தமிழ் சமூகம் ஒருமித்து துணிச்சலான தோ்தல் தலைவிதியை தீர்மானிக்கும் கட்டம் எப்படியிருக்க வேண்டும்?
அண்மையில் ஊடகம் வாயிலாக தமிழ்மக்களுக்கு விடுத்த ஒரு மொட்டைக்கடித அறிக்கையைப் பார்க்க நேர்ந்தது. புத்திஜீவித் தனமாக எழுதப்பட்டதாக கூறிக்கொள்ளும் சிலரின் கருத்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் தேச நிர்மாண அமைச்சர் கருணா என அழைக்கப்படும் முரளிதரன் அவர்களின் அறிக்கையை சார்ந்திருப்பதாக தெரிகிறது. இதே தோரணையில் அவரின் கருத்தானது 'தமிழ் முஸ்லீம் மக்கள் ஒன்றிணைந்து புத்திசாலித் தனமான தீர்வை எடுக்க வேண்டிய காலம் இது' என கூறியிருந்தார். வெறுமனே தேர்தலுக்காக கூட்டமைக்கும் சம்பிரதாயம் கருணாவில் இருந்து மறையவில்லை என்பது வியக்கத்தக்க விடயம் அல்ல. ஆனால், புத்திஜீவிகளில் இருந்து இன்னமும் மறையாமல் அல்லது வேண்டுமென்றே மறைவதுபோல் பாசாங்கு செய்வது புத்திஜீவிகளைப் பொறுத்தவரையில் விசனத்துக்குரியது.

சொந்தப் பெண்டாட்டியா? அல்லது வைப்பாட்டியா? நீண்ட காலத்துக்கு நிரந்தரமென்பது புரிதலுக்கு உட்படுத்தப்படவேண்டியது. அதாவது தமிழ் கட்சிகள் உட்பட முஸ்லீம் தமிழ் மக்கள் அடங்கலாக ஒற்றுமைப்படல் வேண்டுமென்பது உண்மையே. அது எந்த அடிப்படையில் என்பதுதான் கேள்வி. தமிழ்மக்களுக்கான தேசியம், சுயநிர்ணயம், தன்னாட்சி ஆகியவற்றில் ஒற்றுமைப்பட கோரும் கட்சிகளின் நிலை எவ்வாறு இருக்கும்? வெறுமனே தேர்தல் கூட்டு நிரந்தரமற்றது.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கட்டி எழுப்பப்பட்ட தேசிய அபிலாசைகளான தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் பேணிப்பாதுகாக்கக் கூடிய தீர்வென்பது நிரந்தரமானது. இந்த அடிப்படையில்தான் ஒற்றுமை மலரல் வேண்டும்.

தீர்வு பற்றி ஊடகங்களுக்கு அறிக்கைவிடும் புத்திஜீவிகள் எழுந்த மானமாக போதிப்பதை விடுத்து தீர்வை குறித்துரைத்து அறிக்கையிடுதல் ஆரோக்கியமானது. மேலும் புத்திஜீவிகளின் கட்டுரையில் 'போருக்குப்பின் தமிழர்களின் நிலைபற்றி' குறித்திருப்பது தமிழ்மக்களின் தெளிவான நிலையை கட்டுரையாளர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது. தமிழ்மக்களின் இத்தனை அழிவிற்குப் பின்னரும் தமிழ்மக்களின் குரலாக வடகிழக்கு, மலையகம் உட்பட வாழும் தமிழ்மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசேற்றிருப்பது கவனிக்கத் தக்கதாகும். துயரங்களின் வெளிப்பாட்டைவிட தேசியத்தில் தமிழ்மக்கள் கொண்டிருக்கும் பற்றுறுதியை தமிழ்மக்கள் காட்டியிருப்பதை புரிந்துகொள்ளல் வேண்டும். கூட்டமைப்பு அங்கத்தினர் சிலர் கொள்கைகளுக்கு மாறுபாடாக நடந்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக கூட்டமைப்பே நடந்துகொண்டு விட்டதென்ற முடிவுக்கு வந்துவிடலாகாது.

கட்டுரையாளரின் 'போருக்குப் பின் தீர்வு எட்டப்படவில்லை' என்ற கருத்து எந்தவிதத்தில் சாத்தியமாகும்? தீர்வானது போர், வெற்றியின் பின் அல்லது முற்றுமுழுதான தோல்வியின் பின் ஒரு தீர்வு எட்டப்படுதல் இயல்பு. இலங்கையில் இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை என்பது யுத்தத்தினால் வெற்றியுமில்லை, தோல்வியுமில்லை என்ற ஜதார்த்தத்தை வெளிப்படுத்துவதோடு யுத்தம் ஒரு கொதிநிலையில் உள்ளதென்பதை காட்டிநிற்கின்றது. எனவே,

இவற்றையெல்லாம் உள்வாங்கி புத்திசாலித்தனமான, செயற்படுத்தக்கூடிய, இலகுவழியிலான, வன்முறையற்ற, தமிழ்மக்களின் இலட்சியங்கள் பாதிக்கப்படாத ஒரு தீர்வை முன்வைப்பதுதான் சாலச்சிறப்பென புத்திஜீவிக் கட்டுரையாளர்களின் சிந்தனைகளுக்கு சமர்ப்பிக்கின்றோம்.

 குறைபுத்தி ஜீவிகள்

Basel 19 Feb 2010
Thanall

<<வாசலுக்கு

Content Management Powered by UTF-8 CuteNews