இந்த தலைப்பைப் படிக்கும்போது ஒரு விடயம் தெளிவாகப் புலப்படுகிறது. அதாவது இலங்கையில் விடுதலைப்புலிகளின் வளர்ச்சியையும் தமிழர்கள் மத்தியில் அவர்கள் பெற்று வருகின்ற ஆதரவுத்தளத்தையும் அதன்மூலம் தமிழீழம் விரைவில் சாத்தியப்பட்டுவிடலாம் என்பவற்றைப் ஏற்றுக்கொள்ளப் பிடிக்காத இந்திய புலனாய்வுப்பிரிவினரும், ஆட்சியாளர்களும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருடனும், வேறும் பல வெளிநாட்டுப் புலனாய்வாளர்களுடனும், ராஜீவ் குடும்பம் அரியணை ஏறக்கூடாதென்ற எண்ணமுடைய இந்திய அரசியல் வாதிகளுடனும் சேர்ந்து அன்றைய சூழ்நிலையில் எந்த வழியில் அப்பாவி இலங்கைத்தமிழ் அல்லது தமிழ் இளைஞர்களை தவறாக பயன்படுத்தினால் ஒட்டுமொத்த தமிழ்மக்களது எதிர்காலமே இல்லாமல் போகுமோ அதை தமக்கு சாதகமாக பயன்படுத்தி  ராஜீவ் காந்தியைக் கொன்றார்களோ அதே மாதிரியான திட்டம் மீண்டும் இந்தியாவில் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது போல் தெரிகின்றது.

‘ராஜீவ் படுகொலை’ என்ற ஒரு கல்லில் பல அரசியல் இலாபங்கள் என்ற மாங்காய்கள் இன்றுவரை வீழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதனால் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளாக உலகெங்கும் சித்தரிக்கப் பட்டுவிட்டிருந்தனர் (இந்திய ஆட்சியாளர்களின் கனவு). ஒரு இளம் துடிதுடிப்பான, எதிர்காலத்தில் ஒரு உலக வல்லரசை உருவாக்கக்கூடிய, தற்போதைய வல்லரசுகளுக்கு பயப்படாமல் அணுவாயுதம், நீண்டதூர ஏவுகணை, விண்வெளி ஆய்வுகூடம் போன்றவற்றை தயாரிக்கும் முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரு அரசியல் சாணகியனான ராஜீவ் காந்தியை இந்தியா இழந்தது(சில இந்திய அரசியல்வாதிகளின், அமெரிக்க, சீன, பாகிஸ்தான், மற்றும் பல நாடுகளின் கனவு). இலங்கை அரசு இதனை சாதகமாக, தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் உச்ச நிலையை அடைந்த வேளை இதனை பாரிய பின்னடைவுக்குள் தள்ளிவிட பயன்படுத்தியது. இது இலங்கையின் பலகாலக் கனவு. இப்படிப் பலருடயதும், பல நோக்கங்களும் ஒரே ஒரு படுகொலையுடன் கண்மூடி கண்விழிக்கும் நொடிப்பொழுதுக்குள் நடந்தேறி முடிந்துவிட்டது.

தற்பொழுது இலங்கை அரசும் அதன் இராணுவமும் எதிர்நோக்கும் போர்க்குற்றங்கள், மனிதஉரிமை மீறல் குற்றங்களில் இந்தியாவுக்கும் ஒரு பெரிய பங்குள்ளமையால் சர்வதேச ரீதியான விசாரணைகள் என்று வரும்பொழுது இந்திய ஆட்சியாளர்களின் பெயரும் உலக மட்டத்தில் பழுதடையும் வாய்ப்பு இருக்கிறது. சிலவேளை ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக தண்டனை கூட கிடைக்கலாம் என்ற நிலையும் காணப்படுகிறது. எனவே மன்மோகன் சிங்கோ அல்லது சோனியா காந்தியோ அல்லது கருணாநிதியோ அல்லது வேறு யாராவது இந்திய பிரபலங்களையோ கொலை செய்துவிட்டால் அனைத்து உலகத்தின் பார்வையும் அக்கொலையின் பக்கமாக இந்தியாவை நோக்கி திரும்பும். அவர்களைக் கொலை செய்வதனால் இந்தியாவோ அல்லது இந்த உலகமோ எதையுமே இழந்துவிடப்போவதில்லை.

