‘இராகுல் காந்தியின் ஓநாய் அழுகை?’
 
ஈழத்தமிழர்களின் துன்பியல்கள் பல தேசங்களின் அரசியல் காய் நகர்த்தல்களாக அமைவது ஒன்றும் விசித்திரமில்லை. எதிர்காலங்களில் இலங்கை அரசியல் நிலையை விட இந்திய அரசியல் நிலையில் தான் மிகுந்த தாக்கத்தை செலுத்தப்போகின்றதென்பது   அரசியல்  அவதானிகளின் கருத்து. இன்றைய பரபரப்பூட்டும் ஈழத்தமிழர்களின் செய்தியில் இராகுல் காந்தி ஈழத்தமிழர்கள் மேல் காட்டும் ஒரு விதமான அக்கறை குத்தியுரைக்கும் செய்தியாக மாறியுள்ளது. இராகுல் காந்தியின் பாசமழை பற்றி பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் இருக்கலாம்.

இராகுல் காந்தி சார்ந்த அரசியல்ப் பார்வை இப்படி அமைகிறது.
 
இராகுல் காந்தி எடுக்கும் நிலைப்பாடு வெறுமனே ஒரு காந்தி குடும்பத்தின் முடிவாக இருக்க முடியாது. ஏறத்தாள முழு இந்தியாவையும் நோக்கிய கருத்தாக அமையும். ஒரு குறிக்கப்பட்ட சில மாத காலங்களின் முன்னதாக தந்தையான இராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதியாக இருக்கும்  நளினி போன்றோரின் விடுதலைக்கு முழு எதிர்பையும் வெளிப்படுத்தியவர் இராகுல் காந்தி என்பதை மீள்நினைவில் கொள்வோம். ஈழத்தமிழர்கள் மேல் இராகுல் காந்தி கொண்ட சடுதியான அக்கறை ஒரு ‘அந்தர் பல்டியாக’ இருந்தாலும் கூட அதை ஈழத்தமிழர்கள் நலனுக்கு சார்பாக எவ்வாறு மாற்றி அமைக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய சவால்.
 
தமிழ்நாடு, இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. டெல்லி அரசு தமிழ்நாட்டு அரசியலுடன் ஒரு சாதகமான உடன்பாட்டை ஏற்படுத்தாத பட்சத்தில் அதன் ஆயுட்காலத்தை நீடிப்பதென்பது இயலாத காரியம்.
 
தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் நிலைப்பாட்டை அவதானிக்கும்   போது, தி. மு. கவின் அரசியல் அகவை திரு மு. கருணாநிதியோடு மட்டுப்படுத்தப் பட்டிருப்பதை  காணக்கூடியதாக இருக்கிறது. முதலமைச்சர் கருணாநிதியின் அரசியல் யாத்திரை முற்றுப்பெறும் பட்சத்தில் உள்வீட்டுச் சண்டைகளாக (அழகிரி, கனிமொழி, ஸ்டாலின்) மாறி இறுதியில் தமிழ்நாட்டின் அரசியல் பொதுச் சந்தையில் வந்து நிற்கும். அப்போது ஈழத்தமிழர்களின் அனர்த்தங்களும், புலிகளுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடும் கருப்பொருளாக இருக்கும். அந்த வேளையில் ஈழத்தமிழர்களுக்கு சார்பாக நின்ற தமிழர் அமைப்புகளை அரியணை ஏற்றுவதற்காக தமிழ்நாட்டு மக்கள் முண்டியடிப்பார்கள். இந்த நிலையில் சீமான், கொளத்தூர் மணி, இராமதாஸ், வைக்கோ போன்றோர்களின் கூட்டு மிகப்பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும்.
 
கலைஞர் கருணாநிதியைப் பொறுத்தவரையில் அடுத்த தேர்தல் வரை தனக்கொரு சாதகமான நிலை ஏற்படாதென காங்கிரஸ் கட்சி நினைத்திருக்கலாம். இதற்கு ஒரு இணைப்பாளராக சோனியாவையோ அல்லது மன்மோகன் சிங்கையோ நியமிப்பது தமிழ்நாட்டு மக்களை திருப்திப் படுத்தாது. இதற்கு அடுத்த நிலையில் உள்ளவராக இராகுல் காந்தியை பொருத்தமானவராக சிந்தித்திருக்கலாம். அதற்கு பிறிதொரு காரணமாக அவரது எதிர்கால பிரதமர் பதவியையும் காங்கிரஸ்காரர் கருத்தில் கொண்டிருக்கலாம். இது ஒன்றும் பிழையானதல்ல. அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா.
 
தி. மு. கவின் சரிவின் பின்னர் கோலோச்சப் போவது ஈழத்தமிழர் சார்பான கூட்டணியே. ஆகவே  ஈழத்தமிழர்கள் மேல் அக்கறை காட்டுவதுபோன்ற  நடவடிக்கைகளை  காங்கிரஸ் கட்சி இப்போதே மேற்கொள்ளுகிறது. ஒருவேளை எதிர்காலத்தில் இந்த கூட்டணியை கைப்பற்றுவதற்கான திட்டமாகக் கூட இருக்கலாம்.
 
 அரசியலைப் பொறுத்தவரையில் நிலைப்பாடுகள் மாறுவதென்பது நிமிடக் கணக்குகளுக்குள்   உள்ளது. இதனை ஈழத்தமிழர்களுக்கு சாதகமாக எப்படி மாற்றவேண்டும் என்பதுதான் அனைவருக்கும் முன்னாலுள்ள சாணக்கியத்துக்கான சவாலாகும். ஈழத்தைப் பொறுத்தவரையில் ஆயுதப் போராட்டம் ஒய்வடைந்த நிலையிலும், ஜனநாயக(தர்ம) யுத்தம் ஓங்கிய நிலையிலும் இருப்பதைக் காணலாம். ‘ஜனாதிபதி மகிந்தாவின் இங்கிலாந்து வருகையும் செல்கையும்’ என்பது தமிழர்களின் மாபெரும் வெற்றியை சர்வதேசத்திற்கு கூறியதை நினைவு படுத்திக் கொள்வோம். இதே போன்று சாணக்கியமாக சிந்தித்து இராகுல் காந்தியின் ‘ஓநாய் அழுகையை’ ஈழத்தமிழர்களுக்கு சாதகமாக அமைத்துக் கொள்ளல் வேண்டும். டெல்லி நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர்களுக்கு, இலங்கை அரசு ஏற்படுத்திய கொடுமைகளை பட்டவர்த்தனமாக கூறுவதற்கு தமிழ்நாட்டிலிருந்து ஒரு அரசியல் சக்தி இருக்குமானால் ஈழத்தமிழர்களின் விடுதலை நோக்கிய பயணத்தில் பாதிவழியை அடைந்ததாகும். குறிப்பாக  இந்திய தமிழ்நாட்டின் அசைவு, இலங்கை அரசியலிலும் அதிர்வை தெறிக்கச் செய்யும் என்பதை மறந்துவிடல் ஆகாது.

கனக கடாட்சம்
trincokadatcham@yahoo.com