சுவிட்சர்லாந்து தேசத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களை மீளவும் சொந்த நாட்டிற்கு அனுப்ப எடுத்துக் கொண்டிருக்கும் நடவடிக்கை ஒன்றும் புதியதல்ல. பலதடவைகள் இப்படியான செய்திகள் புறப்பட்ட போதிலும் ஈற்றில் நெகிழ்வுத் தன்மையோடு முடிவுகள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதை   அறியக்கூடியதாக உள்ளது.

ஆனால், தற்போதைய செய்தியானது வழமைபோல் ‘திருப்பி அனுப்புதல்’ காலாவதியாகிவிடுமோ என்று எதிர்பார்க்கின்ற போதிலும், இலங்கையில் புலிகள் – அரசு யுத்தம் முடிவுக்கு வந்துள்ளமையால் வழமைக்கு மாறாக சாதகத் தன்மையற்ற சாத்தியம் தெரிவதைக் காணலாம்.
 
அகதி அந்தஸ்த்துக் கோரி F, N வதிவிட அனுமதி பெற்றவர்களை மீளவும் தாயகம் அனுப்ப எடுக்கின்ற முயற்சியானது தற்பொழுது அகதி அந்தஸ்த்துக் கோரி வாழ்பவர்கள் அனைவரினதும் பாதுகாப்பு அரண் உடைந்ததாக கருதலாம். இந்த நிலை படிப்படியாக அனைத்து புலம்பெயர் தேசங்களிலும் ஈழத்தமிழர்களுக்கு பாதகமான செயற்பாடுகளை ஏற்படுத்தலாம் என்பதை ஊகம் செய்யாமலும் இருக்க முடியாது. இவை அனைத்தும் இலங்கை அரசுக்கு தேன்வார்க்கும் செய்தியாக அமையும் என்பதை மறுப்பதற்கில்லை.
 
அகதி அந்தஸ்த்துக் கோரியவர்களும்(N அனுமதி), அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டு தற்காலிகமாக வசிக்க அனுமதிக்கப்பட்டவர்களும்(F அனுமதி) திருப்பி அனுப்பப்பட இருக்கிறார்கள் என சுவிஸ் பத்திரிகைகள் கூறியதை மேற்கோள்காட்டி தமிழ் ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. சுவிற்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அண்மைக் காலங்களில் மிக அதிகப்படியாக தாயகம்(இலங்கை) சென்று திரும்பி வந்தமை, திருப்பி அனுப்புவதற்கான பிரதான காரணமென சுவிஸ் பத்திரிகைகள் நீங்கலாக ஊடகங்கள் பல எதிர்வு கூறியிருந்தன.
 
சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்த்துக் கோருபவர்களுக்கான முதல் நடைபெறும் விசாரணையின் போது விசாரணையாளர்களால் பொதுவாக கூறப்படும் செய்தியானது, ‘தத்தமது பிரச்சனைகளை மாத்திரம் தெரிவிக்க வேண்டுமே தவிர பொதுவான, மற்றயவர்களுக்கு நடந்த சம்பவங்களை தமக்கு சாதகமாக்குவதற்கு பிரஸ்தாபிக்கலாகாது’ என்பதாகும்(எனது அனுபவம் இதற்கு ஒரு சாட்சியாகும்). இதனடிப்படையில் நோக்குமிடத்து, சுவிசிலிருந்து தாயகம் சென்று வந்தவர்களின் இலக்கு அவர்களின் தனிப்பட்ட விடயமாகும்.  தாயக அனர்த்தம் காரணமாக தற்பொழுது அகதி அந்தஸ்த்துக் கோரியவர்கள்(F, N), அதுவும் பல காரணங்களால் தாயகம் செல்லமுடியாமல் விசாரணைகளை எதிர்நோக்கி சுவிட்சர்லாந்து முகாம்களில் பல இன்னல்களையும் தாங்கிக்கொண்டு வாழ்பவர்களின் வாழ்வியலோடு தொடர்புபடுத்தி முடிச்சுப் போடுவது எந்த வகையிலும் நியாயமாகாது. அதாவது, சுவிஸ் விசாரணையாளர்களின்   கூற்றோடு மேற்கூறியவைகளை ஒப்பிட்டு நோக்கின் ‘தத்தமது பிரச்சனைகள்’ சம்பந்தமாக ஏதும் அறியாத, தொடர்பற்ற ஏனையவர்கள் மீது(F, N அனுமதி உடையவர்கள்) சுமத்த நினைப்பது சுவிஸ் விசாரணையாளர்கள் ஏதோ ஒரு   உள்நோக்கை கருத்திற்கொண்டு அடிப்படை கொள்கையிலிருந்து விலகியுள்ளார்கள் என்ற முடிவுக்கு வருவதை மறைக்க முடியாது.
 
இவற்றுக்கெல்லாம் ஒரு சாதகமான முடிவை காணும்பொருட்டு F , N அனுமதி உடையவர்களின் நலன் உட்பட மற்றும் பொதுவான ஏனைய புலம்பெயர் தமிழர்களின் நலன்களையும் கருத்திற்கொண்டு, அனைத்துத் தமிழர்களும் அனைத்துப் பேதங்களையும் மறந்து கூட்டு முயற்சியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 
முள்ளை முள்ளால்…….
 
