தமிழ் மக்களின் விடுதலைக்காக உரிமைக்காக போராடியவர்கள் இன்று அந்த சமூகத்தால் கைவிடப்பட்ட பரிதாபநிலை வடகிழக்கு பிரதேசத்தில் காணப்படுகிறது. வடகிழக்கில் யுத்தம் முடிந்து தடுப்பு முகாம்களிலிருந்து வெளியேறி சமூகத்துடன் இணைந்து வாழ முற்பட்டிருக்கும் முன்னாள் போராளிகளில் பெரும்பாலானோர் விரக்கி நிலையிலேயே வாழ்கின்றனர். இந்த சமூகத்திற்காகவா நாம் போராடினோம் என்று வெளிப்படையாக பேசும் அளவிற்கு அவர்களை தமிழர் சமூகம் விரக்தியடைய வைத்திருக்கிறது.

 
முக்கியமாக பெண்போராளிகளும் ஊனமுற்ற போராளிகளும் மிகக்கடுமையான விரக்திநிலையில் காணப்படுகின்றனர். சிறிலங்கா அரசாங்கம் எங்களுக்கு வாழ்வு தரும் என நாங்கள் நம்பவில்லை, ஆனால் தமிழ் சமூகத்தை பெரிதும் நம்பியிருந்தோம். இந்த இனத்தின் விடுதலைக்காகத்தான் நாங்கள் போராடினோம். ஆனால் நாங்கள் இந்த சமூகத்தால் கைவிடப்பட்டிருக்கிறோம் என வாளைச்சேனை குமாரவேலியர் கிராமத்தை சேர்ந்த 48வயதுடைய முன்னாள் போராளி ஒருவர் தினக்கதிருக்கு தெரிவித்தார். . இவர் இரு கண்களையும் இழந்துள்ளார். 4பிள்ளைகள், படிக்கவேண்டிய வயதில் பிள்ளைகள் கூலிவேலை செய்தே தன்னை பராமரித்து வருவதாக அவர் கூறினார்.

இயக்கம் இருந்த வேளையில் எங்களுடன் நெருங்கி பழகியவர்கள் இன்று திரும்பி கூட பார்ப்பதில்லை என்றார் இருகால்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவர்.

வடக்கு கிழக்கில் பொது வாழ்வில் ஈடுபட முனையும் விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகள் திருமணம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் பெரும் சவால்களை எதிர்கொண்டு நிற்கிறார்கள் எனத் தொண்டு நிறுவனப் பணிப்பாளர்கள் கூறுகின்றார்கள்.

�விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை சமூகம் ஆக்கபூர்வமான வகையில் நோக்கவில்லை� என தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறை மாவட்டத்தினைச் சேர்ந்த தயா தங்கராசா கூறுகிறார். கலாசார மற்றும் சமூக ரீதியிலான தடைகள் தான் இந்த முன்னாள் போராளிகள் சமூகத்துடன் ஒன்றிணைவதற்கான பெரும் தடையாக இருக்கிறது என்கிறார் தயா தங்கராசா.

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி களுக்கான திருமண வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே இருக்கின்றன என தென்னிந்தியத் திருச்சபையினைச் சேர்ந்த செல்வநாயகம் செல்வேந்தன் என்ற தொண்டு நிறுவனப் பணிப்பாளர் கூறுகிறார்.

�தமிழ்ச் சமூகத்தினைப் பொறுத்தவரையில் அது பாரம்பரியப் பண்புகளைக் கொண்டது. முன்னாள் பெண் போராளிகளைத் தங்களது பிள்ளைகள் திருமணம் செய்வதைப் பெற்றோர் விரும்பவில்லை� என அவர் தொடர்ந்தார். தமிழ்ச் சமூகத்தினர் திருமணத்தினை மிகவும் முதன்மையானதொரு சடங்காகக் கருதுவதாக அவர் குறிப்பிட்டார். முன்னாள் போராளிகளை மீளவும் சமூகத்துடன் இணைப்பது தான் சவால் நிறைந்த பணியாக இருக்கிறது என கொழும்பினைத் தளமாகக் கொண்ட பெண் உரிமைச் செயற்பாட்டாளரான சுனிலா அபயசேகர தெரிவித்தார்.

�திருமணத்திற்குக் குறைந்த முக்கியத்துவம் கொடுத்த பெண்களாகவே ஆயுதங்களைக் கையில் எடுத்த அந்தப் பெண் போராளிகள் சமூகத்தினால் நோக்கப்படுகிறார்கள். இது போன்ற தொரு சூழலில் சமூகத்துடன் ஒன்றி வாழும் விடயத்தில் இந்தப் பெண் போராளிகள் தான் அதிக சங்கடமான நிலைமையினை உணர்கிறார்கள்� என சுனிலா அபயசேகர தெரிவித்தார். மூவாயிரம் வரையிலான விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகள் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் இருப்பதாகக் கூறும் இந்தச் செயற்பாட்டாளர் இவர்களில் எத்தனை பேர் இன்னமும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள் என்ற புள்ளி விபரம் எதுவுமில்லை எனக் கூறுகிறார்.

தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத தொரு சூழமைவில் அந்த அமைப்புடன் இணைந்திருந்தவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் தாம் நினைப்பதைச் சுதந்திரமாகக் கூறுகிறார்கள். விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆண், பெண் போராளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை இது என அபயசேகர கூறுகிறார்.

முன்னாள் ஆண் போராளிகளைவிட பெண் போராளிகள் தான் அதிக பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள், சமூகத்தவர்களால் அதிகம் வசைப்பாடப்படுபவர்கள் இவர்கள் தான் என சுனிலா அபயசேகர தெரிவித்தார்.

�விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்தமையினால் நானொரு கூடாத பெண் எனக் கருதி மக்கள் எவரும் எனக்கு வேலை தர முன்வரவில்லை. கடந்த காலச் சம்பவங்கள் அனைத்தையும் மறந்து புதிய தொரு வாழ்க்கையினைத் தொடரவே நான் விரும்புகிறேன் என முல்லைத்தீவைச்சேர்ந்த 19வயதுடைய முன்னாள் பெண் போராளியான நளினி கூறினார்.

�புலி� என்ற முத்திரை தனது பொதுவாழ்வின் ஒவ்வொரு அம்சத்தினையும் பாதிக்கிறது. அதை மறந்து வாழ நான் நினைக்கிறேன். ஆனால் இந்த சமூகம் ஒவ்வொரு கணமும் இதை குத்திக்காட்டிக்கொண்டிருக்கிறது என கூறினார் முன்னாள் பெண் போராளி நளினி.

�நான் புலிகளுடன் இணைந்திருந்தமைக்காக இந்த மக்கள் என்னை வெறுக்கிறார்கள். இது போன்ற சமூகக் கட்டமைப்பினைக் கொண்ட மக்கள் மத்தியில் எனது வாழ்வினைத் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது என சலிப்போடு கூறினார் நளினி.

இந்த நளினியைப்போன்ற மனநிலையிலேயே வடக்கு கிழக்கில் உள்ள பெரும்பாலான பெண்போராளிகள் இருப்பதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

வடக்கு கிழக்கில் முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை பற்றி தினக்கதிர் மேற்கொண்ட ஆய்வின் முழு விபரங்களும் விரைவில் தினக்கதிரில் தொடராக வெளிவர உள்ளது.

-தினக்கதிர் 03-04-11-