இலங்கையிலே தமிழ்மக்களின் கலை, கலாசாரம், மொழி, தாயகம், அரசியல் உரிமை போன்ற பலவற்றை சிங்களம் தனது மேலாதிக்கத்தால் கபளீகரம் செய்து தற்பொழுது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதுபோல் தமிழர் நிலை ஆகிவருவதை காலம் காலமாக அவதானித்து வருகிறோம்.

இதிலே, மேலும் தமிழ்மக்களுக்கு உரித்தான பண்டிகைகளும் தேய்ந்து உருமாறி வருவதை எம்மில் எத்தனை பேர் அவதானித்திருப்போம் என்பது தான் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்

திராவிடரால் அனுஷ்டிக்கப்பட்டு வந்த சித்திரைப் புத்தாண்டானது எதுவித ஆதார தொடர்புமின்றி சிங்கள தமிழ் புத்தாண்டென, சிங்கள பௌத்தர்களுக்கும் உடமையானதென்பது என்பதை கண்டுபிடிப்பதானது ஒரு கடமையாக கொள்ளல் அவசியம்

ஆதாரத்திற்காக ஒரு விடயத்தை மாத்திரம் சிந்திப்பது இலகுவாக இருக்கலாம்

சித்திரைப் புத்தாண்டு பௌத்தர்களுக்கும் உரித்துடையதெனக் கொண்டால் ஏன் இலங்கையில் வாழும் சிங்கள பௌத்தர்கள் மட்டும் கொண்டாட வேண்டும்? உலகிலே பௌத்தர்கள் பரந்துபட்டு வாழும் நாடுகளான சீனா, யப்பான், பர்மா, பூட்டான் போன்ற எத்தனை நாடுகளில் பௌத்தர்கள் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள் என்ற கேள்வியைக் கேட்டால் பதில் பூச்சியம்தான். ஆனால் இலங்கையில் வாழும் சிங்கள பௌத்தர்கள் மட்டும் சித்திரைப் புத்தாண்டை சிங்கள தமிழ் புத்தாண்டென கொண்டாடுவதன் நியாயம் என்ன

சித்திரைப் புத்தாண்டை சிங்களப் புத்தாண்டாக மாற்றியவர்களின் பக்கம் நின்று, அது சிங்களவர்களுக்குரியதுதான் என நியாயம் கற்பித்து திராவிடருக்கே உரித்தான பண்டிகையான சித்திரைப் புத்தாண்டை சிங்களவருக்குரித்தான பண்டிகையென தாரை வார்த்துக் கொடுக்க முயலும் மேதாவிகள் இதனை புரிந்துகொள்ளல் வேண்டும்

தைப்பொங்கலை தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி கூறிவிட்டார் என்பதற்காக ஈழத்தில் எமது உரிமையை விட்டுக்கொடுப்பது பொருத்தமானதாக அமைய மாட்டாது. இதற்கும் மேலாக பெரும்பாலான தமிழ் நாட்காட்டிகளில் சித்திரைப் புத்தாண்டென குறிப்பிடாமல் சிங்கள தமிழ் புதுவருடம் என குறிப்பிட்டிருப்பது மேலும் எமது உரிமை இழப்பிற்கு சான்றாக அமைகிறது. பௌத்தர்களுக்கு உரித்தான பண்டிகையாக இது இருந்திருந்தால் இந்தியாவிலிருந்து, குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் நாட்காட்டிகளில் பௌத்த அல்லது ஆரிய புதுவருடம் என குறிக்கப்பட்டு கொண்டாடியிருக்கப்பட வேண்டும். ஆனால் அப்படி கொண்டாடியிருப்பதற்கான சான்றுகள் ஏதுமில்லை. ஏன் பௌத்த நாடுகளின் நாட்காட்டிகளில் இப்பண்டிகை பற்றி ஒருவரிச் செய்திகூட இல்லை என்பதை கவனிக்க வேண்டும்

இந்தியா, இலங்கையில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் இந்து பண்டிகைகள் யாவும் சூரியனை மையமாகக் கொண்டே கணிப்பீடு செய்யப்படுகிறது. தைப்பொங்கலானது சூரியனுக்கான நன்றிப் பண்டிகை. தீபாவளிப் பண்டிகை அமாவாசையை ஒட்டி வருகிறது. அதேபோலத்தான் சித்திரைப் புத்தாண்டின் தோற்றமானது வருடத்தின் சித்திரை மாதத்தில் சூரியன் மீனராசியிலிருந்து மேடராசிக்கு பிரவேசிக்கும் நேரமே புத்தாண்டின் உதய நேரமாக கணிப்பீடு செய்யப்படுகிறது

குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு (சித்திரை மாதம்) போன்ற மாநிலங்களில் புதுவருடம் வெவ்வேறுபட்ட மாதங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆகவே அங்குள்ள பௌத்தர்கள் அல்லது ஆரியர்கள் சித்திரை மாத புத்தாண்டை தமதாக்கிக் கொள்ளவில்லை. அதுபோல, சிங்கள பௌத்தர்கள் எந்தவித சாஸ்திர முறையுமின்றி, அல்லது சூரியனை மையப்படுத்தி சித்திரைப் புத்தாண்டை கைக்கொள்ளவில்லை. பன்நெடுங்காலத்திற்கு முன் திட்டமிட்டு திராவிடருக்கே உரித்தான பண்டிகையை தமதாக்கி தமிழர்களின் மேலோங்குகையை தடுப்பதே சிங்கள பௌத்தர்களின் நோக்கமாக அமைந்திருக்க வாய்ப்புகள் அதிகம் எனலாம்

முன்னே வந்த கொம்பை பின்னே வந்த செவி மறைப்பதுபோல திராவிடரின் சித்திரைப் புத்தாண்டை சிங்கள தமிழ் புதுவருடமாக்க இடமளிக்கலாகாது. சித்திரைப் புத்தாண்டை பேதமின்றி இணைந்து கொண்டாடி மகிழலாம். ஆனால் பேரினவாத மேலாதிக்கத்தை கொண்டு எமக்குரிய உரிமைத்துவத்தை பறிக்க முனைதலை எவ்வழியிலும் அனுமதிக்கலாகாது

சித்திரைப் புத்தாண்டு ஆரியர்களுக்குரியது என்று கற்பிதம் செய்வதும், ஆரியர்களின் வழித்தோன்றல் சிங்களவர்கள் (இதனை பிறிதொரு அத்தியாயத்தில் விரிவாக காண்போம்) என்ற ஆதாரமற்ற செய்தியை கூறுவதும் எமது இனத்தை நாமே குழிதோண்டிப் புதைப்பதாக அமையலாம்

கனகசபை தேவகடாட்சம்