பிரான்சில் அர்ஜெண்டன் நகரில் பிரதம விருந்தினர்களாக ஏப்ரல் 29 முதல் மே 2 வரை சிறீலங்கா தேசமும், அதன் இரத்தக்கறை ஆட்சியாளர்களும் நிறம் பூண்டிருக்கும்.  2009 ஏப்ரல் மாதம் இந்த காலப்பகுதி என்றும் மறக்க முடியுமா?

சிறிலங்கா என்ற சிங்கள தேசம் எம் மண்ணில், எமது மக்கள் உறவுகள் மீது, விமானமூலமும், எறிகணைகளாலும் வீசப்பட்ட விசக்குண்டினாலும், எரிகுண்டுகளாலும், கொத்து கொத்தாக விழுந்து சிதறிக் கொண்டிருந்த நேரம்,

நாம் இரவு பகல் பாராமல் தெருவே எமது வாழ்வாக மாற்றி இருந்த காலம்,

உலக புவியல் அரசில் சிக்குண்ட எமது மக்களின் விடுதலை போராட்டம் சிலரின் சதிவலைக்குள்ளும் சிக்குண்டு எமது மக்களின் விடுதலை அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரம்,

உணர்வு மேலோங்கி எம்மவர் சர்வதேசத்திடம் எமது மக்களை காப்பாற்றுங்கள் என்று கேட்டு தாய்த்தமிழ் நாட்டிலும், ஐ.நா முன்பும் தம்மை நெருப்பில் மூட்டி நீறாகிப்போன நேரம்.

அன்று எமது உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது நின்றுவிட்டு இன்று தமது தவறுகளை உணர்ந்து கொள்ள தொடங்கிய இந்த புவியியல் சார்நாடுகள் சிறிலங்காவில் நடைபெற்ற போர் குற்றங்களுக்குகான புலனாய்வுகளை உடன் செய்யவேண்டும் என்று பிரித்தானிய, பிரான்சு போன்ற ஐரோப்பிய நாடுகள் முன் நிற்கிறது.

அமெரிக்கா கூட அதை வலியுறுத்துகின்றது. உலகத்தில் உள்ள அனைத்து மனித நேய அமைப்புகள் அதை வலியுறுத்துகின்றன.

தாய் தமிழ் நாட்டில் இருந்து பல அமைப்புக்கள் தமிழர்களின் விடுதலைக்க பல வழிகளிலும் இதற்கு குரல் கொடுக்கின்றன, போராடுகின்றன.

எங்களுக்கு இல்லாத அக்கறையை இவர்களுக்கு இருக்கிறது?

ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் ?

இன்று சர்வதிகார அரசாட்சிக்கு எதிராக மக்கள் பல நாடுகளில் போராட்டம் செய்துகொண்டிருகிறார்கள். துனிசியாவில் தொடங்கி எயமேன், சிரியா, லிபிய என்று பல நாடுகளில் பரந்து மக்கள் விடுதலை வேட்கையில் நின்றும், வாழ்ந்து கொண்டிருகிறார்கள்.

நாம் எமது சகோதரர்களின் இரத்தத்தால் சிவந்த நிலத்தில் வாழ்ந்தும் இருந்தும் வந்தவர்கள், அங்கு இரத்த ஆறு ஓடஓட இங்கு நாம் அழுகையோடும், அவலக்குரலோடும், அந்தரித்தவர்களாக நடுநடுங்கும் குளிரிலும், மழையிலும், தெருக்களிலும், சந்திகளிலும் நின்று போராடியவர்கள்.

1948ம் ஆண்டு முதற்க்கொண்டு எமது மூதாதையர் நாம் சுதந்திரமான, நிம்மதியான, விடுதலையான மக்களாக வாழ வேண்டும் என்று எடுத்த அனைத்து போராட்டம், இன்று பல சதி வலைக்குள் சிக்குண்டு இருக்கிற இந்நேரத்தில் விடுதலை பெற்ற மக்களுக்கு வழிகாட்டியாக வரலாற்றில் உறுதியோடு, நம்பிக்கையோடு போராடினால் விடுதலையை அடையலாம் என்பதற்கு ஒரு வரலாற்றுச் சான்றாக தென்ஆபிரிக்க போராட்டம் அமைகின்றது.

தென் ஆபிரிக்க போராட்டம் எவ்வாறு வெற்றி அடைந்தது?

