சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இதுவிடயம் தொடர்பாக இந்தியா தனது நிலைப்பாட்டினை வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும் என மூத்த  மனித உரிமை வல்லுநர் ஒருவர் கூறுகிறார்.

“இந்த விடயம் தெடர்பாக சிறிலங்கா வெளிப்படையான நிலைப்பாட்டினை எடுக்கவேண்டும்” என மனித உரிமைக்கண்காணிப்பகத்தின் தென்னாசியப் பிராந்தியப் பணிப்பாளர் [Meenakshi Ganguly] மீனாக்சி கங்குலி.

அனைத்துலக ரீதியில் ஒரு தலைவராக இந்தியா மாறுவதற்கு விரும்புகிறதெனில், பொதுமக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் எண்ணம் தனக்கிருக்கிறது என்பதை இந்தியாவினது தலைமைத்துவம் வெளிப்படையாகக் காட்டவேண்டும் என அவர் தொடர்ந்தார்.

சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க் குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டிருப்பதைக் காட்டும் ‘நம்பத்தகு குற்றச்சாட்டுககள்’ தாங்கள் கண்டறிந்திருப்பதாக ஐ.நாவின் வல்லுநர்கள் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

“போர்க் குற்றங்கள் தொடர்பான நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் வல்லுநர்கள் குழுவிற்குக் கிடைக்கப் பெற்றிருக்கிறது. அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் செயற்பட்டிருக்கிறார்கள். போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் இதற்குள் அடங்கும்’ என கொழும்பிலிருந்து வெளிவரும் ஐலண்ட் பத்திரிகை ஊடாகக் கசிந்த இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

“உறுதிப்படுத்தப்படாத உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அடிப்படையில் ஆதாரமற்ற அறிக்கை இது” எனச் சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா வல்லுநர்கள் குழுவின் இந்த அறிக்கையினை நிராகரித்திருக்கிறார்கள்.

சிறிலங்காவில் இடம்பெற்றது எதுவோ அதற்குப் பொறுப்புச்சொல்லும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற வாதம் மேலும் வலுப்பெறுமிடத்து, இதுவிடயம் தொடர்பாக இந்தியா அரசாங்கம் சிறிலங்காவுடன் தனிப்படக் கலந்துரையாடும் என அவதானிகள் கருதுகிறார்கள்.

ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர ஆசனத்தினைப் பெறுவதற்கு புதுடில்லி ஆவலுடன் இருக்கும் இந்த நிலையில் மனித உரிமைகள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு இவ்வாறு காத்திரமான ஆய்வுக்கு உட்பட்டிருக்கிறது.

தற்போது ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினரல்லாமல் இருக்கும் இந்தியா பாதுகாப்புச் சபையில்  லிபியாவின் கடாபிக்கு எதிரான தீர்மானத்திற்கு ஒப்புதலளித்திருந்தபோதும் பலத்தினைப் பயன்படுத்துவது என்ற விடயத்தினை அண்மையில் நிராகரித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட கிளர்ச்சிகளின்போது இந்தியா ஆக்கபூர்வமான பங்கினை வகித்தாகக் கூறும் கங்குலி, ஆனால் இந்தியா மனித உரிமைகள் விடயத்தில் போதியளவு கவனத்தினைத் காட்டவில்லை எனக் கூறுகிறார்.

“சிறிலங்காவிற்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பான இந்திய நிலைப்பாடு தொடர்பாக கரிசனை கொள்ளும் மக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்” என அவர் தொடர்ந்தார்.

செய்தி வழிமூலம்: Deccan Herald