தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிளவு சிங்களத்திற்கு வெற்றி?
தனக்கு எதிரான கட்சிகளை இல்லாதொழிப்பதில் ஜனாதிபதி மகிந்தாவுக்கு நிகரானவர் எவருமில்லை எனலாம். 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிளவுக்கு அவரின் பங்களிப்பு மிகுதியாக இருப்பதை உணரக்கூடியதாக உள்ளது. இந்த வேட்டையில் முதன் முதலாக சிவநாதன் கிஷோரை தனது தாயக் கட்டையாக்கி நகர்த்த ஆரம்பித்தது இன்றுவரை வெற்றியாக அமைந்தது.

எதிர்வரும் 2010 ம் ஆண்டு பொதுத் தேர்தலை நோக்கினால், வடகிழக்கில் மாவட்ட ரீதியான தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் தெரிவுகளில் முதன்மை வேட்பாளர்களின் விருப்பிலே முழுமையாக தங்கியிருந்ததை அறியலாம். குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்திருப்பதாக கூறும் தமிழரசுக்கட்சி, ரெலோ, E.P.R.L.F, தமிழ் காங்கிரஸ்(. விநாயகமூர்த்தி) போன்ற கட்சிகள் தம் சுய அடையாளங்களை வேட்பாளர் பட்டியலினுள் தவற விட்டுவிட்டன. யாழ் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், மாவை சேனாதி ராஜாவின் ஆளுமையில் சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஆலோசனையில் தெரிவு நடைபெற்றிருப்பதைக் காணலாம். தன்னை தமிழ்காங்கிரஸ் என அ. விநாயகமூர்த்தி கூறிக்கொண்டாலும் அது எடுபடுவதாக அமையாது.

E.P.R.L.F என்ற அடையாளத்தை விட சுரேஸ் பிரேமச்சந்திரன் என்ற தனி நபருக்கான அடையாளமே அதிகமாகும். அதேபோன்று திருக்கோணமலை மாவட்ட தெரிவும் இரா. சம்பந்தன் தலைமையே கோலோச்சி நிற்பதை அவதானிக்கலாம். அங்கே ரெலோ, E.P.R.L.F போன்ற ஏனைய கட்சிகளின் ஆளுமையைக் காணவில்லை.

மன்னாரில் செல்வம் அடைக்கலநாதனின் தெரிவு மிகுதியாக இருப்பதால் தமிழரசுக்கட்சி அடங்கலாக ஏனைய கூட்டுக் கட்சிகளின் ஆளுமைகளும் கரைந்துவிட்டதை காணலாம்.

இதே சாயலாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் பட்டியல் தெரிவு உள்ளதை அவதானிக்கலாம்.

இதில் சிங்களத்திற்கு கிடைத்த வெற்றி என்னவென்றால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிளவு மட்டுமல்ல, கூடவே கூட்டுக்கட்சிகள் தத்தமது அடையாளங்களை தொலைத்துக் கொண்டதுமாகும். இதனிடையே சிவாஜிலிங்கம் அணி, தமிழ் காங்கிரஸ்(கஜேந்திரகுமார்) அணி என இரு அணிகள் பிளவுபட்டது, மேலும் பின்னடைவை தரப்போகிறது. (இச் சந்தர்ப்பத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுக்கோப்பை மீள்நினைவுக் குட்படுத்துதல் அவசியம்)

இந்த நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் கருப்பொருளாகவும் , பேசு பொருளாகவும் எது அமையப்போகிறது என்பதுதான் கேள்வி.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தா-சரத் போட்டியில் முன்வைக்கப்பட்டது யுத்த வெற்றியே ஆகும். இருப்பினும் அதை நடத்தியவருக்கா, செயற்பட்டவருக்கா நன்றி செலுத்த வேண்டும் என்ற தென்பகுதி மக்களின் நிலைப்பாட்டில் மகிந்தாவுக்கு கூடிய நன்றிகளை தெரிவித்தனர். ஆனால் இறந்த படைவீரர்களின் சேவை பற்றி பேசப்பட்டது குறைவாகவே காணப்பட்டது.

இதுபோல, தற்போது களமிறங்கியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் கட்சிகளின் கருப்பொருளாகவும், பேசு பொருளாகவும், விடுதலைப்புலிகளின் பின்னடைவை மறந்தும் வாய்திறக்க மாட்டார்கள். ஆனால், மாவீரர்களின் தியாகங்கள் பற்றி விலாவாரியாக வெளுத்து வாங்குவார்கள் என்பது உறுதி. அதுவே கருப்பொருளாகவும் அமையும். இதற்காக தமிழ்மக்கள் தமது தேசியத்தின் உணர்வுகளை வெளிப்படுத்த எந்த தமிழ் அமைப்பை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதில் தான் வெற்றி தங்கியுள்ளது.

எது எப்பிடியாயினும்கடந்த காலங்களைப் போல வடகிழக்கை விடுதலைப்புலிகள் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தது போல் இம்முறை வாக்களிப்பு பலம் சாத்தியமாக அமையாது. சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுவதுபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் என்ற ஆரூடம் பிழைக்கப் போகிறது.

தமிழ் கட்சிகளின் பிளவு, தமிழ்மக்களின் மனங்களிலிருந்த மாவீரர் தியாகங்களையும், தேசியத்தையும் மறக்கடிக்கப்பட்டு விடுமோ என்ற பயம், தமிழ் உணர்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதை உணர்தல் அவசியம்.

பிரச்சார மேடையில் ஒருவரை ஒருவர் கொச்சைப் படுத்தாத நாகரீக அரசியலை செய்யாவிடின், ஒட்டு மொத்தமாக சிங்களம் கண்ட கனவு பலிதமாகி விடும்.


மலையூர் பண்ணாகத்தான்

Basel 26 Feb 2010
Thanall

<<வாசலுக்கு

Content Management Powered by UTF-8 CuteNews