இதிகாச காலம் தொட்டு தமிழருக்கான வரலாற்று அடையாளத்தைக் கொண்ட இடங்களில் வன்னியும், வன்னியைச் சார்ந்த முல்லைத்தீவுப் பிரதேசமும் பிரதானமானதாகும்.

குறிப்பாக முல்லைத்தீவுப் பிரதேசம் வடகிழக்கு இணைப்பின் தொடுவாயாகும். வடகிழக்கு இணைப்பால் ஈழத்தமிழரின் பாரம்பரியம், புரான கால ஆட்சி அதிகாரம்பற்றிய ஆவணங்கள் வெளிப்பட்டு விடலாம் என்ற அச்சம் சிங்களத்திற்கு ஏற்பட்டது இன்று நேற்றல்ல. தமிழ்ப் பிரதேசங்களில் வாழும் தமிழரின் பண்பாட்டுத் தொடர்புகள் துண்டிக்கப்படுவதால் தமிழர் அடையாளங்களைச் சிதைக்கலாம் என்றும், அதனால் சிங்களத்தின் மேலாதிக்கக் கொடியின்கீழ் ஈழத்தில் தமிழர்களை சதாகாலமும் ஏதிலிகளாகவும், கொத்தடிமைகளாகவும் வைத்திருக்கலாம் என்ற கட்டமைப்பு சரிவரவேண்டும் என்பதற்காய் பல முனைப்புகள் நடந்தேறி வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

முல்லைத்தீவு பகுதியில் அமைந்த குமுழமுனை, தண்ணீரூற்று, தண்ணீர்முறிப்பு, தண்ணீர் முறிப்புக் குளம், குறுந்தூர் மலை, வெள்ளை மலை, ஒட்டுசுட்டான் போன்றவை வன்னியன் ஆட்சியில் குறித்தறியப்பட்ட   பகுதிகளாகும். இதற்கான காரணம் என்னவென்றால், நன்னீர் கொண்ட வளமிக்க பகுதியாகையால் மேட்டுப் பயிர்ச்செய்கையும்  அதேபோல் கிழக்குப் பக்கமாக கடல்வளம் நிறையவே உண்டு. தமிழர் தாயகத்தில் வளம்மிக்க பகுதிகளை அரசு இனம் கண்டு சிங்களவர்களைக் குடியேற்றி வளங்களைச் சுரண்டுவதோடு தமிழர் குடியிருப்புக்களை ஐதாக்கவும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

குறுந்தூர் மலைப் பகுதியில் மிகப்பிரபல்யமான அருள்மிகு அய்யன் கோயில் இருந்து வந்ததை எளிதில் மறந்துவிட முடியாது. சிறப்புமிக்க அவ்வாலயத்திற்கு,   கிழக்கின் முடிவுறும் பகுதிகளான திருக்கோணமலை மாவட்டத்தின் திரியாய், தென்னமரவாடி, குச்சவெளி போன்ற இடங்களிலிருந்து தமிழ்ப் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக மாட்டு வண்டில்களிலும் கால்நடையாகவும் ஒரு காலத்தில் சென்று வந்தது சிங்களத்தின் கண்களுக்கு உறுத்தலாக இருந்திருக்கும். இது எதிர்காலத்தில் வடகிழக்கு இணைப்பிற்கு அடிகோலாக அமையுமென்பதன் வெளிப்பாடுதான் இன்று நடைபெறும் குடியேற்றங்கள் ஆகும்.

அருள்மிகு அய்யன் கோயில் தற்பொழுது அருள்மிகு புத்த கோயிலாக மாறியது, தமிழ்மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இறுதியாக நடந்த வன்னி யுத்தத்தின் போது தமிழ்மக்கள் ஏராளமான பேர் கொன்று குவிக்கபட்ட இடங்களில் தண்ணீர் முறிப்புப் பகுதியும் ஒன்றாகும். சர்வதேச அமைப்புகளின் விசாரணையிலிருந்து இலங்கை அரசு தப்புவதற்காக ‘தண்ணீர் முறிப்பு’ என்ற நாமத்தை மழுங்கடிக்கச் செய்வதால் அவ்வாறான ஒரு அனர்த்தம் நடைபெறவில்லை என்று கூறுவதற்கு வசதியாக இருக்கும். இதன் காரணமாக ‘தண்ணீர் ஊற்று’ என்ற பெயருக்குப் பதிலாக குறுந்தூர் என்ற பெயரை இலங்கை அரசு முன்னிலைப்படுத்தி வருகிறது. தண்ணீர் முறிப்புக் குளம் என்ற பழம்பெரும் பெயர் குறுந்தூர் வாவி என்று பெயர்மாற்றம் பெற்றிருக்கிறது.

குமுழமுனையிலிருந்து 5 Km தூரத்தில் அமைந்துள்ள தண்ணீர் முறிப்பு என்ற பழைய கிராமத்தில் ஏறத்தாள 100 தமிழ்க்குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்திருந்தனர். புலிகள் அரசு இறுதி யுத்தத்தின் பின் இடம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்ற இக்குடும்பங்களை மீள்குடியேற விடாது தடுக்கப்படுகின்றனர். தமிழருக்கெதிரான இன அழிப்பை சாதகமாகக் கொண்ட சிங்களத்தின் மற்றுமோர் யுத்தமாக அப்பகுதியில் சிங்கள மீனவ மக்களை இலங்கை அரசு குடியேற்றி வருகிறது.

தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இன ஒழிப்பின் ஒரு பகுதியான ‘சிங்களக் குடியேற்றங்களை’ எவ்வாறு தடுப்பது?
தமிழரின் பாரம்பரிய வாழ்விடங்களில் ஏற்படுத்தப்படும் கலாச்சாரச் சிதைவுகளை எப்படித் தடுப்பது?
இலங்கை இராணுவத்தின் பிடியில் அகப்பட்ட தமிழ்ப் பகுதிகளில் வாழும் பெண்களை வல்லுறவுகளிலிருந்து எப்படி மீட்பது?
வறுமையினால் கையேந்தும் எமது தமிழ் உறவுகளை எப்படி மீட்பது?

இதுபோன்ற பல பணிகள் தமிழ்மக்களின் தலைகளில் சுமத்தப் பட்டிருந்த போதிலும் இவை பற்றி சிந்தியாது எதுவும் நடக்காததுபோல் எம் மத்தியில் பலர் இருந்து வருகின்றனர். அதோடு குழுச்சண்டைகளும், களியாட்டங்களும் வர வர அதிகரித்து வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. தற்காலிகமாக இவற்றையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழரும் ஒரு குடையின்கீழ் ஒன்றுபட்டு இன அழிப்பிற்கெதிராக கிளர்ந்து எழல் வேண்டும்.

பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஈழம் வாழ் தமிழ்மக்களுக்கும் ஒரு பாரிய கடமையும் உண்டு. அதாவது பாதிக்கப்படும் தமிழ்மக்கள் ஆதாரபூர்வமாகவும், எச்சரிக்கையாகவும் செய்திகளை உலக நாடுகளுக்கும், சர்வதேச ஊடகங்களுக்கும், புலம்பெயர் வாழ் தமிழ் ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தல் வேண்டும்.

மலையூர் பண்ணாகத்தான்