ஆபிரிக்க நேஷனல் காங்கிரசு அன்று காலனித்துவ ஆட்சிகளுக்கு எதிராக ஆயுதப்போராட்டம் செய்தார்கள்,

உலகத்தில் பல நாடுகளால் அவர்கள் பயங்கரவாதிகள் என்றும், பயங்கரவாதப் போராட்டமாக முத்திரை குத்தப்பட்டு ஒதிக்கி வைக்கப்பட்டார்கள்.

அவர்களின் தலைவர் நெல்சன் மண்டேலா பயங்கரவாதியாக கூறப்பட்டார், சிறையில் அடைக்கப்பட்டார்.

அதனால் அந்த மக்களின் உயர்வான போராட்டம் நின்று விடவில்லை, வடிவங்கள் மாறியது, செயல் முறைகள் மாறியது, அவர்களின் போராட்டம் உலகமயப்படுத்தப்பட்டது.

அன்றைய ஆட்சியாளர்களின் தென் ஆபிரிக்கா நாட்டைப் புறக்கணிக்கும் போராட்டம் உலகெங்கும் பரவியது, பல மையங்களில் தென் ஆபிரிக்க அரசு புறக்கணிக்கப்பட்டது.

விளையாட்டு துறையில் இருந்து வியாபாரத்துறை, சர்வதேச அரசியல் அமர்வு, அமைப்புகள் என்று பலரால், பல வழிகளாலும் அவர்கள் புறக்கணிக்க பட்டார்கள்.

இதற்கு முக்கிய காரணமாய் இருந்தவர்கள் புலம் பெயர்ந்து இருந்த ஆபிரிக்க மக்களாகும், அந்த புலம்பெயர்ந்த மக்கள் தம் மண்ணை மறக்காமல், உலகத்தில் வாழும் விடுதலை வேண்டி நிற்கும் மக்களை இணைத்துக் கொண்டார்கள்,

தமது போராட்டம் சர்வாதிகாரத்துக்கு எதிரானது என்றும், நியாயமான உரிமைக்கான மக்களின் ஜனநாய போராட்டம் என்று உலகமெங்கும் உணர்த்தினார்கள். உலக மக்களை தம் பின்னால் அணிவகுக்க செய்தார்கள்,

உலக நாடுகளின், மக்களின் பலம் பெருகியதாலும் பல நாடுகளின் அழுத்தங்களுக்கு முன் நின்று பிடிக்க முடியாமல் தென் ஆபிரிக்கா, செயல்வடிவங்களை மாற்றியதோடு அரசியலில் மாற்றங்களும் பல உருவானது.

இந்த வகையில் சர்வதேச கடந்த கால வரலாற்று ஒழுங்கில் உலகத்தில் இன்று பலர் எம்முடன் நிற்க தயாராக இருக்கிறார்கள். சர்வதேசத்தில் ஒரு பரிநாம மாற்றமும் உருவாக்கி வருகிறது.

இதனை நாம் எமக்கு சாதகமாக பயன்படுத்தி எம்மை அழிதவர்களே அதற்கு தண்டனையாக எமது மக்களுக்கு விடுதலையை தேடி கொடுப்பவர்களாக இருக்க வைக்க வேண்டும் முடியும்.

அதுதான் அவார்களுக்கு தருமத்தின் பெயரில் கொடுக்கப்படும் மிகபெரிய தண்டனையாக அமைய வேண்டும்.

இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

எவ்வாறு சிறீலங்காவை புறக்கணிக்கப் போகிறோம்?

ஐரோப்பிய யூனியன் சிறீலங்காவிற்கான விசேட வரி சலுகைகளை நிறுத்தியது, ஆனால் நுகர்வோர் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? இன்றும் சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களையே வாங்கிக் கொண்டு இருக்கிறோம்.

• லியோன்ஸ் பீர், லியோன்ஸ் ஸ்டுட் (Lions Beer, Lions Stout) போன்ற குடிவகைகள் ,

• நெக்டோ, ஆரஞ்சு பார்லி (Necto Orange Barley) லெமன் பப் (Lemon Puff) என்று இனிப்பு நிறைந்த பொருட்கள்,

• எமது சுகாதாரத்துக்கு அழிவை உருவாக்கும் பொருட்கள், அத்துடன் ஊறுகாய், தேயிலை அரிசி,

• சிறீலங்கா விமான சேவையில் பயணம் போன்றன

நாம் சிந்திக்க வேண்டிய நேரமிது.

