1944 ம் ஆண்டுகளில் தமிழ்மக்களின் விடிவை நோக்காக கொண்டு அமரர் ஜீ. ஜீ. பொன்னம்பலத்தை தலைவராகவும், அமரர் தந்தை செல்வாவை உபதலைவராகவும் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ் காங்கிரஸ் அரசியல்கட்சி, 1947 ம் ஆண்டுத் தேர்தல்களிலே அமோக வெற்றி பெற்றதும்,

அன்றைய காலத்தில் ஆட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட D.S. சேனநாயக்காவிடம் தமிழரின் தாயககோட்பாட்டை பிரதானமாக கொண்ட 4 அம்ச கோரிக்கையை தந்தை செல்வா முன்வைத்த போது அமரர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தமையால் தந்தை செல்வா பிரிந்துசென்று புதிய கட்சியாக தமிழரசுக் கட்சியை ஸ்தாபித்த வரலாற்றை ஒரு மின்னல் ஒளிக்கீற்றாக மீள் நினைவுக்குட்படுத்தல் பொருத்தமாகுமென கருதுகிறேன்

தமிழர் தாயகத்திலே அத்துமீறிய சிங்களவர் குடியேற்றத்தை நிறுத்தவேண்டும்என தந்தை செல்வாவால் 1947 ம் ஆண்டுகளில் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு நிரந்தரத் தீர்வு கிட்டாமையால், அதன் வெளிப்பாடாய் அறப்போராகவும், மறப்போராகவும் தமிழ்மக்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்து இப்போ இளைப்பாறி நிற்கிறது

இந்த இளைப்பாறலின் தொடர்ச்சியாக இலங்கைத் தமிழ்மக்களால் மீண்டும் எந்த வகையிலான போராட்டம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்பதை இலங்கை அரசின் நடவடிக்கைகள் தான் எதிர்காலத்தில் தீர்மானிக்கப் போகின்றதென்ற உண்மையின் ஜதார்த்தம் எம்கண்முன்னே விரிவதை யாராலும் தடுக்க முடியாது

இலங்கைப் பெரும்பான்மை மக்களால் ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிகெளரவ மகிந்த ராஜபக்ச அவர்களே! உங்களிடம் பகிரங்கமாக சிலவற்றை முன்வைக்க விரும்புகின்றோம். இதனோடும் இலங்கைப் பாராளுமன்றத்திலே சிறப்பு பங்குவகிக்கும் * இலங்கை அரசின் எதிக்கட்சியினரே! * J.V.P, சிகல உறுமய கட்சியினரே! உங்களோடும் இதுபற்றி பகிர்ந்துகொள்ள பிரியப்படுகிறோம்.

தமிழ்மக்கள் அடங்கலாக முழு இலங்கைக்கும் நீங்கள் தான் கெளரவ ஜனாதிபதிஎன்று சொல்லித் தெரியவேண்டியதல்ல. இலங்கையின் சகல இனங்களும் சுதந்திரமாகவும், ஒற்றுமையாகவும் வாழவேண்டும் என அறைகூவல் விடுக்கும் அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் பேசி தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என முனைப்பெடுக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள். இதனைநடைமுறைப்படுத்திவெற்றி காண்பீர்களென்றால் அதற்கும் நன்றி

வெற்றிக்கும் மேலாக,

காலம் காலமாக புரையோடிக் கொண்டிருக்கும் அத்துமீறிய குடியேற்றம்இன்றுவரை தொடர்வதை தங்களின் மேலான கவனத்திற்கு தெரியப்படுத்தல் எமது கடமையாகிறது

* திரேதகாலம் என அழைக்கப்படும் வரலாற்றுக் காலங்களுக்கப்பால் திருக்கோணமலையானது இராவணேஸ்வரன்என்ற தமிழ்ச் சக்கரவர்த்தியின் இராஜதானியாக அமைந்திருந்தது. அதனை அடுத்து குறித்துரைக்கக் கூடியதாக குளக்கோட்டன் என்னும் தமிழ் மன்னனின் ஆட்சிக்காலம் பொற்காலமாக கருதப்படுகிறது . குளக்கோட்ட மன்னனின் இறங்குதுறையான ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் அமைந்த இடம் இலங்கைத்துறைமுகத்துவாரம்எனவும், இதுவே இலங்கையின் முதல் துறைமுகமும் ஆகும் என ஆய்வாளர்கள்(பரண விதாரண போன்றவர்கள்) கருதுகிறார்கள்

திருக்கோணமலை மாவட்டத்திலே ஒரு பௌத்த சிங்கள சகோதரனோ, ஒரு இஸ்லாமிய சகோதரனோ இல்லாத தனித்தமிழர் வாழும் பிரதேச செயலகப்பிரிவு ஈச்சிலம்பற்று(வெருகல்) ஆகும். இங்கே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இந்துக்கள் வாழ்ந்த பிரதேசம். இதற்கான ஆவணங்கள் கண்முன் உள்ள சாட்சியங்களான இந்து ஆலயங்களாகும்

