தலைமைச் செயலகம்,                                     த/செ/ஊ/அ/01/11
தமிழீழ விடுதலைப்  புலிகள்,
தமிழீழம்.
08/02/2011

அன்பார்ந்த தமிழ் மக்களே,

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ஆயுதங்களை மெளனிக்கின்றோம் என்ற எமது அறிவிப்புக்கு ஏற்ப தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எந்தவிதமான ஆயுத நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது அமைதிகாத்து வருகின்றோம்.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழீழ மக்களின் விடுதலைப் பற்றைச் சிதறடித்து, உலகத்தமிழர்களின் ஒற்றுமையைக் குலைத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முற்றாகத் திசைதிருப்பும் நோக்கோடு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சிறிலங்கா அரசு தனது கபடத்தனமான இராஜதந்திர அணுகுமுறையால் பயங்கரவாத அமைப்பாக உலகின் கண்முன் காட்டியது. இப்போதும் சிங்கள அரசு புதிய புதிய உத்திகளை வகுத்து புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழீழ மக்களால் உருவாக்கப்படும் ஜனனாயகக் கட்டமைப்புக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் உப அமைப்புக்களாகக் காட்டி அவ்வமைப்பைச் சட்டச் சிக்கலுக்குள் தள்ள முயற்சிக்கின்றது.

இத்தகைய சூழலில் சிங்கள அரசாங்கம் மற்றும் தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தினை விரும்பாத சக்திகள், எம் மக்களினால்  முன்னெடுத்துச் செல்லப்படும் போராட்ட நடவடிக்கைகளை முடக்குவதற்கு பல்வேறு சூழ்ச்சி வழிகளைக் கையாண்டு வருகின்றன. இதில் முக்கியமானது புலம்பெயர் மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும்  நடவடிக்கைகளை  விடுதலைப்புலிகளின் ஆதரவுச் சாயம் பூசி அதனை ஒடுக்க முற்படுவதாகும். விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டதாகக் கூறும் சிங்கள அரசு தமிழர்களின் சுயமான ஜனனாயக எழுச்சிப் போராட்டங்களை முடக்குவதற்காகவே விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தி வருகின்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் எதிரியால் சிறைப்பிடிக்கப்பட்ட போராளிகளில் சிலரை தம்வசப்படுத்தி அவர்களூடாக புலம்பெயர் தமிழ்மக்களிடம் நிதி சேகரிப்பில் சிறிலங்கா அரசு ஈடுபடுவது எம்மால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகளின் பற்றுச் சிட்டைகளைப் போன்ற பற்றுச்சிட்டைகளைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றனர் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த சிறிலங்கா அரசு முற்படுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் ஊடாக, புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியற் செயற்பாடுகளையும், அதில் ஈடுபடும் அமைப்புக்களையும் முடக்க சிங்கள அரசு திட்டமிட்டுச் செயற்படுகின்றது.

வெளிநாடுகளில் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் எவற்றிலும் நாம் ஈடுபடவில்லை. தாயகத்தில் துன்பப்படும் மக்களுக்கு ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும். தாயகத்து மக்களின் வாழ்வாதாரம் இன்று புலம்பெயர்ந்த தமிழர்களின் கைகளிலேயே பெருமளவு தங்கியுள்ளது. அதேவேளை, அம்மக்களுக்கான உதவிகள் வழங்கப்படும்போது சிறிலங்கா அரசாங்கத்தால் கபட நோக்கோடு உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் வலையில் வீழ்ந்துவிடாமல் விழிப்புடனிருக்க வேண்டியது அவசியமாகும்.

விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது என்ற சட்டச் சூழலைப் பயன்படுத்தியே தமிழர்களின் போராட்டத்தினை சிங்கள அரசு நசுக்க முற்படுவதனை மக்களாகிய எல்லோரும் நன்கு அறிவீர்கள். ஆகவே இச்சூழலை மாற்றியமைக்க புலம்பெயர் மக்கள் முனைப்புடன் செயற்படவேண்டும்.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இயக்கத்தின் தடையை நீக்குவதற்காக எடுக்கப்பட்டு வரும் சட்ட ரீதியான போராட்டங்களைத் தொடர்ந்து அண்மையில் பிரான்ஸ் நாட்டிலும் ‘தமிழர் நடுவம்’ எனும் அமைப்பினால் விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையினை நீக்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை வரவேற்கத்தக்கது. இவ்வாறான முயற்சிகளுக்கு தமிழ்மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்கி இம்முயற்சிகள் வெற்றிபெற உழைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

அன்பான புலம்பெயர் வாழ் தமிழ் மக்களே!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எமது இனத்தின் மீதான ஒடுக்குமுறையை சிறிலங்கா அரசு தீவிரப்படுத்தி வரும் அதேவேளை, எமது அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி புல்லுருவிகள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தக் குழப்பங்களில் இருந்து விடுபட்டு எமது போராட்டச் செயற்பாடுகளைச் சரியான வழியில் கொண்டுசெல்ல எமது இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும்.

அப்பழுக்கற்ற எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்த எதிரியால் மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கைகளில் வீழ்ந்துவிடாமல் விழிப்புடன் இருக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்..

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” 

இராமு.சுபன்,
இணைப்பாளர்,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.