ஏப்ரல் 8 இல் நடைபெறவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் தமது பரப்புரையின் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், வாக்காளப் பெருமக்களோ தேர்தல் தொடர்பில் அக்கறையின்றி இருந்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈழத் தமிழ் மக்களில் அரசியல் விழ்ப்புணர்வு அதிகம் மிக்கவர்கள் எனக் கருதப்படும் யாழ் குடாநாட்டு மக்களிடையே இத்தகையை அக்கறையின்மை அதிகமாக நிலவுகின்றமை இரட்டிப்புக் கவலையைத் தருகின்றது.
ஈழத் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றை ஆய்வுக்கு உட்படுத்தும் போது, யாழ் குடாநாடே அதில் முன்னணிப் பாத்திரம் வகிப்பதை மறைப்பதற்கில்லை. ஏனைய பிரதேசங்களில் ஆகர்சமிக்க தலைவர்கள் காலத்துக்குக் காலம் உருவாகிப் பங்களிப்பு நல்கியிருந்த போதிலும், காத்திரமான பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும், தமிழர் அரசியலின் மையம் யாழ் குடாநாட்டிலேயே இருந்து வந்தது. தொடர்ந்தும் இருந்து வருகின்றது.
அத்தகைய யாழ் குடாநாட்டுத் தேர்தல் களம் இன்று கவனத்திற்கு உரிய ஒன்றாக மாறியுள்ள நிலையிலும், அங்கு வசிக்கும் வாக்காளப் பெருமக்கள் தேர்தலில் அக்கறையின்றி இருப்பதற்குப் பிரதான காரணம் எதுவாக இருக்க முடியும்?
நாடாளுமன்ற முறைமைகளுக்கு ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்து கொள்வது முடியாதது என்ற புரிதலின் வெளிப்பாடாகவே ஆயுதப் போராட்டம் முகிழ்த்தது. இந்த ஆயுதப் போராட்டமானது தமிழ் மக்களின் உரிமைபெற்ற தேசம் எவ்வகையினதாக அமையும் என்ற மாதிரியைத் தமிழ் மக்களுக்குக் காண்பித்தது.

கடந்த மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் தலைமை துடைத்தழிக்கப்பட்ட பின்னர் தமிழர் அரசியலில் ஒரு வெறுமை பரவியுள்ளதை மறைப்பதற்கில்லை. அதன் வெளிப்பாடே மக்களின் இன்றைய தேர்தல் தொடர்பிலான அக்கறையின்மை.

தமிழ் மக்களுக்கு முன்னரும் தேர்தல்களில் உண்மையான அக்கறை இருந்திருக்கவில்லை. ஆனால், அத்தேர்தல்களில் பங்கு கொண்டு வாக்களிப்பதும், வாக்களிக்காமல் தவிர்ப்பதும் ஒரு தந்திரோபாய நடவடிக்கை என்ற புரிதல் அவர்களிடையே இருந்தது. தமிழ் மக்களின் தலைமை அரசியற் சக்தியாகத் திகழ்ந்த விடுதலைப் புலிகள் கூறியவாறு மக்கள் நடந்து கொண்டார்கள். அதாவது, தேர்தலில் பங்கெடுத்துக் கொள்வது ஒரு தந்திரோபாய நடவடிக்கையே என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.

இன்று தமிழ்த் தேசியத்தின் காவலர்கள் தாமே என்று கூறிக் கொண்டு களத்தில் நிற்பவர்கள், தாம் தேர்தல்களைத் தந்திரோபாய ரீதியில் பயன்படுத்துவதாகக் கூறிக் கொண்டாலும், தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி போன்றவற்றை வெற்றி கொள்ள எத்தகைய திட்டத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதைத் தெளிவு படுத்தவில்லை. இதுவே, மக்களின் தேர்தல் தொடர்பிலான அக்கறையின்மைக்குப் பிரதான காரணம்.

தேர்தல்களை ஒரு தந்திரோபாயமாக உயயோகிக்கின்றோம் என விடுதலைப் புலிகள் கூறிய பொழுது அவர்கள் சமாந்தரமாக ஆயுதப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருந்தார்கள். ஆகையால், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கூற்றை நம்பி, ஏற்றுக் கொண்டு அதற்கேற்பச் செயற்பட்டார்கள்.

இன்று தேர்தல் களத்தில் நிற்பவர்களுக்கு தெளிவான செயற்திட்டம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களின் ஜீவாதாரக் கோரிக்கைளை வென்றெடுக்க என்ன வழி என்பது அவர்களுக்கே தெரியாத நிலையில், எந்த வழிமுறைகளுக்கு ஊடாக தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியாது என முன்னர் பரப்புரை செய்து, அதனை மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்தார்களோ, அதே வழிமுறைகளுக்கு ஊடாக தாம் தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்கப் போவதாக இன்று கூறும்போது மக்கள் அதனை நம்ப மறுப்பதில் வியப்பில்லை.

எனவே, இன்று மக்களுக்கு இரண்டு விடயங்கள் புரிய வைக்கப்பட வேண்டும்.