அதுவே அவர்கள் விரும்புவதுபோல் அனுதாப அலையாக மாறும். புலிகள் இயக்கம் மீண்டும் உலகத்தின் பார்வையில் உலக பயங்கரவாதியாக மீண்டும் உருவாக்கம் பெறும். அப்பாவித்தமிழ் மக்களின் பிரச்சனையும் அவர்கள்மேல் இழைக்கப்பட்ட மனிதஉரிமை மீறல்களும், இலங்கையுடன் இணைந்து இந்தியா செய்த போர்க்குற்றங்களும் ஒரு நொடிப்பொழுதில் இந்த உலகத்தின் பார்வையில் இருந்து மறைந்து போகும். எனவே தமிழீழ மக்களே, உலகத்தமிழ் உறவுகளே நாம் மீண்டும் இந்த அரசுகள் விரும்புவது போல் சதி வலைக்குள் மாட்டுப்பட்டு ஆழக் குழிக்குள் வீழ்த்தப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது.

இதற்கிடையில் இன்னுமொரு தந்திரமான, தமிழர் ஒற்றுமையைக் குலைப்பதற்கான போரை குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர் மத்தியில் நடாத்திவருவதை விழிப்பாக அவதானிக்கவேண்டும். அதாவது ‘காட்டிக்கொடுப்பவர்கள்’, ‘துரோகிகள்’ என்ற பட்டத்தை வழங்குபவர்கள் யார் என்பதை முதலில் இனம்காணுதல் வேண்டும். இப்பட்டம் வழங்குபவர்கள் போலியானவர்களாகக்கூட இருக்கலாம்.  இந்தப்பட்டம் வழங்குவதற்கு இவர்களுக்கு அதிகாரம் வழங்கியவர்கள் யார்? இப்பொழுது இலங்கையில் யுத்தம் முற்றாக ஓய்ந்த நிலையில் இருக்கின்றது. விடுதலைப்புலிகள் சிதறிய நிலையில் இருக்கின்றார்கள்.

கசப்பாக இருந்தாலும் இது யதார்த்தம்.

ஆனால் விடுதலைப்புலிகள் சிதறியிருந்தாலும் கூட புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் ஈழ விடுதலைக்காக ஒற்றுமையாக உள்ளார்கள் என்பது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

இது தமிழர்களுக்கு இனிப்பான செய்தி அதோடு யதார்த்தமானதும் கூட.

இதனால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மேற்கொண்ட இந்திய இலங்கைக் கூட்டு, புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமையை உடைக்க சதி செய்கிறது. இதுவே இரண்டாவது போர். ஆகவே இந்த துரோகிப்பட்டம் வழங்குவோர் இந்திய இலங்கைக் கூட்டுச் சதியாளர்களின் கைப்பொம்மை என்பதை அனைத்துத் தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் காட்டிக் கொடுப்பதற்கென்றும்  துரோகமிழைப்பதற்கும் புதிதாக ஈழத்தில் தமிழர் சார்பில் என்ன இருக்கின்றது? என்ற கேள்வியை எமக்கு நாமே கேட்டுக்கொள்வோம். நாம் இவ்விரு அரசுகளின் கூட்டு சதியை உலகத்திற்கு அம்பலமாக்குவோம். தமிழ்தேசியத்திற்காக நாம் எல்லோரும் ஒற்றுமையாக உழைப்போம். தமிழீழத்தை வெல்வோம்.

‘தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்’

நாகலிங்கம் மதியழகன்
mathiyalakan1@hotmail.com