சுவிட்சர்லாந்தில் அகதி தஞ்சம் கோரி வாழ்வது ‘சலுகையா?’, ‘உரிமையா?’ என்பதை முதலில் தெரிந்துகொளல் வேண்டும். அண்மையில் பல அமைப்புகளால் வெளியிடப்பட்ட ஆலோசனைகள் பெரும்பாலும் ‘உரிமை’ யை தளமாகக் கொண்டவையாகும். இதில்த் தான் பல முரண்பாடுகள் உண்டு. அதாவது சலுகையானவற்றை சாதகமாக்குவதற்கு உரிமையாளர்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டும்.

இந்த உரிமையாளர்கள் யார்?

* சுவிட்சர்லாந்து தேசத்தில் அமுல்ப்படுத்தப்படும் சட்டங்கள் யாவும் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்படுவதில்லை. நேரடி, குடியியல்(சிவில்), குற்றவியல் பிரச்சனைகளுக்கு நீதிமன்றம் பொறுப்பு. சுவிஸ் மக்களின் நலன்களையும், தேவைகளையும் நோக்காகக் கொண்ட விடயங்களில் மக்களின் விருப்புக்களே அதாவது மக்களின் கருத்துக் கணிப்பின் முடிவே நாட்டின் அங்கீகாரமாகும். இவை நிரந்தரமான மாற்றங்களை ஏற்படுத்தும்.தமிழர் பிரச்சனையைப் பொறுத்தவரையில், சுவிஸ் மக்களின் விருப்புக்களை சாதகமாக்கிக் கொண்டால் தமிழர் வாழ்வியலும் சாதகமாகும். ஆகவே சட்டங்களை மாற்றும் ‘உரிமையாளர்கள்’ சுவிஸ் பூர்வீகக் குடிமக்களாக்கும்.

* மக்களால் தெரிவு செய்யப்பட்ட புலம்பெயர் தமிழர் அமைப்புகளும், பொதுத் தன்மையுடன் இயங்குகின்ற தமிழர் நலன்பேணும் அமைப்புக்கள்(கோயில், பாடசாலை, ஊர்சார்ந்த அமைப்புகள், விளையாட்டு அமைப்புகள், கலை இலக்கிய ஒன்றியங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவை)  இது சார்ந்த சுவிஸ் சட்ட வரன்முறைகளில் தெளிவடைதல் வேண்டும். மேலும், சட்டங்களின் ஊடாகவும் மனிதாபிமானங்களின் ஊடாகவும் செயற்படவேண்டிய பணிகள் பற்றி பிற தேசத்து புத்திஜீவிகளின் ஆலோசனைகளைப்   பெறவேண்டும்.

* தமிழரின் பிரச்சனைகளை வெளிக்கொண்டுவருவதற்கான பிறிதொரு வழியாக சுவிஸ்நாட்டில் வாழுகின்ற தமிழர்கள் சுவிஸ் பிரஜைகளாகி சுவிஸ் முக்கியஸ்தர்களிடம் கூறுவதற்கான உரிமைகளைப் பெறவேண்டும். வெறுமனே ஆண்டுகளை மட்டும் கணக்கில் கொண்டு ‘பழைய ஆள்’ என்ற தகமை மட்டும் போதுமானதல்ல. இந்த நாட்டின் கல்வி, மொழி, வரலாறு, கலாசாரம் போன்றவற்றில் அறிவியல் ரீதியாக வளர்ச்சியடைதல் அவசியமானதாகும்.

* இலங்கையில் தமிழருக்கு எதிராக ஏற்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கும் இன அழிப்புப் பற்றி சுவிஸ் மக்களுக்கு தெளிவுபடுத்தி அவற்றை விளங்கிக் கொள்ளுவதற்கான வழிகளைக் கோலுவதோடு தமிழரின் கோரிக்கைகள் நியாயமானதென ஏற்றுக்கொள்ள வைக்கப்படல் வேண்டும். குறிப்பாக எமது நிலையை சுவிஸ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தி அவர்களின் ஆதரவுடன் அரசியல் கட்சிகளுக்குள் கால் பதிப்பதோடு தமிழரின் ஒன்றுபட்ட சக்தியை ஒரு தீர்மானிக்கும் சக்தியாக மாற்றி பாராளுமன்ற அங்கத்தவர்களாக வேண்டும்.

உதாரணமாக, 100 பாராளுமன்ற(Grosse Rat) ஆசனங்களைக் கொண்ட ‘பாசல்’ (Basel) மானிலத்தில் கணிசமான ஆசனங்கள் தமிழர்களால் கைப்பற்றப்படும்போது, அவை பாராளுமன்றத்தில் தீர்மானிக்கும் சக்தியாக மாறும் வாய்ப்புண்டு.

மேற்கூறிய இம்மூன்றையும் இலக்காகக் கொண்டு சுவிஸ்வாழ் தமிழ்மக்கள் ஒற்றுமையுடன் நகரும் பட்சத்தில் வாழ்வியல் அந்தஸ்த்துக்கும் அப்பால் தமிழர் தாயகத்தின் விடிவும் கூட வெளிப்பதற்கு வாய்ப்புண்டு. இலங்கை அரசை பொருளாதார ரீதியாக ஒரு அசைவு தளத்திற்கு கொண்டுவந்து நிறுத்தலாம். இதுவே நாம் பெறப்போகும் ஆகக் கூடிய வெற்றியாக கூட அமையலாம்.

கனக கடாட்சம் & முரளிநடேசன்

http://www.grosserrat.bs.ch/mitglieder/sitzplan/_/sitzplan_0913_farbig.pdf