முதலாவது, நாங்கள் முன்னைய போராட்ட வடிவத்தை – அதாவது ஆயுதப் போரட்டம் சார்ந்த போராட்ட வடிவத்தை – முற்று முழுதாகக் கைவிட்டு ஜனநாயக வழிமுறைகளுக்கு ஊடாகப் போராடி(?) தமிழ் மக்களின் ஜீவாதாரக் கோரிக்கைகளை வென்றெடுக்கப் போகின்றோம் என்பதை மக்களுக்குத் தெளிவாகக் கூறியாக வேண்டும். இதற்கு அடிப்படையாக விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் அழிக்கப்பட்டு, அந்த அமைப்பின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ள யதார்த்தத்தை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் தமிழ் மக்களின் இலட்சியத்துக்கான போரட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பு தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் அரசியல்வாதிகளின் கைகளிலேயே உள்ளது என்ற யதார்த்தத்தை தமிழ் மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும். ஊடக அறிக்கைகளூடாகவோ, செவ்விகளூடாகவோ மாத்திரம் அதனைச் சாதித்துவிட முடியாது. மக்களின் காலடிக்குச் சென்று விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அளப்பரிய தியாகங்களைப் புரிந்ததன் பிற்பாடே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டார்கள். எனவே, அவர்களுக்கு மாற்றீடாக அரசியல் நடத்த முன்வருபவர்களும் தமது நம்பகத் தன்மையை நிரூபித்தாக வேண்டும். அதற்குப் பின்னரே மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியும்.

நாடாளுமன்ற மார்க்கமே தற்போது எம்முன்னே உள்ள ஒரேயொரு மார்க்கம் என்பதை மக்களுக்குப் புரியச் செய்வது இரண்டாவது விடயம். இது மிகவும் கடினமான ஒரு செயன்முறையே ஆயினும் செய்யப்பட வேண்டிய ஒன்றே. இதற்கு முறையான நீண்டகாலச் செயற்திட்டம் ஒன்று அவசியம். அதிலே இலக்கு மாத்திரமன்றி இலக்கை அடைவதற்கான வழிமுறைகளும், குறித்த வழிமுறைகள் பயனளிக்காதவிடத்து மேற்கொள்ளப்படக் கூடிய சாத்தியமான மாற்று வழிமுறைகளும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். அவை மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரமும் பெறப்பட வேண்டும்.

இன்று களத்தில் நிற்கும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுகின்றது. மக்களின் எண்ணங்களை விடுதலைப் புலிகள் பிரதிநிதித்துவம் செய்துவந்த நிலையில் முன்னர் இவ் இடைவெளி பெரிதாகத் தெரியவில்லை. தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் இந்த இடைவெளி தெளிவாகத் தெரிகின்றது.

இந்நிலையில் மக்களின் ஜீவாதாரப் பிரச்சினைகளுக்கான மக்கள் போராட்டங்களை தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் முன்னெடுக்க வேண்டும்.

தடுப்பு முகாம்களில் வாடுவோரின் விடுதலை, மீள் குடியேற்றம் என்ற போர்வையில் மற்றுமொரு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் விடுதலை, மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளை உறுதி செய்தலும், மேம்படுத்தலும், உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் மீள் குடியேற்றம், சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை, தொடரும் சிங்களக் குடியேற்றம் மற்றும் சிங்கள மயமாக்கல்களைத் தடுத்து நிறுத்துதல், சிதைக்கப்படும் தமிழர் நினைவுச் சின்னங்களைக் காப்பாற்றுதல், மனித உரிமை மீறல்களைத் தடுத்தல், தமிழ் மக்களின் கௌரவத்தைக் காப்பாற்றுதல் எனப் பொதுமக்களின் அன்றாடப் பிரச்சினைகள் எத்தனையோ உள்ளன.

2006 ஆம் ஆண்டின் முற்பகுதியின் பின்னர் சிறி லங்காவில் எங்குமே தமிழ் அரசியல் கட்சிகளால் மக்கள் போராட்டங்கள் எதுவும் நடாத்தப்பட்டதாக நினைவில் இல்லை. இந்நிலையில் அரசியற் கட்சிகளிடம் இருந்து மக்கள் விலகியிருப்பதில் வியப்பேதும் இல்லை.

இது மாத்திரமன்றி இன்று மக்களிடையே விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் கைக்கொண்ட அதே அணுகுமுறை காலத்துக்கு ஒவ்வாதது. பயன் தராதது. எனவேஇ புதிய அணுகுமுறை கையாளப்பட வேண்டும். அத்துடன் புதிய முகங்களும் அறிமுகப் படுத்தப்பட வேண்டும்.

மாற்றம் என்பது சடுதியாக நிகழும் ஒன்றல்ல. அது சூழலைப் பொறுத்து விரைவாகவோ அன்றி மெதுவாகவோ நிகழக் கூடும். எனினும் அதற்கு குறிப்பிட்ட காலம் அவசியம்.

இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதனை அடையக் கூடியதான முறையான செயற்பாடுகள் மக்கள் ஒத்துழைப்புடன் சரியான திசையில் பயணிக்குமானால் இலட்சியத்தை வெல்லும் பணி இலகுவாக அமையும். அதற்குத் தேவை சரியான தலைமைத்துவமும் வழிகாட்டலுமே.

-சண் தவராஜா-