Navigation

 
 main page
 archives
 statistic
 other link
 other link
 

 Quick search

 
 

 banners/sponsors

 
 put some banners here
 
 and some others banners here
 

 Friends

 
 CutePHP Scripts
 UTF-8 CuteNews
 Google News
 Mozilla.org






ஈழத்தமிழருக்கு ஏற்ற விஞ்ஞாபனம் எது?
'தணல்' இணையத்தள வெளியீடுகளை கிரமமாக படித்து வருபவன் என்ற வகையில் சில விபரங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இயலுமானால் இதற்கான விளக்கங்களை தருவீர்களானால் சந்தோசமடைவேன்.
 
தங்களின் இணையத்தளமூடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகர்வுகள் ஓரளவு சாதகத்தன்மையை கடைப்பிடிப்பது தெரிந்தாலும், சில நியாயங்களை சுட்டிக்காட்டுவதையும் காணக் கூடியதாக உள்ளது.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பை தேசியத்தலைவர் அங்கீகரித்த காரணத்தாலும், ஈழத்தமிழ்மக்களின் நிரந்தரமான சுதந்திர வாழ்விற்கு பாடுபடுகின்றதென்ற  காரணத்தாலும் நான் இதனை ஆதரிக்கிறேன்.
 
கடந்த மாதம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் கனேடிய வானொலிக்கு வழங்கிய பேட்டியில் தன்னை மறந்து கோபமடைந்ததை பலர் வெறுப்புடன் நோக்கினாலும், நான் அது ஓரளவு சரியென அவர் நிலையிலிருந்து வாதிட்டிருந்தேன். ஆனால் தற்போது கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரா. சம்பந்தன் அவர்கள் லண்டனில் உள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு செய்தி அறிக்கையின் போது அளித்த பேட்டியில் சற்று உணர்ச்சி வசப்பட்டு, தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  மீது வசைபாடியதை கேட்கக் கூடியதாக இருந்தது.
 
அவர் உணர்ச்சி வசப்பட்டது பிரச்சனை  அல்ல. அது அவரின் தனிப்பட்ட குணாதிசயம் சார்ந்த விடயம். ஆனால் நான் கேட்பது அதுவல்ல.
 
தற்போது தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி(தமிழ் காங்கிரஸ்) யால் வெளியிட்டு வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக படித்தேன். இது வெளிவருமுன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தை ஏற்றிருந்தேன்.
 
ஈழத்தமிழ் மக்களின் நலன் சார்ந்த குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பால் கூறப்படாத பல விடயங்கள் மிக நுட்பமாகவும் ஆழமாகவும் கூறப்பட்டிருந்ததை கண்ணுற்றேன். தேர்தல் விஞ்ஞாபனத்தை பொறுத்தமட்டில் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி வெளியிட்ட விஞ்ஞாபனமே  சிறந்ததென முடிவுக்கு வந்துள்ளேன். ஆனால் இவை, தடம் மாறாமல் நடைமுறைப் படுத்தப்படுமா என்பது மறுபுறம் உள்ள கேள்வியாகும். இவற்றையும் தாண்டி, விஞ்ஞாபனம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும்.
 
தமிழ் காங்கிரஸ்சின் விஞ்ஞாபனம் பற்றி தொலைக்காட்சி அறிவிப்பாளர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கேட்டபோது, அவர் அளித்த பதிலானது, 'கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் வெளியிடப்பட்ட விஞ்ஞாபனம் பொருத்தமற்றது. இதனால் எந்த பயனும் தமிழ்மக்களுக்கு ஏற்படாது. இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடப்பட்ட எதனையும் ஏற்கனவே அமரர் பொன்னம்பலத்தாலோ, அமரர் தந்தை செல்வாவாலோ, திருவாளர் பிரபாகரனாலோ கூறப்படவில்லை . அப்படியானதொன்றை எவ்வாறு ஏற்கமுடியும்?' என்று கூறினார்.
 
இரா. சம்பந்தனின் கருத்தை எந்த வழியிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பொன்னம்பலம், செல்வா, தலைவர் பிரபாகரன் ஆகியோரால் கூறப்பட்டவை தான் விஞ்ஞாபனமாக வரவேண்டும் என்ற நியதி எங்கு உள்ளது? அவர்கள் கூறியவற்றிலிருந்து நெறி மாறாமல் செழுமைப் படுத்தப்பட்டு தற்போது தமிழ்மக்களுக்கு பொருந்தக்கூடியதாக இருந்தால் அதுவே சிறப்பு என்று எண்ணுகிறேன்.
 
தேர்தல் விஞ்ஞாபனத்தின் குறை நிறைகளை குறிப்பிடலாம். 'குருடன் பெண்டிலுக்கு அடித்தது' போல சம்பந்தன் விஞ்ஞாபனத்தை ஆழமாகப் படிக்காமல் எழுந்த வாரியாக குறை கூறியதுபோல் தெரிகிறது. அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு விஞ்ஞாபனத்தில் கூறப்படாத பல விடயங்கள் ஈழ தமிழ்மக்களுக்கு தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருக்கின்றதென்பதில் தெரிகின்ற சீற்றம் அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் கூறப்படாத சில பல நல்ல விடயங்கள் வேறெந்த கட்சியின் விஞ்ஞாபனத்திலும் கூறப்படக் கூடாதென்ற எண்ணமோ?  அல்லது அப்படியே கூறப்பட்டிருந்தாலும் அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடாதென்ற எண்ணம்போலும் தெரிகிறது.
 
தமிழ்மக்களைப் பொறுத்த மட்டில் யார் குற்றினாலும் நல்ல தரமான அரிசி கிடைக்க வேண்டும். அது தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இல்லாவிட்டால் முகத்துக்கு அஞ்சி நடவாமல் மக்களால் அதை தூக்கி எறிய வேண்டிய நிலை ஏற்படலாம்.எதற்கும் இரா. சம்பந்தனிடம் கேட்ட கேள்விகளுக்கான சரியான பதில் இல்லாமல் குதர்க்கமான பதில் கிடைத்தது வேதனைப்படுத்துகிறது. தொடர்ந்து இந்த நிலை நீடிக்காமல் மாற்றப்பட வேண்டும். இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய அங்கத்தவர்களிடம் மிகுந்த பொறுப்பு உள்ளதென எண்ணுகிறேன்.
 
தயவு செய்து இந்த மடலை பிரசுரித்தால் நன்றி உடையவனாய் இருப்பேன்.
 
ஞானவேல் பிரேமச்சந்திரன்
சூரிச் மாநிலம்
சுவிட்சர்லாந்து
Basel 22 Mar 2010

<<வாசலுக்கு

Content Management Powered by UTF-8 CuteNews


put your footer and copyright here