போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஆசியாவில் அதிக பலம்மிக்க ஒருவராக மகிந்த ராஜபக்ச மாறியிருக்கிறார் என்றால் அது மிகையில்லை. அரசியல் எதிராளிகளும் ஏன் சனநாயகமும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு சூழமைவில் மகிந்தவின் பரந்து விரிந்த குடும்பத்தினர் வர்த்தக நடவடிக்கைகளிலும் அரசியல்சார் முனைப்புக்களிலும் முதன்மையான பங்கினை வகிக்கிறார்கள்.

இவ்வாறு அவுஸ்ரேலியாவினை தளமாகக் கொண்ட WAtoday இணையத்தளத்தில் Eric Ellis எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை ‘புதினப்பலகை’க்காக [www.puthinappalakai.com]  மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

அதன் முழுவிபரமாவது,

சிறிலங்காவின் துறைமுகங்கள், பெருந்தெருக்கள், வானூர்தி நிலையங்கள் என்பன புதிதாகக் கட்டப்பட்டும் புனரமைக்கப்பட்டும் வருவதோடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்த பிரதேசங்களும் மிக வேகமானதொரு வளர்ச்சினை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இரண்டு தென்னாசிய நாடுகள் முதல் முதலாகச் சந்திக்கும் துடுப்பாட்ட இறுதியாட்டத்தில் சிறிலங்கா என்ற இந்தக் குட்டித் தீவு இந்தியாவினைப் சந்திக்கின்றது.

கொழும்பிலிருந்து வந்திருக்கும் இந்த திறன்பொருந்திய துடுப்பாட்ட அணி தனது அயல்நாடாம் இந்திய அணியுடனான இந்தப் போட்டியில் சிறந்ததொரு ஆரம்பத்தினைக் காட்டக்கூடும்.

கடந்த பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரின் விளைவாக சோபை இழந்துபோய்நின்ற கொழும்பு நகரத்தில் இந்த இறுதித் துடுப்பாட்டத்தில் சிறிலங்கா வெற்றிபெறுமிடத்து வெற்றிக்களியாட்டங்கள் புதுவேகம் பெறும். சிறிலங்காவினைப் பொறுத்தவரையில் போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அதன் பலாபலன்கள் அந்த நாட்டு மக்கள் இன்னமும் முழுமையாகப் பெறவில்லை.

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறிலங்காவினை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமின்றி உள்ளூர் வர்த்தகர்களும் கைவிட்டனர் என்றே கூறவேண்டும். அச்சுறுத்தல்கள் காரணமாக உள்ளூர் வாசிகள் பலர் புலம்பெயர் தேசங்களுக்குச் சென்று அங்கு தமக்கான வாய்ப்புகளைத் தேடினர்.

பிரித்தானியர்களின் ஆட்சிக்காலத்தின் போது சிறந்ததொரு நகரமாகத் திகழ்ந்த கொழும்பு பின்னாளில் சோபை இழந்து தூங்கும் நகரமாக மாறியது. கொழும்பினது நிதிசார் மையங்கள் அமைந்திருக்கும் பகுதிக்குள் நுழைவதென்றால் வானூர்தி நிலையத்தில் இருப்பதைப் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளைத் தாண்டித்தான் செல்லவேண்டும். விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல்கள் மலிந்து கிடந்த ஒரு மயான பூமியாகவே வெளிநாட்டவர்கள் கொழும்பினைப் பார்த்தனர்.

இந்த நிலையில் மேற்கு நாடுகள் தவிர்ந்த கொழும்பினது சிறந்த வர்த்தகப் பங்காளர்களாக ஈரானியர்களும், லிபிய நாட்டவர்களும் சீனர்களும் மாறினர்.

நான்கு ஆண்டுகளின் முன்னர் 2007ம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ணத் துடுப்பாட்ட இறுதிப்போட்டியில் றிக்கி பெண்டிங்கின் தலைமையிலான அவுஸ்ரேலிய அணி சிறிலங்காவினைத் துவம்சம் செய்வதற்கு முன்னர் இருந்த அதே சூழமைவுதான் இன்று காணப்படுகிறது.

தங்களுக்கே வெற்றி என்ற எண்ணத்தில் துடுப்பாட்டத்தின் இறுதிப்போட்டியினைக் காணுவதற்காக பிறச்ரவுணுக்குப் பறந்து சென்ற சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்ச அவமானத்தினைச் சந்தித்து நின்றார். இறுதிப் போட்டி இடம்பெற்ற வேளையில் கொழும்பு நகரத்தின் மீது விடுதலைப் புலிகளின் வான் அணியினர் தாக்குதலை நடாத்தியிருந்தனர்.

