“விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நிறுத்தும் வகையில் அனைத்துலக சமூகம் தன்னாலான அழுத்தத்தைப் பிரயோகித்தது. ஆனால் புலிகள் அமைப்பு மற்றொருமுறை மீண்டெழுவதை விரும்பாத சிறிலங்கா அதிபர் ராஜபக்ச, அந்த அழுத்தங்களுக்கு அடிபணியாததால் தான், சிறிலங்காவில் தலையீடுகளை மேற்கொள்ள மேற்குலகம் தயங்கியது. “ இவ்வாறு கொழும்பிலிருந்து வெளியாகும் ‘சண்டே ரைம்ஸ்‘ வார ஏட்டில் நெவில் டி சில்வா என்ற சிறிலங்கா இராசதந்திரி எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுரையை ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்தவர் தி. வண்ணமதி. சிறிலங்காவிலும் சிறிலங்காவிற்கு வெளியேயும் வாழுகின்ற தமிழர்களின் மனங்களில் கோபம் அல்லது ஏமாற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது. சுதந்திரத் தமிழ் தாயகமாம் ‘ஈழம்’ என்ற தங்களது கனவினை மேற்கு நாடுகள் ஆதரித்து நிற்கும் எனத் தமிழர்கள் கருதியிருக்க, அந்த நாடுகள் போரின் இறுதியில் தமிழர்களுக்குத் தோள் கொடுக்காமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தன. லிபியப் போராளிகளுக்கு வழங்கி வரும் அதே உதவிகளை மேற்குலகம் தமிழர்களுக்கு மறுத்திருந்தது. இந்தச் செய்தி கடந்த வாரம் மின்னஞ்சல்களில் வழியாகவும் ஏனைய தொடர்பாடல் ஊடகங்கள் வழியாகவும் அனைத்துலக ரீதியில் பரவலாகப் பரிமாறப்பட்டிருக்கிறது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினைக் காணுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் செயலிழந்து போன நிலையில், விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க வேண்டும் என்ற முடிவினை நான்கு ஆண்டுகளுக்கும் முன்னர் சிறிலங்கா அரசாங்கம் உறுதியுடன் எடுத்திருந்தது. இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஐக்கிய அமெரிக்காவிலும் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினைக் காப்பதற்கு மேற்கு நாடுகள் அல்லது ஐ.நா தலையிடும் என்ற நம்பிக்கை தமிழர்கள் மத்தியில் அதிகம் இருந்திருக்கிறது. படையினரின் தொடர் நடவடிக்கையினைத் தொடர்ந்து, நாட்டினது வடக்குக் கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு மூலையில் முடக்கப்பட்டிருந்த நிலையில், தமது துயர்துடைக்கும் வகையில் அனைத்துலக சமூகம் தலையிடப் போகிறது என்ற எண்ணம் 2009ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் தமிழர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்டது. புலம்பெயர் தமிழர்கள் செறிந்து வாழும் மேற்கு நாடுகளினது நகரங்களில் அவர்கள் தொடரான போராட்டங்களை நடாத்தியதோடு தமிழர்களின் வாக்குகளில் தங்கியிருக்கும் மேற்கு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் ஊடாகவும் அவர்கள் தமக்கான ஆதரவினைத் தேடினர். இதனால் எந்த நன்மையும் இந்தத் தமிழர்களுக்குக் கிட்டிவிடவில்லை. இந்த நிலையில் ஐ.நாவில் கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானத்திற்கு அமைய லிபியாவின் முகமர் கடாபி மீது மேற்கு நாடுகள் தாக்குதலைத் தொடுத்திருக்கும் அதேநேரம், லிபியக் கிளர்ச்சியாளர்களுக்கு உதவும் ஒரு நிலைமையினை தற்போது புலம்பெயர் தமிழர்கள் காணுகிறார்கள். போரின் இறுதி நாட்களில் சிறிலங்காவினது பிரச்சினையில் மேற்குலகம் தலையிட வேண்டுமெனக் கோரி பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் தொடரான, அளவில் பெரிய மக்கள் போராட்டங்களை நடத்தியிருந்தார்கள். ஆனால் இன்று குறித்த இந்த இரண்டு நாடுகளும் தான் லிபியத் தலைவர் கடாபி மீதான மேற்குலகினது படை நடவடிக்கையினை முன்னின்று நடத்துகிறார்கள். இது புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மிகப்பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. புலம்பெயர் தமிழர்களுடன் நட்புடனிருக்கும் மேற்கு ஊடகங்கள் வாயிலாக சிறிலங்காவில் கட்டுக்கடங்காத வகையில் பொதுமக்கள் கொல்லப்படுவதாகவும் மனிதப் படுகொலை நிகழ்த்தப்படுவதாகவும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்ட போது சிறிலங்கா தண்டிக்கப்படலாம் என அனைத்துலக நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் கருதினர். ஆனால் நிச்சயமற்ற இந்தக் குற்றச்சாட்டுக்கள் புறம்தள்ளப்பட்டன. இருப்பினும் மேற்கு நாடுகள் ஐ.நாவிடம் ஓடிச் சென்று என்ன செய்வது எனக் கேட்கும் அளவிற்கு சிறிலங்காவில் பொதுமக்கள் வாழ்வு அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கிறது என வாதிடப்பட்டது. சிறிலங்காவினது வடகிழக்குக் கரையோரத்திலுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த குறுகிய நிலப்பரப்பில் கடற்கரையோரமாக அமைந்திருந்த தற்காலிக மருத்துவமனையில் கால் கைகளை இழந்தவர்கள் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதை லண்டனிருந்து கொண்டே ஊடகவியலாளர்கள் கண்டார்களாம். சிறிலங்கா அரசபடையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களால் அல்லது வான்வழித் தாக்குதல்களின் விளைவு தானாம் இது என லண்டனிலுள்ள ஊடகவியலாளர்கள் கூறினர். நாற்பதாயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டனர் என ஐ.நா அதிகாரிகள் சிலர் கதை விட்டனர். ஆனால் பின்னர் இந்தத் தொகையினை ஐ.நாவே மறுத்திருந்தமை வேறுகதை. இதுபோல பெருந்தொகையில் மக்கள் கொல்லப்பட்டார்கள் எனக் கூறுவது தான் சிறிலங்கா தனது படை நடவடிக்கையினை இடை நிறுத்துவதகு அல்லது மேற்கு தலையிடும் நிலைமையினை ஏற்படுத்துவதற்குத் தேவையானது என இவர்கள் கருதினர். இந்தநிலையில் சிறிலங்காவினது விடயத்தில் மேற்குலகம் தலையிடும் என விடுதலைப் புலிகளும் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களும் தவறாக முடிவெடுத்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. 2009ம் ஆண்டு ஏப்பிரல் மற்றும் மே மாதங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கையினை அரச படையினர் தீவிரப்படுத்தியிருந்த நிலையில் அதிபர் ராஜபக்சவினது அரசாங்கத்திற்கு எதிராக அனைத்துலக ரீதியில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதும் ஏன் மேற்குலகம் அமைதியுடன் இருந்தது என்பதை விளக்குவதற்கு அவதானிப்பாளர்கள் வேறு பல விளக்கங்களைத் தருகிறார்கள். பிரித்தானியப் நாடாளுமன்றில் இருக்கும் தமிழர் ஆதரவுப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பரப்புரையில் தங்களுக்கே நம்பிக்கை இருக்கவில்லையாம். பிரித்தானியாவினது வெளிவிவகாரச் செயலர் டேவிற் மில்லிபாண்டினது சிறிலங்கா தொடர்பான கரிசனைகள் உள்நாட்டு அரசியலில் பால் அமைந்ததேயன்றி வேறெதுவுமில்லை என லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அமெரிக்க இராசாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பிய இரகசியச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாக விக்கிலீக்ஸ் கூறுகிறது. பிரித்தானியாவில் அடுத்த பொதுத்தேர்தலுக்காகத் தயாராகி வரும் தொழிற்கட்சி தோல்வியிலிருந்து தப்புவதற்கு அங்கு வாழும் தமிழர்களின் வாக்குகளிலேயே அதிகம் தங்கியிருக்கிறது. அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் மீதான மேற்குலகின் தலையீடானது அவர்களது சொந்த நலன்களை அடிப்படையாகக் கொண்டதே என அவதானிகள் கூறுகிறார்கள். மேற்குறித்த இந்த நாடுகளில் சனநாயகத்தினை நிலைநாட்டுதல் என்பதற்கு