இத்தனை பொருட்களுக்கும் மாற்று பொருட்கள் எம்மிடம் இருக்கும் போது நாம் ஏன் எம்மை மாற்றி கொள்ள முனைகின்றோம் இல்லை?

இன்று ஐரோப்பா நாடுகளும், அரசுகளும் எமக்கு துணை நிற்கும் போது நாம் ஏன் அவர்களுடன் இருக்க முனைகின்றோம் இல்லை?

வறுமையும், வலிமையும் குறைந்த நாடுகளுக்கு உதவும் உலக ஒழுங்கில் சிறீலங்கா தேசமும் இருந்ததால் மனிதாபிபமான நோக்கில் வரிச்வலுகையை வழங்கியது. அந்த சலுகையையும், எமது இரத்தமும், வியர்வையும், நெருப்பைத்திண்ட எமது வரிப்பணத்தில் எம்மையும் எமது இனத்தையும் அழிக்க பயன்படுத்திக் கொண்டது சிங்கள அரசு.

உலகத்தின் எதிர்பார்ப்பிலும், சனநாயக போராட்டத்திற்கான மானசீக அங்கீரத்தோடு உருவாக்கம் கண்ட தமிழீழ மக்கள் பேரவை ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு தமிழர்களின் விருப்பத்தை ஜனநாயக வழியில் எடுத்து சொல்லி விசேட வரி சலுகைகளை நிறுத்த வேண்டும் என்ற நியாயமான அழுத்தம் கொடுக்கப்பட்டதாலும், அதே நேரத்தில் ஐரோப்பிய அரசியலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவும், அவர்களும் அதை நிறுத்தியிருந்தார்கள்.

இதேபோன்று பல அரசியல் செயல் திட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கிற அதே நேரத்தில் பல மனித நேய அமைப்புகள், பல கிறிஸ்தவ அமைப்புகள், சிங்கள மக்கள் அமைப்புகள், சிங்கள பத்திரிகையாளர்கள், சிறீலங்காவின் ஆட்சியாளர்களுக்கு எதிராக பல வரைவுகளையும், உண்மைகளையும் உலக அரசுகளிடம் அளித்து கொண்டிருகிறார்கள்.

இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

சிறீலங்காவில் இருந்து தருவிக்கப்படும் பொருட்களை புறக்கணிப்போம்.

அடுத்து பிரான்சில் 61ம் இலக்க அர்ஜெண்டன் நகருக்கு எதிர்வரும் 29ம் நாள் விருந்தினர்களாகவும், ஒரு வார கொண்டாட்டம் நடாத்த வருகை தர இருக்கின்ற சிறீலங்கா நாட்டு பிரதம விருந்தினர்கள், பயங்கரவாதிகளான தமிழர்களின் விடுதலையை அழித்தது சரியென்றும், சிறீலங்கா ஒரு சொர்க்க புரி நாடென்றும், அது தமக்கே சொந்தம் என்றும் (ஆனால் இன்று உலக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவின் மூத்தகுடி திராவிடர்கள்( தமிழர்கள்) கிறிஸ்துவுக்கு முன் 9500 வருடம் கொண்ட பாரம்பரிய மக்கள் என்றும், அதில் ஈழத்தமிழர்களுக்கு 2000 ஆண்டுக்கு முன் ஈழம் என்றதொரு நாடு இருந்ததும் இன்று கூறுகிறார்கள்)

அப்படிப்பட்ட நாம் அந்த பூர்வீக நாட்டில் இரண்டாம் தர பிரசைகளாகக் கூட இல்லாமல் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட அடிமைகளாக! இருக்கின்றோம்.

அன்பார்ந்த எமது மக்களே! என்ன செய்வோம் இதற்காக?