ராஜபக்ச அரசாங்கத்தினை அவமானப்படுத்தும் வகையிலேயே இந்த வான்வழித் தாக்குதலைப் புலிகள் நாடத்தியிருந்தனர். குறிப்பிட்ட அந்த நாளில் நான் கொழும்பில் இருந்தேன்.

விடுதலைப் புலிகளின் விமானங்கள் தங்களது இலக்கு எதுவோ அதன் மீது தாக்குதல் நடாத்துவதற்காக கொழும்புக்கான மின்விநியோகத்தினை அரசாங்கம் இடைநிறுத்தியது. ஆனால் அடிக்கடி மின்வெட்டு இடம்பெறுவதை வழமையாகக் கொண்ட கொழும்பு நகரத்தில் பெரும்பாலானவர்கள் மாற்றீடாக மின்பிறப்பாக்கிகளைக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் துடுப்பாட்டத்தின் இறுதிப்போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் மின் துண்டிக்கப்பட்டதையடுத்து நகரத்தவர்கள் வேகமாகவே மாற்று ஒழுங்கினை நாடினார்கள். மின்பிறப்பாக்கிகள் இயக்கப்பட கொழும்பு நகரம் மீண்டும் ஒளியினைப் பெற்றது.

உண்மையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்குக் கூறவேண்டாம் என அதன் நிர்வாகத்தினருக்கு அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது. ஒரு கட்டத்தில் கோலாலம்பூரிலிருந்து வந்திறங்கிய மலேசியாவின் பயணிகள் வானூர்தியினை விடுதலைப் புலிகளின் வானூர்தி என நினைத்து அதனை இலக்குவைத்து வானூர்தி எதிர்ப்புப் பீரங்கிகள் இயக்கப்பட்டதாம்.

இது இடம்பெற்று நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டது. விடுதலைப் புலிகளும் இல்லாதொழிக்கப்பட்டு விட்டார்கள். விடுலைப் புலிகளின் இந்த வான்தாக்குதலால் தான் கடும்சினம் கொண்டிருந்ததாக கடந்த ஆண்டு ராஜபக்ச என்னிடம் கூறினார்.

குறிப்பிட்ட தினத்தன்று இரவு தான் போரை வேகமுடன் முடுக்கிவிட்டதாகவும் ஈற்றில் மே 2009ல் வெற்றியினைக் கண்டதாகவும் கூறினார். அனைத்துலக ரீதியில் அதிபர் ராஜபக்ச அதிகளவிலான மனிதஉரிமைக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கின்ற போதும் உள்ளூரில் பெரும்பான்மைச் சிங்களவர்களை அவருக்கு அபரிமிதமான அதிகாரங்களைக் கையளித்திருப்பதோடு வளமான எதிர்காலத்தினையும் அமைதியினையும் தங்களுக்குப் பெற்றுத்தருவார் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஆசியாவில் அதிக பலம்மிக்க ஒருவராக மகிந்த ராஜபக்ச மாறியிருக்கிறார் என்றால் அது மிகையில்லை. அரசியல் எதிராளிகளும் ஏன் சனநாயகமும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு சூழமைவில் மகிந்தவின் பரந்து விரிந்த குடும்பத்தினர் வர்த்தக நடவடிக்கைகளிலும் அரசியல்சார் முனைப்புக்களிலும் முதன்மையான பங்கினை வகிக்கிறார்கள்.

ஆனால் இதுபோன்றதொரு நிலைமையினை நாட்டின் அடிமட்டத்தவர்கள் முதல் அனைவருமே ஏற்றுக்கொள்வதாகத் தெரிகிறது. அதிபர் மகிந்த ராஜபக்சவினது குடும்பத்தினரின் செழிப்புத்தான் தங்களையும் வாழவைக்கும் என இவர்கள் நம்புகிறார்கள் போலும்.

மகிந்தவின் இந்தப் போக்கு இதுவரை எதுவித பிரச்சினையுமின்றித் தொடர்வதாகவே தெரிகிறது. இந்தியாவிற்கு எதிராகச் சீனாவினையும் இவை இரண்டையும் மேற்குக்கு எதிராகவும் திருப்பிவிடும் வகையில் சிறிலங்கா செயற்பட்டது. சிறிலங்காவில் விரியும் புதிய முதலீட்டு மற்றும் சந்தை வாய்ப்புகள் இந்த நாடுகளைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது.

