இந்தியாவைச் சுற்றி, முத்துமாலை[STRING OF PEARLS] ஒன்றினை சீனா கோர்த்துக் கொண்டிருப்பதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், மியன்மார் போன்ற, இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில், துறைமுக அபிவிருத்தி என்கிற போர்வையில் சீனா கால் பதிக்கிறது என்பதிலிருந்து இந்த முத்து மாலை விவகாரம் எழுகிறது.

சீனாவின் முதலீட்டில் உருவாகும் இந்த துறைமுகங்கள், நாளை சீனாவின் கடற்படைத் தளமாக மாறி விடலாம் என்று இந்தியாவும், அமெரிக்காவும் அச்சமடைவதில் நியாயம் உண்டு

இதைவிட, வேறு ஒரு தந்திர நகர்வில், சீனா ஈடுபடுவதை, பலர் அவதானிக்க மறந்து விட்டார்கள். இராணுவச் சுற்றிவளைப்பினை முத்து மாலை கோர்த்தல்என்று அர்த்தப்படுத்தினால், பொருளாதாரரீதியிலான சுற்றிவளைப்பினை வைரமாலை‘[STRING OF DIAMONDS] கட்டுதல் என்று கூறவேண்டும்

கிழக்குலகில் இது ஆரம்பமாகிவிட்டது. இந்தியாவின் அண்டைய நாடுகளில் முதலீடுகளை தீவிரப்படுத்தும் சீனா, இந்நாடுகள் இந்தியாவில் தங்கியிராத நிலை ஒன்றினை ஏற்படுத்த முயற்சிக்கிறது என்று கூறலாம். இந்தியாவுடன் தீராப்பகை கொண்ட பாகிஸ்தானைத் தவிர்த்து, ஏனைய நாடுகளான மியன்மாரிலும், ஆப்கானிஸ்தானிலும், பங்களாதேசிலும், இலங்கையிலும் தனது முதலீட்டு ஆதிக்கத்தை அதிகரிப்பதனை காணலாம். தளம்பல் நிலை கொண்ட நாடுகளையே முதலில் தம்வசப்படுத்த வேண்டும் என்பதில் சீனா குறியாக உள்ளது

தற்போது சீனாவின் பொருளாதார ஆதிக்க பார்வை, மேற்குலகின் பக்கம் திரும்பி இருப்பதை, லத்தின் அமெரிக்காவிலுள்ள வளர்ச்சி அடைந்த நாடான பிரேசிலில், அது மேற்கொள்ளவிருக்கும் பாரிய முதலீடுகள் புலப்படுத்துகின்றன. உதாரணமாக பிரேசிலின் சோயா [SOYA ] உற்பத்தியில், $ 7 .5 பில்லியனை முதலீடு செய்யும் ஒப்பந்தத்தில் சீனா கைச்சாத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, BRIC [ பிரேசில், ரஷ்யா, இரான், சீனா] என்கிற அமெரிக்க எதிர்நிலை தளக்கூட்டு, BRICS ஆக, தென்னாபிரிக்காவையும் இணைத்து செல்ல முற்படுவதையும் இங்கு கவனிக்க வேண்டும். அண்மையில் நடந்த பிரேசில் தேர்தலில், சிவப்புச் சித்தாந்த கொள்கையுடைய ஒருவர் அதிபராக தெரிவுசெய்யப்பட்ட விடயத்தை, சீனா தனக்குச் சாதகமாகப் பார்க்க முற்படுமென்பதை புறக்கணிக்க முடியாது

தற்போது பரவலாகப் பேசப்படும், அமெரிக்கசீனா இடையிலான நாணய யுத்தம்[ CURRENCY WAR ], அனைத்துலக பொருளாதார உறவுச் சமநிலையில், எத்தகைய தாக்கங்களை உருவாக்கும் என்பதையிட்டு பல நாடுகள் கவலையடைகின்றன. குறிப்பாக அமெரிக்க டாலரில் முதலீடு செய்த நிறுவனங்கள், வங்கிகள் போன்றவை, அமெரிக்க பொருளாதாரத்தின் மீட்சியை பெரிதும் எதிர்பார்க்கின்றன

கிட்டத்தட்ட 3 ட்ரில்லியன் [TRILLION ] அமெரிக்க டொலர்களை, தனது வெளிநாட்டு நாணய நிதியத்தில் வைத்திருக்கும் சீனா [இதில் சீனாவின் வர்த்தக வங்கிகளில் குவிந்திருக்கும் டொலர்கள் உள்ளடக்கப்படவில்லை], அமெரிக்காவின் பலவீனமான நிலையை பயன்படுத்தி, அந்நாடுகளுள் நுழைந்து கொள்ள அவசரப்படுவதைக் காணலாம்