ஏப்ரல் 9, 17, 23 ம் திகதிகளில் அர்ஜெண்டன் மக்களுக்கும், அரசியல் கட்சியினர், அரச சார்பற்ற அமைப்புகள் ஆகியோருக்கு எவரை அவர்கள் நல்லவராக, கொலை செய்யாத, இரத்தக்கறை படியாத சனநாயகத்தை மதிக்கின்ற ஒரு நாடாக நினைத்து நட்போடு அழைக்கின்ற சிறீலங்கா நாட்டைப்பற்றியும், கிட்லருக்கு அடுத்ததாக 21ம் நூற்றாண்டில் ஒரு மாபெரும் இன அழிப்பை செய்த நாடு என்பதையும், கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தொடர்ந்து வரும் சிங்கள ஆட்சியாளர்கள் செய்து வருவதையே இன்றும் சர்வதிகாரிகள் சிறீலங்காவில் செய்து வருவதையும், ஜனநாயகம், மனித நேயம் எதுவும் அந்த மண்ணில் கிடையாது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவோம்.

ஏப்ரல் 29 ம் திகதி அந்த ஊரில் எம்மவர் முழு அளவில் சென்று சிறீலங்கா அரசுக்கெதிரான புறக்கணிப்பு போரட்டத்தை செய்வோம்.

அவர் செய்யட்டும், அவை செய்யட்டும் என்று நாம் தூரநோக்கு சிந்தனையின்றி கடத்தும் ஒவ்வொரு நேரமெல்லாம் எம் மண் சிங்கள மயப்படுத்தப்பட்டு விடும்.

சிறீலங்காவில் இனிப்பிரச்சனையில்லை என்றும் சிங்கள அரசு இன்று திட்டமிட்டு செய்து வரும் பொய்பிரச்சாரத்தை காட்டி தற்பொழுது ஐரோப்பாவில் அரசியல் அடைக்கலம் கோரியவர்கள் நிராகரிக்கப்படும் இந்த நேரத்தில், உண்மையும், அங்குள்ள உயிராபத்தை சொல்ல நாம் தயங்கினால், ஐரோப்பிய அரசுகள் எடுக்கும் நடிவடிக்கைகளுக்கும், எம்மவர்களுக்கு ஏற்படும் துன்பத்துக்கும் காரணமாக தமிழர் நாம் இருந்ததுவிடப் போகின்றோமா?

மே 1 உலக தொழிலாளர் தினம், விடுதலை தேடி நிற்கும் மக்கள் அனைவரும் மக்கள் போராட்டத்தின் வலுவை உலகிற்கு எடுத்து கூறும் நாள்.

மே 1 எமது தேசிய வலுவையும், உழைப்பின் வலுவையும் உலகிற்கு நாம் காட்டும் நாள், தொழிலாள மக்களும், உலக மக்களின் விடுதலைக்காக எல்லோரும் ஒன்றாக எழுந்து நிற்கும் நாள். எமது தேசிய உணர்வுகளுடன் அணிவகுத்து செல்லும் நாள்.

மே 18 , எமது தாய் மண்ணையும், எம் மானத்தையும் காக்க போராடிய மக்களையும், மாவீர்களை, ஒரு இன மக்களின் ஜனநாய உரிமையை, மனித உரிமை சாசனத்தையே மதிக்காமல் அழித்த நாள்.

அந்த தினம் தமிழர்களின் இதயங்களில் ரணவலியை தந்த நாள்.

 உயிர்நீத்த, காணாமல் போன 146,679 மக்களையும் நினைவு கூரும் நாள்.

அன்று பிரான்சில் அவர்களின் நினைவுக்கல்லில் நினைவுச்சுடர் ஏற்றுவோம்.

 தாயை இழந்தவர், தந்தை இழந்தவர், தாரத்தை இழந்தவர், பிள்ளையை இழந்தவர் அண்ணனை, அக்காவை, தம்பியை, உறவை, ஊரவனை உடமையை இழந்த எல்லோரும் தமது உறவுகளின் படங்களை கைகளில் ஏந்தி மாபெரும் ஊர்வலமாக இந்த உலக நீதி மன்றங்களிடம் நீதி கேட்டு செல்வோம்.

 இது உரிமையுடைய ஒரு இன மக்களின் ஜனநாயக போராட்டம்,

 எமது போராட்டம் மனித உரிமை சாசனத்துக்கு அமையவே நடாத்தப்படும் போராட்டம்.தமிழர்கள் நாம் உரிமைக்காக ஒன்றாக, ஒழுங்கிலே நிற்கின்றோம் என்பதை எடுத்துக்காட்டும் போராட்டம்.

உலக மக்களுடன் சேர்ந்து முன்னெடுக்கும் போராட்டம்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்(நன்றி சங்கதி  )