ஐ. நா. சபையின் மனிதாபிமான உதவிகளுக்கான பிரதி இணைப்பாளர் கத்தரின் பிராக் , வெள்ள அனர்த்தம் நிகழ்ந்த இடங்களைப் பார்வையிட இலங்கை வந்துள்ளார். அவசர அடிப்படை உதவிகளை மதிப்பீடு செய்து, 51 மில்லியன் டொலர் நிதியுதவி தேவையென ஐ. நா.வும் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை 50 மில்லியன் என்பது பெரிய தொகையாக இருக்கலாம். ஆனால் நாளொன்றிற்கு பல மில்லியன் டொலர்களை ஈராக், ஆப்கானிஸ்தானில் செலவு செய்யும் நாடுகளுக்கு இதுவொன்றும் பெரிய சுமையல்ல. ஆயினும் இந்தியா, சீனா உட்பட பல மேற்குலக நாடுகள், கிழக்கில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிவதைக் காணலாம்.

இயற்கை அழிவினால் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் அவலப்படுகையில் வடக்கில் அரச செலவில் பொங்கல் விழாக்களும் நடைபெறுகின்றன. கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் தினசரி மீட்கப்படுகின்றன. இரு நாட்களில் 4.6 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான நகைகளும், யாழ். குடாவில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாருடன் யார் கூட்டுச் சேர்வது என்கிற காய்நகர்த்தல்கள் தீவிரமடையும் அதேவேளை கட்சியாகப் பதிவு செய்ய அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் சில, தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்ட தகவல்களும் வெளி வருகின்றன.

இவை தவிர இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளிலுள்ள படைத் தளபதிகளும் தொடர் ஓட்டப் போட்டியில் இணைந்தது போன்று, இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர். மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமொன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த இந்திய வான் படைத் தளபதி பிரதீப் வசந்த் நாயக் “இலங்கையின் பாதுகாப்பும் ஒருமைப்பாடும் இந்தியாவிற்கு முக்கியமானதெனவும், இலங்கை பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே, இந்தியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்” என்று சீனாவிற்குத் தெரியாத விடயமொன்றினை [?] ஊடக சந்திப்பில் வெளிப்படுத்தியிருந்தார்.

அதாவது தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம், இலங்கையின் பாதுகாப்பிற்கு ஆபத்தாக அமையுமென்று நாயக் கருதுவது போலுள்ளது. 80 களில் ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களிற்கு ஆயுதங்களும், பயிற்சியும் வழங்கும் போது ஏற்படாத இலங்கையின் பாதுகாப்பு குறித்த அக்கறை, இப்போது இந்தியாவிற்கு ஏன் ஏற்படுகிறது என்று புரியவில்லை.

இந்திய வான் படைத் தளபதி புறப்பட்ட அடுத்த கணம், பாகிஸ்தான் இராணுவத் தளபதி அஸ்பக் கஜானி, மூன்று நாள் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். ஆனாலும், பாரத தேசத்தின் உயர் நிலை அதிகாரிகள், அமைச்சர்கள், இலங்கை வருகை தரும் நாட்களில், சீனா, பாகிஸ்தானிலிருந்து நபர்கள் வருவது வாடிக்கையான விடயம்.

இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபாராவ் அவர்கள், யாழ். குடாவில் நின்ற வேளை, 200 பேரடங்கிய சீனக் குழுவொன்று கொழும்பில் வந்திறங்கியது. அதேபோன்று வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா அம்பாந்தோட்டையில் இந்தியத் துணைத் தூதரகத்தை திறந்து கொண்டிருக்கும் போது பாகிஸ்தான் தலைவர் ஒருவருக்கு கொழும்பில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.

ஆகவே, இந்தியாவின் கேந்திர முக்கியத்துவமிக்க பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலுள்ள நாடுகளில் ஏனைய நாடுகளின் ஆதிக்கமானது பொருளாதார ரீதியிலோ அல்லது படைத் துறை வழங்கல் சார்ந்து இருப்பதோ இந்திய தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதைத்தான் விமானப்படைத் தளபதி நாயக், மறைமுகமாகக் குறிப்பிட்டாரென்று கணிப்பிடலாம்.

போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல் விவகாரங்களைப் பிரயோகித்து, தன் மீது அழுத்தங்களைச் சுமத்த, மேற்குலகம் முயற்சிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளும் மஹிந்த அரசு, அதனை எதிர்கொண்டு சமாளிப்பதற்கு இந்தியாவுடன் ஒரு வழுவழுத்த உறவு நிலைமையைப் பேண வேண்டுமென்கிற உத்தியைக் கையாள்வது போலுள்ளது.

அதேவேளை சீனா குறித்த சில சந்தேகங்களும் இலங்கை அரசிற்கு உண்டென்பதை நிராகரிக்க முடியாது. ஏனெனில் தென் சூடான் பிரிந்து செல்வதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பு குறித்து சீனா தெரிவித்த ஆதரவுக் கருத்துக்கள் சில ஐயப்பாடுகளை உருவாக்கும். சூடான் அதிபர் அல் பசீரின் அரசு, தென் சூடான் மற்றும் டாபூர் பிரதேச மக்கள் மீது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளின் சீனாவின் படைத்துறைப் பங்களிப்பு அதிகமானது.

