தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைமை மாற்றப்பட வேண்டுமா?
தற்போதைய தேர்தல் காலங்களில் ஊடகங்களிலே பரபரப்பாக பேசப்படும் விடயங்களில் மிக முக்கியமானது தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைமை மாற்றப்பட வேண்டுமென உள்வீட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோஷமிடுவது ஆகும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தலைமை மாற்றம் சம்பந்தமாக ஆர்வம் காட்டுவது, இருக்கின்ற கொஞ்ச நஞ்ச தேசிய நினைப்பையும் மக்கள் மத்தியிலிருந்து அகற்றுவதற்கான முன்னேற்பாடென கருத இடமுண்டு.

தலைமையுடன் காழ்ப்புக் கொள்வதற்கு பிரதான காரணியாக கடந்த ஜனாதிபதித் தேர்தலைக் கொள்ளலாம். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்துக் கொண்ட முடிவுகள் பலருக்கும் பல கோணத்தில் வித்தியாசப்படலாம். குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒன்று சேர்ந்து எடுத்த 'முடிவென்பது' தான் முக்கியப்படுத்தப் படுகிறது. இம் முடிவுக்கு தலைமை மட்டும் பொறுப்பாக இருக்கமாட்டாது. சேர்ந்தெடுத்த கூட்டுமுடிவாக இருக்கும்.

உடன்பாடு, முரண்பாடுகளுக்கப்பால் கூட்டமைப்பு எடுத்த முடிவுக்கு கட்டுப்படுதல் என்பது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்காகும். அது, தலைமை என்ற ஒருமைத்தனம் கொண்ட தனிப்பட்ட நபர் கட்டுப்பாடாக இருக்க முடியாது. இதுபோக, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய சிவாஜிலிங்கத்திற்கு இறுதி முடிவெடுப்பதற்கு இறுதி நேரம்வரை காலம் கனிந்திருந்தது. சிவாஜிலிங்கத்தின் கொள்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பினும் அது மக்கள் மயப்படுத்தப்பட்டு அங்கீகாரம் பெறாத ஒன்றாகும். அதன் பலாபலன்களை அவரின் தேர்தல் முடிவுகள் கூறியது.

காலம் கடந்து செல்லவில்லை என்பதை மனதில் கொண்டு 'வீட்டுச் சின்னத்துக்குள்' இருக்க வேண்டிய இலட்சிய வேட்கைகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஒட்டமுடியாத வார்த்தைகளைக் கூறி பிளவுபடுவதை தவிர்த்துக்கொள்ளுதல், தமிழ்தேசியத்தை நேசிக்கும் அனைத்து தமிழ்மக்களின் அவாவாகும். நாவடக்கம் இதில் கடைப்பிடிக்கப் படவேண்டியதாகும்.

கூட்டாக இருக்கும் பொழுது தலைமையை ஏற்றுக்கொண்டுவிட்டு எல்லாம் சரியென தலையை ஆட்டி, இப்போது ஒழுக்காற்று நடவடிக்கையின் போது தலைமைக்கெதிராக கூச்சலிடுவது பொருத்தமாகாது. இதற்கான பரிகாரம் என்னவென்று தேடி தேசியத்தை வாழ வைப்பதற்கான வழிமுறைகளைக் காணல் வேண்டும்.

இறுதியாக ஒரு விடயம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கான அங்கீகாரமானது அதனுள் அடங்கும் நபர்களைவிட ஒற்றுமையுடன் இருக்கும் கூட்டுக்குத்தான் என்பதை அனைவரும் உணர்தல் அவசியம். அதனால் தனிப்பட்ட நபர்களுக்கான செல்வாக்கைக் கருத்தில் கொண்டு பிரிந்து செல்வார்களானால் இறுதியில் மக்களால் தூக்கி எறியப்பட்டு மண்கவ்வுவார்கள் என்பது உறுதி. இதனை அனைத்து கூட்டமைப்பு உறுப்பினர்களும் மனதில் ஆழமாக பதித்துக் கொள்ளல் கட்டாயமானது.

இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ந. ஸ்ரீகாந்தா, M . K . சிவாஜிலிங்கம் ஆகியோர் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை மீறியது தவறென்பதை முதலில் ஒத்துக் கொள்ளல் அவசியம். அதை கூட்டமைப்பின் தலைமை உட்பட அனைவரும் சாதகமாக பரிசீலிக்க வேண்டியதும் அவசியம். மீண்டும் இதுபோன்றதொரு தவறு ஏற்படமாட்டாதென்ற உத்தரவாதத்துடன் இருவரையும் கூட்டமைப்பினுள் உள்வாங்கப் படவேண்டுமென தேசியத்தின் சார்பால் தமிழ்மக்கள் நோக்குகின்றார்கள்.

இதைவிடுத்து, தலைமையை மாற்றுவதென்பது இப்போதைய நிலையில் தேவைப்படாத ஒரு கருத்தாகும். இதனூடாக மேலும் பல விரிசல்கள் ஏற்பட்டு சிதறு தேங்காய்களாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம்.

மலையூர் பண்ணாகத்தான்

Basel 18 Feb 2010
Thanall

<<வாசலுக்கு

Content Management Powered by UTF-8 CuteNews