தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீதான கொலை முயற்சியின் பின்னணியில் எத்தகைய சக்திகள் செயற்பட்டன என்பதற்கப்பால் அதற்கான காரணிகள் எதுவெனத் தேடும்போது வன்னி மண்ணில் நடைபெறும் மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்களை அவதானிக்க வேண்டும்.

அவரின் செயற்பாடுகள் பத்திரிகைகளிலும், இணையத் தளங்களிலும் பரவலாக ஆக்கிரமித்திருப்பதைச் சகித்துக் கொள்ள முடியாத அரச சார்பு அபிவிருத்தி அமைப்புகள் விசனமடைந்திருக்கின்றன. அதேவேளை உட்கட்சி மோதல்கள், அவரைக் கொலை செய்யத் தூண்டுமளவிற்கு நகர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே, இச் சம்பவத்தை அபிவிருத்திப் போட்டிக் களத்தில் அதிகார மையத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட “அழிப்பு’ அரசியலாகவும் பார்க்கலாம்.

அதிகாரத்தின் குவிமையப் புள்ளியில் தமிழ்த் தேசிய அரசியல் சமபங்காளியாகாமல் அந்நியப்படுத்தப்படும்போது இவ்வாறான அழித்தொழிப்பு நிகழ்வுகளை எதிர்கொள்வது ஆச்சரியமான விடயமல்ல. முழு இலங்கைத் தீவின் இறைமை தனக்கே உரித்தானதென எண்ணும் பெரும்பான்மை இனம், அங்கு எண்ணிக்கையில் சிறுபான்மையாகவும், தொடர்ச்சியான நிலப்பரப்பில் பூர்வீக தேசிய இனமாக வாழும் இனக் குழுமத்தின் மீது அதிகாரத்தை செலுத்த முற்படும்போது அபிவிருத்திகளையும் மீள் கட்டுமானப் பணிகளையும் பங்கிட்டுக் கொள்ள விரும்பாது.

100 ஏக்கர் நிலத்தினை தானமாக வழங்கி 50,000 ஏக்கரை அது விழுங்கும். அத்தோடு இந்த 100 ஏக்கர் விட்டுக் கொடுப்பினை தேசிய இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனையும் அற்புத நிகழ்வாக வெளியுலகிற்குச் சித்திரிக்க முற்படும். நல்லெண்ண சமிக்ஞையாக நூறைக் கொடுத்தவர் இணைந்து சென்றால் தாயகத்தையே தாம்பாளத்தில் வைத்து தந்துவிடுவார் என்கிற வகையில் பரப்புரை மேற்கொண்டு புலம் பெயர் தமிழர்களின் மனிதாபிமான மனத்தளங்களில் அதிர்வினை சிலர் ஏற்படுத்தி விடுவார்கள்.

ஜப்பானில் ஏற்பட்ட அழிவுகளுக்காக ஒரு மில்லியன் டொலர்களை வழங்க அரசு முன்வந்திருப்பதாக ஒரு செய்தி கூறுகின்றது. இது நல்ல விடயமென்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் போரினால் சிதைவுற்று வடகிழக்குப் பிரதேசங்களைக் கட்டியெழுப்புவதில் ஏன் அரசு அக்கறை கொள்ளவில்லை என்பதுதான் தமிழ் மக்கள் முன்னுள்ள கேள்வியாகும். பெரும் பொருட் செலவில் 54 நாடுகளின் பிரதிநிதிகளை அழைத்து, இறுதிப் போரில் விடுதலைப் புலிகளை எவ்வாறு வெற்றி கொண்டோம் என மாநாட்டினை நடத்த வேண்டிய அவசியம் என்ன?

முறியடிப்புத் தாக்குதல் தொடர்பான தமது பட்டறிவினை இந் நாடுகளோடு பகிர்ந்து தேசிய இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்க முடியுமா?அழிவிலிருந்து மீண்டெழ முடியாமல் அவலப்படும் தமிழ் மக்கள், சிங்களத்தின் வெற்றிக் களிப்பை, ஏற்றுக் கொள்வார் களென்று எதிர்பார்க்க முடியாது. நடைபெறும் ஐ. நா. சபை மனித உரிமைப் பேரவையின் 16 ஆவது கூட்டத் தொடரில், “மறக்கப்பட்ட கைதிகள்” என்கிற தலைப்பிட்டு, அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பிக்கிறது அனைத்துலக மன்னிப்புச் சபை.

கொடூரமான, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கானோர், விசாரணைகளின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். 1971 லிருந்து தொடர்ச்சியாக ஆட்சி செய்யும் அரசாங்கங்கள், தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் அவசர காலச் சட்டத்தின் கீழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குகின்றன. இத்தகைய அவசரகாலச் சட்டமும், பயங்கரவாத தடைச் சட்டமும் மக்களை அச்சுறுத்தும் வகையில் பிரயோகிக்கப்படுவதாகக் கூறும் அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் சரிபி (SAM ZARIFI)  சர்வதேச மனித உரிமை நியமங்களை மீறும் இச்சட்டங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டுமெனக் கூறியுள்ளார்.

புலம்பெயர் நாடுகளில் இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளாலும் தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் மறுபடியும் முகாம்களை அமைப்பதாலும், நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படுவதால் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதாக அரசு விளக்கமளிக்கிறது. புலி முகாம் பற்றிய கதை சொன்ன பிரதமரின் பதவி, பறிபோகலாமென்கிற செய்தியும் வருகிறது.

