வெளிச்சத்துக்கு வராது முடங்கிக்கிடக்கும் சுவிஸ் கொள்ளையர்கள் பற்றி பலவாறான கதைகளை அறிந்துள்ளோம். ஆனாலும் ஒரு காலத்தில் ஈழ விடுதலைக்காக முன்னின்று உழைத்தவர்கள் என்ற வகையில் ஒரு வித பற்றுதல் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. இந்தக் கொள்ளையர்கள் சம்பந்தமாக அவர்களுக்கு ஒரு கடமை இருக்கின்றது என்பதை உணரவேண்டிய தருணம் இதுதான். 

உண்மையாகவே ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஏராளமான பணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு இவர்கள் உறுதுணையாய் இருந்தவர்கள். இந்தக் கொள்ளையர்களைப் பொறுத்தவரையில் புலிகளின் பின்னடைவை(மே 2009) புலம்பெயர் நாட்டில் குறிப்பாக சுவிசில் முதல் முதல் அறிந்து கொண்டவர்களும் இவர்களே. இந்த உண்மையெல்லாம் முழுப்படியாக அறிந்த பின்னரே அதாவது, இனிமேல் சேர்த்த பணத்தை வன்னிக்கு அனுப்ப வேண்டிய தேவையில்லை என அறிந்து தங்களுக்குள் முடக்க திட்டம் போட்டிருந்திருப்பார்கள். துரதிஸ்டவசமாக ஒன்றரை வருடங்களிற்குப் பின்னர் இந்தக் குட்டு உடையுமென்று எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்கள். குளிரிலும், நித்திரையின்றியும் நொந்து உழைத்த பணத்தை ஏமாற்றிப் பிழைப்பதற்கு தர்மம் இடம் கொடுக்காது என்பதை கண்கூடாக காண்கிறோம்

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இலங்கை இராணுவத்தினால் ஏற்படுத்தப்பட்ட அழிவுக்கு அடுத்தபடியான சமமான அழிவென்றால் தற்பொழுது விடுதலைப் புலி ஆதரவாளர்களால் ஏற்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கின்ற துரோகத்தனமான யுத்தத்தையே குறிப்பிடலாம். தமிழீழ விடுதலைப்புலிகளை காப்பாற்ற வேண்டிய கடமையும் இவர்களுக்குத் தான் இருக்கின்றது. ஏனெனில், அறிந்தோ அறியாமலோ விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாதப் பட்டியலில் நீடித்து நிலைக்க துணை நின்றுகொண்டிருப்பவர்கள் ஆவார்

விடுதலைப்புலிகளையும், தமிழ்மக்களையும் உண்மையிலே காப்பாற்ற வேண்டிய மன எண்ணம் இந்தக் கொள்ளையர்களுக்கு இருக்குமானால், இன்னும் காலம் செல்லவில்லை அதற்கான வழியைக் கூறுவது நல்லதாக அமையலாம்.

இந்த நபர்களால் விடுதலைப்புலிகளுக்குத்தான் நிதி சேகரிக்கப்பட்டது என்பதும் உண்மை.

விடுதலைப் புலிகளின் முள்ளிவாய்க்கால் பின்னடைவு அப்பணத்தை அவர்களுக்கு கொடுக்கவேண்டிய தேவை இல்லையென நினைத்ததும் உண்மை.

உரிமை கோரப்படாமல் இருக்கும் அப்பணத்திற்கு நாமே உரிமையாளராகிவிடுவோமென நினைத்ததும் உண்மை.

இப்படி அகப்படுவோமென எண்ணாமல் இருந்ததும் உண்மை.

அதனால் தென்படும் ஒரேயொரு வழி என்னவென்றால் மேற்குறிப்பிட்ட அத்தனை விடயங்களிற்கும் உரிமையாளரென்ற உண்மையை நிதி தந்த மக்களிடம் ஒப்புக் கொள்வது நேர்மையாகும். அதனையடுத்து விடுதலைப்புலிகள் மேல் உண்மையான பற்றிருந்தால் இந்தக்களவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்றும், இந்தக் களவுக்கு நாமே பொறுப்பாளிகள் என்றும் சர்வதேசம் அறியும்படி பிரகடனப்படுத்தல் வேண்டும். இதனால், விடுதலைப்புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம் இல்லையென்பதையும், தமிழ்மக்கள் கொள்ளையர்கள் இல்லையென்பதையும், தமிழர்போராட்டம் காலம் காலமாக நிலைத்து நிற்குமென்பதையும் உறுதிப்படுத்தலாம்

தாய்நாட்டிற்காக தமது உயிர்களையே தியாகம் செய்த மாவீரர்களின் தியாகங்களிற்கு ஒப்பீடாக இல்லாதுவிடினும் உங்களால் எங்கள் தேசியத்திற்கு ஏதோ ஒரு நன்மை செய்தவர்களாகக் கருதலாம்

நாகலிங்கம் மதியழகன்

mathiyalakan1@hotmail.com