தமிழக சட்டசபை தேர்தல் இடம்பெற இன்னும் இரண்டு வாரங்களுக்குக் குறைவாகவே இருக்கிறது. இரு பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணியினர் தேர்தல் பிரச்சாரங்களை முடக்கிவிட்டுள்ளார்கள். ஒருவரையொருவர் குற்றம் சொல்வதிலிருந்து, திரைப்படத்துறையினரின் நகைச்சுவையான கருத்துக்களும் முன் எப்பொழுதும் இல்லாதவாறு இந்தத் தேர்தலில் அதிகரித்துள்ளது. தேர்தல் களத்தில் நிற்கும் ஒருவரிடத்திலிருந்தும் ஈழத்தமிழரைப் பற்றி ஒரு வார்த்தையேனும் வெளிவரவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெறும் சட்டசபை தேர்தலென்றாலென்ன, நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலுமென்ன ஈழத்தமிழரின் விவகாரம் தமிழகத்தில் முக்கிய இடத்தை பெற்று வந்துள்ளது. மே 2009-இல் முடிந்த நான்காம் கட்ட ஈழப்போருக்கு பின்னர் சில மாதங்கள் ஈழத்தமிழர் விடயம் பெரிதாக தமிழகத்தில் பேசப்பட்டு வந்துள்ளது. அந்நிலை இப்பொழுது இல்லாமல் போய்விட்டது.

திமுகவினால் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதி ஈழத்தமிழர்கள் சமாதானத்துடனும் கண்ணியத்துடனும் வாழும் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறியதுடன் நின்றுவிட்டது. அதிமுகவினால் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதியில் ஈழத்தில் வாழும் தமிழர்களின் நிலையைப் பற்றி ஒரு வார்த்தையேனும் கூறவில்லை. அகதிகளாக தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் சுதந்திரமாகவும் கண்ணியமாகவும் தமிழகத்தில் வாழ்வதற்கு அதிமுக ஆட்சியைக் கைப்பற்றினால் நடவடிக்கை எடுக்கும் என்று கூறுகிறது.

அதிமுகவின் ஈழத்தமிழர்கள் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றத்தையும் காணவில்லை.  1991-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களை படாதுபாடு படுத்தியது. ஈழத்தமிழ் அகதிகளுக்கு வீடுகளை வாடகைக்கு கொடுக்கக்கூடாது என்று தமிழக மக்களை கேட்டதுடன், சிங்கள அரசு எப்படி அதன் பாதுகாப்புப் படையினரிடம் தமிழர்களை வதைக்க சட்டங்களை ஏவிவிட்டதோ அதைப்போலவேதான் ஜெயலலிதாவும் காவல்துறையினரிடம் அதிகாரங்களை வழங்கி ஈழத்தமிழர்களை வதைத்தார்கள்.

ஜெயலலிதாவின் நடவடிக்கைகளில் எந்தவித மாற்றத்தையும் பல காலங்களாகக் காண முடியவில்லை. நான்காம் கட்ட ஈழப் போர் உக்கிரம் அடைந்திருந்த வேளையில் மட்டும் தமிழக மக்களின் ஏகோபித்த ஈழத்தமிழர் மீதான அனுதாபத்தைப் பார்த்து தானும் ஏதோ ஈழத்தமிழர் மீது அதீத பாசம் கொண்டவர் போல சில அறிக்கைகளை வெளியிட்டார். விடுதலைப்புலிகள் வேறு ஈழத்தமிழர்கள் வேறு என்று 1991-ஆம் ஆண்டுக்கு பின்னர் தொடர்ந்தும் கூறிவருகிறார். அத்துடன் பயங்கரவாதத்திற்கு தமிழகத்தில் இடமில்லை எனவும், பிரிவினைவாதம் பேசினாலே அதிமுக சும்மா இருக்காது என்று கூறுகிறது அதிமுகவின் தேர்தல் விஜ்ஜாபனம். ஐக்கிய நாடுகள் சபையே பயங்கரவாதம் என்றால் என்ன என்று அர்த்தம் தெரியாமல் அலையும்போது ஜெயலலிதா போன்றவர்கள் கூறும் அர்த்தங்கள் மக்களை ஏமாற்றவேதான் என்பது உண்மை. எது எப்படியாயினும், தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளும் ஈழத்தமிழரின் விடயத்தில் கடுகளவேனும் அக்கறை கொள்ளவில்லை.

ராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன?