2009 ம் ஆண்டு வைகாசி மாதம் 19 ம் திகதியோடு(தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்னடைவோடு) தாயக எல்லைகள் உடைக்கப்பட்டு இந்து ஆலயங்கள் தெருவிற்கு வந்ததோடு அவ்விடங்களில் பௌத்த ஆலயங்கள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதை ஆவண சாட்சியாக தங்களுக்கு தரப்படுகிறது

பௌத்த ஆலயங்கள் அமைப்பதை தமிழ்மக்கள் தடுக்கவில்லை. அவர்கள் அராஜகவாதிகளுமல்ல. போர் காதலர்களுமல்ல. உங்களால் மாற்றப்படாதவரைக்கும்

தமிழ் பௌத்தர்கள் அடங்கலாக பெளத்தர்களோ அன்றி மதம் மாறிய பெளத்தர்களோ அவ்விடத்தில் வாழ்ந்திருந்தால் பெளத்த ஆலயங்கள் தேவைகருதி அமைப்பதில் தப்பொன்றுமில்லை. ‘குடியேற்றத்தைமையப்படுத்தி பெளத்த ஆலயங்கள் அமைப்பதில்தான் பிரச்சனை தோன்றுகிறது

வரலாற்றுக் காலங்களுக்கு முற்பட்ட தமிழ்மக்களின் பாரம்பரிய இந்து வழிபாட்டுத் தலமான ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புன்னையடி மலை நீலியம்மன் வணக்க ஸ்தலத்தின் தற்போதைய நிலை. இந்து ஆலயம் எல்லையை விட்டு வெளியிலும் இந்து ஆலயம் இருந்த இடத்தில் பௌத்த ஆலய நிர்மாணிப்பு பணிகளை படத்தில் காணலாம்.

எல்லையை விட்டு அகற்றப்பட்ட மலை நீலி அம்மன் ஆலயத்தின் தோற்றம்.

இலங்கையின் முதல் துறைமுகமான இலங்கைத்துறைமுகத்துவாரத்தில் தமிழ்மக்களின் பாரம்பரிய குஞ்சுமலை முருகன் ஆலயத்தின் முன்னால் நடைபெறும் அகழ்வு வேலையும் அதனோடு புதிதாக வைக்கப்பட்டுள்ள பௌத்த சித்திரத்தின் தோற்றமும்.

 

இலங்கைத்துறைமுகத்துவாரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பகவான் புத்தரின் சிலை.

 

குறிஞ்சிமலை என்று தமிழ்மக்களால் புரான காலத்தில் அழைக்கப்பட்டு வந்து பின்னர் பெயர் மருவி குஞ்சுமலை, குஞ்சியப்பா மலை, குஞ்சிவாப்பாமலை என்று தற்பொழுது அழைக்கப்பட்டுவரும் குறிஞ்சிமலை முருகன் ஆலயத்திற்கு முன்னால் இயற்கையாக அமைந்த தாமரைத் தடாகமும் அதற்கு முன்னால் தற்பொழுது புதிதாக அமைக்கப்பட்ட பௌத்த ஜாதகக்கதைச் சித்திரமும், பௌத்த விகாரை கட்டுமானப் பணியும்.

குறிஞ்சிமலை முருகன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பௌத்த ஆலயத்தின் மற்றுமொரு தோற்றம்.

குறிஞ்சிமலையில்(குஞ்சிவாப்பாமலை) அமைக்கப்பட்டிருக்கும் பௌத்த நூல்நிலையம்.

தற்பொழுது ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குள் புதிதாக அமைக்கப்பட்டுவரும் புதிய சிங்களக் குடியேற்றம்.

மேலும்,

எமது தாயகம்காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஆழ் மன உணர்வு உண்மைத் தமிழர்களுக்கு உந்தும் என்பதில் ஐயமில்லை

* தமிழ் தேசிய கூட்டமைப்பினரோடு பேசவேண்டும் என நல்ல சகுனம் காட்டிய கௌரவ அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா அவர்களே

* கிழக்கு மாகாணத்தின் ஒரே தமிழ் கௌரவ அமைச்சர் முரளீதரன்(கருணா) அவர்களே

* கிழக்கு மாகாணத்தின் முதல் தெரிவு செய்யப்பட்ட கௌரவ முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) அவர்களே

* தமிழ் தேசிய கூட்டமைப்பினரே

* தேச நலன் நோக்கும் அனைத்து தமிழ் புத்தி ஜீவிகளே

சிங்கள மக்களிடமும், அரசியல் வாதிகளுடனும் இதன் உண்மைத் தன்மை பற்றி தெளிவுபடுத்தி, தமிழர் தாயகத்திலே தாயக உரிமையோடுதமிழ்மக்கள் சுதந்திரமான, சமநிலை வாழ்வை ஏற்படுத்த வேண்டிய கடமை உங்களிற்கு உண்டென்று உணர்ந்து இதற்கான தீர்வுப் பொறிமுறையை நீங்கள் கூட்டாக சேர்ந்து வன்முறையற்ற ஜனநாயக வழியில் கட்டமைத்து மீட்டெடுக்க வேண்டுமென அனைத்து தமிழ்மக்களும் எதிர்பார்க்கிறார்கள்

மீண்டும் நல்ல முடிவோடு சந்திக்கும்வரை……. 

கனக கடாட்சம்

trincokadatcham@yahoo.com