தான் நினைத்ததை செய்பவர் எனவும் எவரும் கருத்துக் கூறும் வரை பார்த்துக் கொண்டிருப்பவர் அல்ல எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரிதா லங்கா பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு முன்னர், நீங்கள் ஏன் அது குறித்து கருத்து வெளியிட்டீர்கள் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள எவருக்கும் பான்-கீ-மூனின் அறிக்கை எதிராக எதனையும் செய்ய முடியும் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார்.

நிபுணர்கள் குழுவின் அறிக்கை இலங்கைக்கு எதிராக விடுதலைப்புலிகளின் தேவைக்கு அமைய தயாரிக்கப்பட்ட அறிக்கை. யுத்த காலத்தில் கூட விசேட பொறுப்புடன் செயற்பட்ட நாடு இலங்கை.

நிபுணர்கள் குழுவின் அறிக்கை சர்வதேச சட்டத்திற்கு முரணாக தயாரிக்கப்பட்ட அறிக்கை என அண்மையில் ரஷ்ய தூதுவர் தெரிவித்தார். பிரபாகரனின் தேவைதான் அறிக்கையில் உள்ளது.

இலங்கையை அடிப்படைவாத பௌத்த நாடாக மாற்ற போவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் விடுதலைப்புலிகள் ஒழுக்கம் நிறைந்த அமைப்பு எனவும் அதில் கூறப்பட்டுள்ளது எனவும் கோத்தபாய கூறியுள்ளார். அதேவேளை கே.பி குறித்து கருத்து வெளியிட்டுள்ள கோத்தபாய மிகவும் சிரமப்பட்டு கைதுசெய்யப்பட்டவர் எனவும் அவர் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் அவர் யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டதை தான் அறிந்திருக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கமோ, பாதுகாப்பு தரப்பினரோ இலங்கை மக்களின் மனித உரிமைகளை மீறவில்லை – உடுகம ஸ்ரீபுத்தரக்கித தேரரர்:-

இலங்கை அரசாங்கமோ, பாதுகாப்பு தரப்பினரோ இலங்கை மக்களின் மனித உரிமைகளை மீறவில்லை என அஸ்கிரிய மாநாயக்கர் உடுகம ஸ்ரீபுத்தரக்கித தேரர் தெரிவித்துள்ளார். அமைதியாக வாழ்ந்த நாட்டு மக்களுக்கு எதிராக செயற்பட்ட பயங்கரவாத குழுவை மாத்திரம் அரசாங்கம் அடக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பு மனித உரிமைகளை மீறியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது பொருத்தமற்றது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அனைத்து தரப்பிடமும் விசாரணைகள் நடத்துவது ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பு எனவும் மாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.