அனைவருமே குழம்பிய தண்ணீருக்குள் மீன் பிடிப்பவர்களே. அதிகமான மக்கள் எதை நினைக்கிறார்களோ அவர்களின் வாக்குகளை தமதாக்க வேண்டும் என்கிற மனப்பாங்குடன் களம் இறங்குபவர்களே அரசியல்வாதிகள். தமிழக அரசியல்வாதிகள் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஈழத்தமிழரின் தேசிய விடுதலைக்கு தீர்வு வந்துவிடுமென்றோ அல்லது திமுக ஆட்சிப்பீடம் மறுபடியும் ஏறினால் ஈழத்தமிழர்கள் அவர்களின் தாயகத்தில் கண்ணியத்துடன் வாழ இந்திய மத்திய அரசின் உதவியுடன் நடவடிக்கை எடுப்பதென்று சொல்வதெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகமே.

திமுக துவங்கிய பின், 1957-ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தன் அரசியல் பயணத்தைத் துவங்கிய கலைஞர், இதுவரை 11 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஐந்து முறை தமிழகத்தையே ஆண்டாலும், சொந்த தொகுதியில் இதுவரை போட்டியிட்டதில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக, வரும் சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கலைஞரின் அரசியல் வாழ்வில் மக்களுக்கு செய்ததை விட தனக்கும் தனது குடும்பத்திற்கும் செய்ததே அதிகம். பொதுப் பிரச்சனைகள் என்றால் ஆரப்பாட்டங்கள் செய்வதும், பேருந்துகளை உடைப்பதும், புகையிரதப் போக்குவரத்தை நிறுத்தும் போராட்டங்களை செய்வதும், உண்ணாவிரதமிருப்பதும் மற்றும் கருப்புக்கொடி காட்டும் போராட்டங்களை செய்வதுமாகவேதான் மக்களின் ஆதரவை இன்றுவரை கலைஞர் நிலைநிறுத்தியுள்ளாரே தவிர மக்களுக்கென்று விரல்விட்டு எண்ணக்கூடிய காரியங்களைத் தவிர அனைத்துமே அவர் குடும்பம் சார்ந்ததாகவே இருந்துள்ளது.

முதன் முதலில் 1957-ஆம் ஆண்டு குளித்தலையில் போட்டியிட்ட கலைஞர், 8,296 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1962-ஆம் ஆண்டு தஞ்சாவூரில் போட்டியிட்டு, 1,928 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1967-ஆம் ஆண்டு சைதாப்பேட்டையில் போட்டியிட்டு, 20,482 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  1971-ஆம் ஆண்டு சைதாப்பேட்டையில் போட்டியிட்டு, 12,511 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1977-ஆம் ஆண்டு அண்ணாநகரில் போட்டியிட்டு, 16,438 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1980-ஆம் ஆண்டு அண்ணாநகரில் போட்டியிட்ட இவர், 699 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1989-ஆம் ஆண்டு துறைமுகத்தில் போட்டியிட்டு, 31,991 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1991-ஆம் ஆண்டு துறைமுகத்தில் போட்டியிட்டு, 890 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1996-ஆம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, 35,784 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2001-ஆம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட இவர், 4,834 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2006-ஆம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, 8,526 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலவை உறுப்பினராக இருந்ததால், 1984-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இப்படியாக 11 தடவைகள் போட்டியிட்டு வென்றதுடன், ஐந்து தடவைகள் முதல்வராகவும் இருந்துள்ளார் கலைஞர்.

கலைஞரை எப்படியேனும் வென்றுவிட வேண்டுமென்று கங்கணம் கட்டி செயற்படும் ஜெயலலிதாவும், சிறீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். ஜெயலலிதா இதுவரை ஐந்து தேர்தல்களை சந்தித்துள்ளார். 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலைத் தவிர, நான்கு தேர்தலிலும் வெற்றி பெற்றார். இவரும் மாபெரும் ஊழல்களைச் செய்து மாபெரும் “மகா ஊழல் ராணி” என்கிற பட்டத்தை பெற்றவர்தான். தமிழக மக்கள் இவைகளையெல்லாம் மறந்துவிட்டார்கள். ஏதோ சிலவற்றை இலவசமாகக் கொடுப்பதாக வாக்குறுதியளித்துவிட்டாலே போதும் அவர்களின் பின்னால் சென்றுவிடுவார்கள் தமிழக மக்கள்.

முதன் முதலாக ஜெயலலிதா தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் 1989-இல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஈரோடு மாவட்டம், காங்கயம் தொகுதியில், 1991-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தர்மபுரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த சுகவனம் 9,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில், 2002-ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.(அனலை நிதிஸ் ச. குமாரன்)