இதுநாள் வரைக்கும் போரினால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கைத் தீவில் வானூர்தி நிலையங்கள் துறைமுகங்கள் என பல்வேறுப்பட்ட கட்டுமானப் பணிகள் அனைத்துலக முதலீடுகளுடன் முன்னெடுகப்பட்ட வருகின்றன. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாகத் திகழ்ந்த வடக்கிலும் பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு சிறிலங்காவினது பொருளாதாரம் சீனா விரும்பியதைப் போல எட்டு சதவீத வளர்ச்சியினைக் கண்டிருந்தது. இந்த நிலையில் சிறிலங்காவில் தனது முதலீடுகளைப் படிப்படியாக அதிகரிப்பதற்குச் சீனா திட்டமிட்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகச் சரிவுப்பாதையில் சென்ற சிறிலங்காவினது பங்குச்சந்தைச் சுட்டி கடந்த ஆண்டுமுதல் இரட்டிப்பாகியிருக்கிறது. பல்வேறுட்ட முதலீடுகளை மேற்கொள்வதற்காக சிறிலங்கா தனது கடன்தொகையினை மூன்றில் ஒரு பங்கினால் அதிகரித்திருக்கிறது.

இதுபோன்றதொரு நிலைமையில் சிறிலங்காவிற்கான பயணத்தினை மேற்கொள்வது அச்சுறுத்தல் நிறைந்ததொரு விடயமன்று. இன்று சிறிலங்காவினது தலைநகர் கொழும்புக்கு பயணம் செய்யும்போது சோதனைச் சாவடிகளும் எப்போதும் ஆயுதங்களை ஏந்தியவாறிருக்கும் படையினரது பிரசன்னமும் குறைந்த ஒரு நகரத்தினை கடந்த 20 ஆண்டுகளின் பின்னர் நாம் காண்கிறோம்.

வானூர்தி நிலையம் தொடக்கம் கொழும்பு நகரத்திற்குச் செல்லும் வரைக்கும் எந்தச் சோதனைக் சாவடிகளையும் காணமுடியவில்லை. போர் இடம்பெற்ற காலங்களில் 10 தொடக்கம் 20 சோதனைச்சாவடிகள் இங்கிருந்தன.

இலங்கைத் தீவுக்கு உல்லாசப் பயணிகள் மீண்டும் படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த ஆண்டு உல்லாசப் பயணிகளின் வருகை 50 சதவீதத்தினால் அதிகரித்திருந்ததை அரச புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துகிறன.

போர் காலத்தில் இருந்ததை விட சிறிலங்காவிலுள்ள உல்லாச விடுதிகளுக்கு வந்து செல்பவர்களின் தொகை மூன்று மடங்கினால் அதிகரித்திருக்கிறது. முன்னைய காலத்தில் கில்ரன் விடுதி, தாஜ் சமூத்திரா விடுதி மற்றும் குறைந்தளவு வசதிகள் கொண்ட கொலிடே இன் ஆகிய மூன்று பிரதான விடுதிகளே காணப்பட்டன. ஆனால் இன்று அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட உல்லாச விடுதிகள் பல முளைவிடுகின்றன.

சீன உதவியில் கட்டியெழுப்பப்படும் தெற்கே ராஜபக்சவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் சங்கரி லா நிறுவனம் அதிநவீன வசதிகள் கொண்ட உல்லாச விடுதியினை நிர்மாணித்து வருகிறது. Marriott and Hyatt ஆகிய நிறுவனங்களும் தங்களது விடுதிகளை நிர்மாணிப்பதற்கு விரும்புகின்றன.

நீண்ட பல ஆண்டுகளாக ஒதுக்கி ஓரங்கப்பட்டுவந்த சிறிலங்காவின் தெற்குப் பகுதி தற்போது அனைத்துலக முதலீடுகளுக்கான மையமாக மாற்றப்பட்டிருக்கிறது. ராஜபக்சக்களைச் சந்தோசப்படுத்துவதற்கான முனைப்புத்தான் இது.

சிறிலங்காவில் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களால் புறந்தள்ளப்பட்டுவந்த இந்தப் பிராந்தியம் தற்போது மகிந்தவும் அவரது குடும்பத்தினரும் ஆட்சிபீடம் ஏறியதைத் தொடர்ந்து புதுவளர்ச்சி காணுகிறது. தமது சொந்த மாவட்டத்தினை மேம்படுத்துவதே ஒரே குறிக்கோள் என்ற வகையில் ராஜபக்ச சகோதரர்கள் செயற்பட்டு வருகிறார்கள். சீனாவின் நிதியுதவியில் அமைந்த துறைமுகம், வானூர்தி நிலையம் போன்றவை இங்கு நிறுவப்பட்டு வருகின்றன.

இனையனைத்தும் இலங்கைக்தீவு ஒரு இக்கட்டான நிலைக்கு இட்டுச்செல்வதையே காட்டுகிறது. இந்த நிலையில் புத்துயிர் பெறுமொரு தேசமென சிறிலங்காவினை அழைக்கலாமா?

அதனது அண்மைய துன்பியல் வரலாற்றின் அடிப்படையில், தனது பொருளாதாரம் செழிக்குமிடத்து தற்போது சிறிலங்காவிற்கு ஆதரவளித்துவரும் அயல் நாடுகளை அது தூர விலக்கிவிடுவதற்கான வாய்புகளே அதிகம் உள்ளன.