த போதும் தமிழ் கட்சிகள் எதுவும் ஒரு கூரையின் கீழ் வர மறுத்துவிட்டன. இதனால் இரு தமிழர் ஆசனங்களை பெறவேண்டிய நிலையிருந்தும் ஒரு ஆசனம் கூட பெறமுடியாமல் போனதும், மூன்று முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானதும் வரலாறு. அக்காலங்களின்போது புலிகள் பொதுத் தேர்தலில் மறைமுகமாகவோ நேரடியாகவோ பங்குபெறவில்லை.
2004 ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது திருக்கோணமலை மாவட்டம் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்ததை நினைவுக்குட்படுத்தல் அவசியம். புலிகள் பலமாக இருந்த காலத்தில் இத்தேர்தல் நடத்தப்பட்டமையால் புலிகளின் சுட்டுவிரல் அசைவின்படி மக்கள் ஒற்றுமையுடன் வாக்களித்து இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறப்பட்டது.
இம்முறை பொதுத் தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்திலும் தமிழர் மகாசங்கம், தமிழ்க்கட்சிகள் அனைத்தையும் ஒரு கூரையின் கீழ் கொண்டுவருவதற்காக எடுத்த முயற்சி ஈற்றில் தோல்வியில் முடிந்தது. கட்சிகளை ஒன்று சேர்ப்பதற்கு புத்திஜீவிகள் பலர் மாகாண சபை உறுப்பினர் எஸ். புஸ்பராஜா தலைமையில் பிரத்தியேகமாக தம் காலத்தையும் நேரத்தையும் விரயம் செய்தும் எதுவித பயனும் அளிக்கவில்லை. இம்முறை தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றவேண்டியது கடவுளிடம் தான் உள்ளது.
2010 ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது திருக்கோணமலையிலே மகாசபையும் இல்லை புலிகளின் கட்டுப்பாடும் இல்லை. இது போன்று அம்பாறை மாவட்டத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடு இல்லை. இதனால் சிதறு தேங்காய் போன்று தமிழ் கட்சிகள் தேர்தல் களத்தில் குதித்து தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு வழி அமைந்துவிடுமோ என தமிழ் உணர்வாளர்கள் ஆதங்கப்படுகிறார்கள். தமிழ் கட்சிகளின் பலப் பரீட்சைக்கு களம் அமைக்க இதுவல்ல தருணம். தமிழர் பிரதிநிதித்துவம் இழப்பதால் தமிழ்மக்களுக்கு ஏற்படப்போகும் ஒட்டு மொத்த பாதிப்புகளுக்கும் பிரிந்து நின்று 'சண்டித்தனம்' காட்டும் தமிழ் கட்சிகளே பொறுப்பாகும்.
தசக்கிரீவன்