அப்பால் தமக்கான மசகெண்ணெய் விநியோகம் தங்கு தடையற்ற வகையில் நியாய விலையில் கிடைப்பதையே இந்த மேற்கு நாடுகள் விரும்புகின்றன. மத்திய கிழக்கிலிலுள்ள குறிப்பிட்ட சில நாடுகளுடன் மேற்குலகம் கொண்டிருக்கும் உறவின் தன்மை மேற்குறித்த உண்மையினை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. சிறிலங்காவிடம் எண்ணெய் வளம் இல்லை- ஈராக்கிலும் லிபியாவிலும் உள்ளதைப் போன்று எந்த வளமும் இல்லை. மேற்கு நாடுகள் ஈராக் மற்றும் லிபியாவில் தலையிடுவதற்கான காரணம் வேறு எதுவுமில்லை, அங்குள்ள குறையாத எண்ணெய் வளம்தான். இந்த நாடுகள் மீதான தலையீட்டினை நியாயப்படுத்தும் வகையில் ஐ.நாவின் பாதுகாப்புச் சபை ஊடாக அதற்கான அங்கீகாரத்தினைப் பெற முனைந்திருந்தால் ஒன்று அல்லது இரண்டு நிரந்தர உறுப்பு நாடுகள் லிபியா மீதான தாக்குதல் தீர்மானத்தினை எதிர்த்திருக்கும். ஐ.நாவின் பாதுகாப்புச் சபை பிளவடைந்திருப்பதைக் காட்டும் நிலையினை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தினை எதிர்கொள்வதற்கு இவர்கள் தயாராக இருக்கவில்லை. இந்தியாவினது உடன்பாடின்றி மேற்குநாடுகள் எந்தவகையான செயற்பாட்டிலும் இறங்காது என ஆய்வாளர்கள் வாதிடுகிறார்கள். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா முதன்மையானதொரு சக்தியாகத் திகழ்கிறது. ‘இந்திரா காந்தியிசக் கோட்பாடு’ என அறியப்பட்ட கொள்கையின் அடிப்படையில் சிறிலங்கா தனது செல்வாக்கிற்கு உட்பட்ட பிராந்தியம் என்றே இந்தியா கருதுகிறது. 1987ம் ஆண்டு சிறிலங்காவில் நேரடித் தலையீட்டினை மேற்கொண்ட இந்தியா தனது விரலைத் தானே சுட்டுக்கொண்டது எனலாம். விடுதலைப் புலிகள் தோல்வியின் விளிம்பில் இருந்ததொரு தருணத்தில் இந்தியா தலையிட்டு நிலைமையினை மாற்றியது. பின்னொரு நாளில் சமரிடுவதற்காக இந்தியா பிரபாகரனைக் காத்தது எனலாம். ஈற்றில் இந்திய இராணுவத்திற்கு எதிராகவே திரும்பிய பிரபாகரன் 1200 இந்தியப் படையினரைக் கொலை செய்ததோடு மூவாயிரத்திற்கும் அதிகமானோரைக் காயப்படுத்தியிருந்தார். இது இடம்பெற்ற ஒரு சில ஆண்டுகளின் பின்னர் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இலக்கானார். விடுதலைப் புலிகளைப் பாதுகாப்பதற்கான சிறிலங்கா மீதான இந்தியத் தலையீட்டுக்குக் கட்டளை இட்டவர் ராஜீவ்காந்தி தான். சிறிலங்காவில் இந்தியா பெற்றுக் கொண்ட இந்தக் கசப்பான அனுபவத்தின் அடிப்படையில் அது தகுந்த பாடத்தினைக் கற்றிருந்தது. நிலைமையினைச் சமாளிக்கும் வகையில் சிறிலங்கா மீதான அழுத்தத்தினை அதிகரிக்க வேண்டும் என்றும் சிறிலங்காவுடனான இருதரப்பு இராசதந்திரச் செயற்பாடுகளை அதிகரிக்குமாறும் இந்தியா கூறியிருந்ததாக புதுடில்லியிலிருந்து அமெரிக்க இராசாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட இன்னனொரு இரகசியச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகள் தொடர்ந்த பயங்கரவாத நடவடிக்கைகளின் விளைவாக அனைத்து இனங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் காந்தியின் அந்த மூன்று குரங்குகளைப் போல -நல்லதைப் பார், நல்லதைக் கேள், நல்லதைப் பேசு- அனைத்துலக சமூகம் செயற்பட்டது. போரை நிறுத்தும் வகையில் தன்னாலான அழுத்தத்தினைப் பிரயோகித்தது. ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டுமொருமுறை மீண்டெழுவதை அதிபர் ராஜபக்ச விரும்பவில்லை. அதிபர் ராஜபக்ச மேற்கினது அழுத்தத்திற்கு அடிபணியாமல் செயலாற்றியமைதான் மேற்கு சிறிலங்காவில் தலையீடுகளை மேற்கொள்ளத் தயங்கியதற்கான காரணம். [இந்தப் பத்தியின் எழுத்தாளர் தாய்லாந்தில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் ஓர் இராசதந்திரியாகப் பணியாற்றுகிறார்]