ஆபிரிக்காவிலுள்ள நாடான லிபியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கி ஒரு சில நாட்களே ஆன நிலையில் அங்கே மனிதஉரிமைமீறல், போர் குற்றம் என்பன நடப்பதாக அந்த நாட்டில் புரட்சியை நடாத்திக்கொண்டிருக்கும் விடுதலைப் போராளிகள் உலக நாடுகளை நோக்கி குரல் கொடுத்தார்கள்.

 ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் கூட்டம் போட்டார்களோ இல்லையோ பிரான்ஸ் நாடு தனது மிராச்சையும் தூக்கிக் கொண்டு கேணல் கடாபியை சுட்டு வீழ்த்த புறப்பட்டது. அவர்களுக்குப் பின்னால் ஐக்கிய இராச்சியமும், ஐக்கிய அமெரிக்காவும் லிபியாவில் தாக்குதல்களை நடாத்தத் தொடங்கிவிட்டார்கள்.

இலங்கையில் உள்நாட்டுப்போர் 30 வருட காலமாக நடந்து 2009 மே யில் மிக உக்கிரமடைந்து 80 ஆயிரம் பேர்வரையில் பலிகொண்டு அப்போர் முற்றுப்பெற்றது. ஆனால் மனித உரிமை மீறல்களும், கடத்தல்களும், கொலைகளும் முற்றுப்பெறவில்லை என்பது வேறு விடயம். லிபிய மக்கள் அந்நாட்டு அரச தலைவர் கேணல் கடாபிக்கெதிராக புரட்சிசெய்ய தொடங்கிய நாள் முதல் ஐ. நா பாதுகாப்புச் சபையை நோக்கி கூக்குரலிட்டபோது ஒரு வியப்பான பதிலை ஐ. நா பாதுகாப்புச்சபை கொடுத்திருந்தது. அதாவது ஒரு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தொகையான மக்கள் மரணித்த பின்னர் தான் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அதுவரை தம்மால் எதுவும் செய்ய முடியாது எனவும் கூறியிருந்தது.

அப்படியென்றால் தமிழ் மக்கள் கடைசி யுத்தத்தில் மட்டும் 80 ஆயிரம் பேர் வரையில் மரணித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே? ஒருவேளை தமிழர்களென்றால் இலச்சத்திற்கு மேற்பட்டும் லிபிய மக்களென்றால் 500 பேருக்கு மேற்பட்டும் மரணிக்கவேண்டும் என்று ஐ. நா வின் சாசனத்தில் எழுதப்பட்டிருக்கின்றதோ? எனவே ஐ. நா பாதுகாப்புச்சபை மக்களைப் பாதுகாக்க அல்ல கொலைக்குக் கொடுக்கத்தான் இருக்கின்றது என்ற முடிவுக்கு வரலாமா?

புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்மக்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தலைமைச் செயலகத்திற்கு முன்னால் வருடக்கணக்கில் கூக்குரலிட்டுக் கத்தியும், ஊர்வலங்கள் நடாத்தியும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தலைமைச் செயலக கட்டடத்திற்கு முன்னால் தம்மை ஆகுதியாக்கியும் கூட ஈழத்தமிழர் பக்கம் ஐக்கிய நாடுகள் சபையோ, லிபியாவில் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசிக்கொண்டிருக்கும் நாடுகளோ கடுகளவேனும் திரும்பிப் பார்க்கவேயில்லை.