ஆகவே ஆட்சியாளர்கள் மத்தியிலும் நாற்காலி சண்டைகள் ஆரம்பித்துவிட்டதை இந்தியாவில் புலி முகாம்கள் என்கிற விவகாரம் வெளிப்படுத்துகிறது. அதேவேளை, வாராந்த அமைச்சரவை முடிவுகளை, ஊடகச் சந்திப்பில் எடுத்துக் கூறிய அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, வெளியிடப்பட முடியாத தந்திரோபாயத்தின் அடிப்படையில் கே. பி. என்றழைக்கப்படும் சிறப்புக் கைதி, செல்வராஜா பத்மநாதன் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், சர்வதேச மட்டத்தில் விடுதலைப்புலிகளை ஒடுக்க கே. பி. அவசியமென்றும் அவருக்குத் தண்டனை வழங்கப்படுமென்றும் கூறியிருந்தார்.

தேவையற்ற விடயங்களைப் போட்டுடைத்ததற்காக சிலவேளைகளில் அமைச்சர் யாப்பாவும் தனது நாற்காலியை இழக்கும் வாய்ப்புண்டு. இருப்பினும் தமிழக சட்ட சபைத் தேர்தல் காலத்தில், புலிகளின் முகாம்கள் தமிழ் நாட்டில் இருப்பதாகக் கூறி, தமிழக காங்கிரஸாரின் தேர்தல் வெற்றிக் கனவிற்கு இலங்கைப் பிரதமர் வேட்டு வைத்து விட்டாரென டெல்லி ஆட்சியாளர்கள் கோபமடைவதை மஹிந்த அரசு புரிந்து கொள்கிறது.

ஆகவே இந்திய மத்திய அரசைச் சீண்டிய பிரதமரை பதவி நீக்கம் செய்து இந்தியாவைச் சாந்தப்படுத்தும் அதேவேளை தருணம் பார்த்து, சமல் ராஜபக்ஷவை பிரதமராக்க, குடும்ப ஆட்சியை மேலும் வலுப்படுத்தலாமென ஜனாதிபதி கணக்குப் போடுகிறார் போலிருக்கிறது. இரண்டுமே உறவினைப் பலப்படுத்தும் அடிப்படையைக் கொண்ட நகர்வுகளே.

உள்நாட்டில் அரச உட்கட்டுமானங்களில் படைத் துறையினரின் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதோடு அதற்குச் சமாந்தரமாக, வெளிநாடுகளிலும் தமக்கு விசுவாசிகளாக இருப்பவர்களைத் தூதுவர்களாக்கும் முயற்சியில் தற்போதைய ஆட்சி மைய உயர் பீடம் முனைப்புக் காட்டுகின்றது. அண்மையில் ஆங்கில இணையத்தளமொன்று வெளியிட்ட செய்தி இதனை அம்பலப்படுத்தியது.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் திசர சமரசிங்காவை அவுஸ்திரேலிய தூதுவராகவும், தற்போதைய ஐ. நா. விற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கோகனவை பிரித்தானிய தூதுவராகவும் நியமிக்க அரசு முடிவு செய்து, அந்நியமனம் தொடர்பான முன்மொழிவினை இந்த நாடுகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது இலங்கை அரசு எனத் தெரியவந்தது.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பில், கடற்படை நடவடிக்கைகளின் தளபதியாக இருந்த அட்மிரல் திசர சமரசிங்க, பொதுமக்கள் மீதான பீரங்கித் தாக்குதலுக்கு பொறுப்பாக இருந்தவர் என்கிற வகையில் அவர் மீது மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுவதால் அவரை ஏற்றுக் கொள்ள அவுஸ்திரேலியா மறுத்து விட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, காயப்பட்ட பொதுமக்கள் மற்றும் போராளிகளோடு சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் கொடுப்பதாக இலங்கை அரசின் சார்பாக வாக்குறுதியளித்த கலாநிதி பாலித கோகனவிற்கு எதிராக, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் சுவிஸ் தமிழர் பேரவையும், இன அழிப்பிற்கெதிரான தமிழர் அமைப்பும் (Tamils Against Genocide) இணைந்து வழக்குத் தொடரவிருப்பதால், கோகன்னாவை ஏற்றுக் கொள்ள முடியாதென பிரித்தானிய அரசு மறுத்துள்ளதாகவும் அவ்விணையத்தள செய்தி மேலும் குறிப்பிடுகிறது.

ஆகவே எட்டுத் திக்குகளிலிருந்து வரும் மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுகளை எதிர்கொள்ள, இலங்கை அரசும், பல நகர்வுகளை துரிதமாக மேற்கொள்வதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கிறது. ஐ. நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனால் உருவாக்கப்பட்ட மூவரடங்கிய ஆலோசனைக் குழுவின் அறிக்கையை வெளியிட முன்பாக, தமக்குக் காண்பிக்குமாறு அரசு வலியுறுத்துகிறது.

சட்டமா அதிபரும், வெளியுறவுத் துறைச் செயலாளரும், பான் கீ மூனை சந்தித்ததன் பின்புலம், இதுவாக இருக்குமென ஊகிக்கப்படுகிறது. அறிக்கை வெளியாவதை தடுக்கும் நகர்வுகள், அனைத்துலக மன்னிப்புச் சபை, சர்வதேச நெருக்கடிக் குழு மற்றும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் இறுக்கமான நிலைப்பாடுகளால் சீர்குலைந்து போனதால் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களையாவது அறிந்து, அதற்கு ஏற்றாற் போல் தற்காப்புத் தயாரிப்புக்களில் ஈடுபட அரசு முயல்கின்றது.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து, இரண்டாவது ஆண்டினை அண்மிக்கும் இவ்வேளையில் ஐ.நா.செயலர் வெளியிடப் போகும் அறிக்கை, எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வருமென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
இதயச்சந்திரன்