ஆனால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சூடான் அதிபர் அல் பசீர், ஒரு போர்க் குற்றவாளியாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, மேற்குலகின் ஆதரவோடு நாடு பிளவுபடும் நிலை நோக்கி நகரும் போது, சீனாவும் தனது எண்ணெய் வர்த்தகத்தைக் கருத்தில் கொண்டு இதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியது.

ஆகவே, தனது வர்த்தக நலன், சந்தை உறவு என்கிற முதன்மையான விவகாரங்கள் மேலெழும் போது சீனாவின் நிகழ்ச்சி நிரலும், அதன் போக்கும் சடுதியாக மாற்றமடையும் என்பதனை இலங்கை ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்கின்றார்கள். அத்தோடு புலம் பெயர் மக்களால் உருவாக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு தென் சூடான் விடுதலை இயக்கம் விடுத்திருந்த அங்கீகாரம் கலந்த அழைப்பும், இலங்கை அரச தரப்பில் பதற்றத்தை உருவாக்கியிருக்கும்.

புதிதாக உருவாகப் போகும் தென் சூடான் நாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அலுவலகமொன்று உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டால் அது பெரும் பின்னடைவாக தமக்கு அமைந்து விடுமென அச்சமடையும்  அரசு, சில அவசர நகர்வுகளை மேற்கொள்ளுமென எதிர்பார்க்கலாம்.

கடந்த செவ்வாயன்று அமெரிக்காவின் முன்னாள் பிரதி வெளிவிவகாரச் செயலாளர் ரிச்சாட் ஆர்மிரேஜ் திடீர் பயணமொன்றினை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த விவகாரம் குறித்து பல கருத்துப் பரிமாற்றங்கள் தற்போது நிகழ்கின்றன. இச்சந்திப்பில் அதிபருடன், அவரின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளியுறவு அமைச்சின் செயலாளர் ரொமேஸ் ஜெயசிங்க ஆகியோர் உடனிருந்ததாகத் தெரிய வருகிறது.

இதனையடுத்து உடனடியாகவே ஜனாதிபதி அமெரிக்காவிற்கு சென்ற விடயமும், இஸ்ரேலில் தங்கியிருந்த பாதுகாப்புச் செயலர் கோத்தபாய இராஜபக்ஷ அங்கு சென்ற நிகழ்வும் மிக முக்கிய விவகாரமென்று அங்கு பேசப்பட்டிருப்பதாக ஊகிக்கப்படுகின்றது. தற்போதைய ஆட்சியின் தீர்மானகரமான இயங்கு சக்தியின் மையப்புள்ளிகளாகவிருக்கும் ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரையும் அமெரிக்கத் தரப்பினர் சந்திப்பது குறித்து தமிழ் மக்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

இந்தியாவின் கையை மீறி, இலங்கை நகர ஆரம்பித்திருப்பதாக உணரும் அமெரிக்கா, பாரிய அழுத்தமொன்றினைக் கொடுக்க, இந்த உடனடிச் சந்திப்பினை ஆமிரேஜ் ஊடாக ஏற்பாடு செய்திருக்கலாம்.

பரவலாகப் பேசப்படும் சோதிடர் கொடுத்த 10 நாள் அஞ்ஞாத வாசமோ அல்லது சீன அதிபர் ஷû சிந்தாவோவின் அமெரிக்க விஜயமோ இதில் பெரும் பங்கினை வகிப்பதாகக் கூற முடியாது. இலங்கை விவகாரம் தொடர்பாக, ஐ. நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களால் உருவாக்கப்பட்ட நிபுணர் குழுவினரின் செயற்பாட்டு கால நீடிப்பும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு தென் சூடான் விடுதலை அமைப்பு விடுத்த அழைப்பும் ஜனாதிபதியின் பயணப் பின்னணியின் அடிப்படையாக இருக்குமென நம்பப்படுகின்றன.

ஆனாலும் அமெரிக்கப் பயணத்தை நிறைவு செய்து கொண்டு நாட்டிற்குத் திரும்பியவுடன் இவர்கள் விடுக்கும் அறிக்கைகள், நகர்வுகளை வைத்து அமெரிக்காவில் என்ன நடந்திருக்குமென்பதைப் புரிந்து கொள்ளலாம். அதேவேளை 20 இலட்சம் மக்களைக் காவு கொண்ட, சூடானின் 22 வருட கால உள்நாட்டுப் போரினால் பாதிப்புற்ற, புலம் பெயர்ந்து வாழும் தென் சூடான் மக்கள், இந்த தனி நாட்டிற்கான வாக்கெடுப்பில் கலந்து கொண்ட விடயமும், பேரினவாதிகளுக்கு நிச்சயம் அச்சுறுத்தலாக அமையும். சமகால நிகழ்வுகளின் அடிப்படையில் அமெரிக்கா சொல்ல வரும் செய்தியினை, ஆட்சியிலுள்ள  சக்திகள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.