இலங்கையில் தமிழர்களுக்கெதிரான போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது கூட்டப்படாத ஐ.நா பாதுகாப்புச்சபை, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இளைக்கப்பட்ட போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காக கூட்டப்பட்டும் கூட சீனாவும், ரஷ்யாவும் எதிர்ப்புத் தெரிவித்ததும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது கலைக்கப்பட்டது. ஆனால் லிபியாவில் மக்கள் சிறிது காலம் கூக்குரலிட்டதும் ஐ. நா பாதுகாப்புச்சபையின் எந்தவித தீர்மானங்களும் வெளிப்படையாக அறிவிக்கப்படாத நிலையில் அதே சீனாவும், ரஷ்யாவும் எதிர்ப்புத் தெரிவித்தும் கூட எதையுமே சட்டை செய்யாமல் வெளிப்படையாகவே பிரான்ஸ், கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, டென்மார்க் போன்ற நாடுகள் லிபிய அரசுத்தலைவரின் அரச பயங்கரவாதத்திற்கெதிராக நடவடிக்கையில் இறங்கி கேணல் கடாபியின் இருப்பிடத்தையே அழித்து முடித்திருக்கிறார்கள்.

யூ என்னா? அல்லது யூ எஸ்சா? (UN or US)

இவற்றையெல்லாம் பார்க்கும் போது ஈழத்தமிழர்கள் எந்த விதத்தில் லிபிய மக்களைவிட தரத்திலோ, பாதிப்பிலோ குறைந்திருக்கிறார்கள்? ஏன் எமக்கு மட்டும் இந்த நிலை? நாம் ஈழத்தமிழர்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? நாம் இந்த உலகைப் பார்த்து உதவிகோரி கூக்குரலிட்டதில் தவறேதும் உள்ளதா? அல்லது பாரம்பரிய உரிமைகள் கேட்டுப் போராடும் தலைமைகள் தங்களளவில் உயர்ந்து விடுவார்கள் என்பதற்காக அமெரிக்காவும் நேசநாடுகளும் தமது நலன்களை நோக்காகக் கொண்டு எடுக்கின்ற மாறுபட்ட நடவடிக்கைகளா? எதுவுமே புரியவில்லை! அப்படியென்றால் ஐக்கியநாடுகள் சபை என்று ஒன்று இந்த உலகிற்குத் தேவைதானா?

லிபியாவிற்கு எதிரான கூட்டுப்படைகளின் தாக்குதல் பிழையென்றோ சரியென்றோ வாதாடுவதல்ல நோக்கம். இன்னமும் ஈழத்தில் முற்றுப்பெறாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மறைமுகமான இன்னோரன்ன யுத்தங்கள் இந்த ஐ. நா சபையின், கூட்டுப்படைகளின் கண்களில் படவில்லையா? இப்போதும் கூட காலம் கடந்து போய்விடவில்லை. ஒருவேளை இதுதான் ஈழத்தமிழர்களிற்கான தீர்வைப்பெறும் காலமாக அமையலாம். லிபியாவைப் பார்த்த கண்களால் தமிழீழத்தையும் பார்க்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். ஈழத்தில் நடந்தேறிக்கொண்டிருக்கும் அநியாயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கொடுக்கை கட்டிக்கொண்டுநிற்கும் இந்த நாடுகள் உடனடியாக தலையிட்டு தமிழ் மக்களுக்கான விடிவை ஏற்படுத்த வேண்டுமென ஒவ்வொரு தமிழனும் எதிர்பார்க்கின்றான்.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு ஒருபுறமிருக்க இதற்கான தூண்டுதலுக்கும், ஒன்றிணைப்பிற்கும் புலம்பெயர் நாடுகளில் முளைத்திருக்கும் தமிழர் அமைப்புகளான நாடுகடந்த தமிழீழ அரசு‘, ‘தமிழர் பேரவைகள்‘, தமிழர் சார்ந்த மத அமைப்புகள் போன்றவை முன்வர வேண்டும். இவற்றையெல்லாம் சிந்திக்காமல் தொடர்ந்தும் நாங்கள் பதவிச் சண்டைக்குள்ளும், மதச் சண்டைக்குள்ளும், துரோகிப் பட்டம் வழங்கல்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருப்போமானால் உலகநாடுகள் மட்டுமல்ல ஈரேழு உலகங்களுமே எங்களை திரும்பிப் பார்க்காது.

நாகலிங்கம் மதியழகன்

mathiyalakan1@hotmail.com