தனது பலவீனத்தை சாதகமாக்கும் சீனாவின் நகர்வினை உடைப்பதற்கு, QUANTITATIVE EASING 2 என்கிற போர்வையில், 600 பில்லியன் டொலர் நிதியை, திறைசேரி நிதியத்திற்கு வழங்குகிறது அமெரிக்காவின் FEDERAL RESERVE . திறைசேரியில் உள்ள நீண்ட கால முறிகளை [BOND] மீளப் பெறுவதற்கு இந்நிதியை பயன்படுத்தினாலும், இதன் உள்நோக்கம் வேறு வகையானதென, பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

QE 2 என்பதனூடாக எதனைச் சாதிக்க முற்படுகிறது அமெரிக்கா

ஏற்றுமதி அதிகரிப்பினால் சீனாவின் வர்த்தக உபரி [TRADE SURPLUS ] அக்டோபர் மாதத்தில் மட்டும் $27 .2 பில்லியனாக உயர்ந்துள்ளது. சீனாவுடனான வர்த்தக பரிமாற்றத்தில் , அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை [TRADE DEFICIT ] $27 .8 பில்லியன். கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும், அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதி $25 பில்லியன் ஆகவிருக்கும் அதேவேளை, அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு மேற்கொண்ட இறக்குமதியின் பெறுமதி $7 பில்லியன் என்று, சிரேஷ்ட சீன பொருளியல் ஆய்வாளரான MARK WILLIAMS அவர்கள் குறிப்பிடுகின்றார்

சீனா தனது renminbi நாணயத்தை, இயல்பான முதிர்ச்சிக்கு அனுமதிக்காமல், மதிப்பினைக் குறைத்து வைத்து , ஏற்றுமதியை அதிகரிக்கின்றது என்பதுதான், சீனா மீது அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டு. ஆனாலும் செயற்கையாக, சீனா தனது நாணய மதிப்பை குறைத்து வைத்து, ஏற்றுமதியை கூட்டுகிறதென அமெரிக்கா பழி சுமத்தினாலும், அமெரிக்காவின் டொலர் இயற்கையாக வீழ்ச்சியுற்ற நிலையில், அதன் ஏற்றுமதியை, அதனால் ஏன் அதிகரிக்க முடியவில்லை என்கிற கேள்வி எழுகின்றது

அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டினை, ஜப்பான், ஜெர்மனி, தென்கொரியா, போன்ற வளர்ச்சியுற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. சியோலில் நடைபெற்ற G 20 உச்சி மாநாட்டில், இக்கருத்து எதிரொலித்ததை காணக்கூடியதாகவிருந்தது. அதேவேளை ஏற்றுமதி அதிகரிப்பிற்காக, தனது யேன்[yen ] நாணயத்தின் பெறுமதியை குறைப்பதற்கு, இரண்டு தடவைகள் ஜப்பான் முயற்சி செய்ததை கவனிக்க வேண்டும்

இந்நிலையில் QE 2 மூலம் உள்நுழையும் நிதி, எவ்வாறு சீனாவின் சர்வதேச முதலீட்டு ஆக்கிரமிப்பினை உடைக்கும் என்பது பற்றி பார்ப்போம்

இந்த 600 பில்லியன் டாலரில் இருந்து, பெருமளவு பணம், அமெரிக்காவின் பாரிய வங்கிகளுக்கு, 0% [ZERO %]வட்டி இல் வழங்கப்படும். அவ்வங்கிகள், இதனை, அரச வட்டி வீதம் அதிகமுள்ள வளர்ச்சியடையும் நாடுகளுக்கு, 3 -6சதவீத வட்டியில் முதலீடு செய்யும். இப்பரிமாற்றம்,அனைத்துலக வங்கி முதலீட்டுச் சட்டத்தின் கீழ், ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயந்தான். வெளிநாட்டு வங்கிகளில் அமெரிக்க டொலர் குவியும்போது, அந்தந்த நாடுகளின் நாணயப் பெறுமதி உயரும் நிலை ஏற்படும். அதாவது சொந்த நாணயத்தைக் கொண்டு, டொலர்களை வாங்கும் போது இவ்வுயர்வு உருவாகின்றது

இதில் அமெரிக்காவிற்கு என்ன நன்மை என்கிற கேள்வி எழலாம்

சீனாவோடு, நெருக்கமான பொருளாதார உறவுகளைப் பேண முற்படும் நாடுகளின் ஏற்றுமதியானது, அதன் நாணய உயர்வால், வீழ்ச்சியடையும் நிலை தவிர்க்க முடியாததாகிவிடும். ஆனாலும் தனது நாணயப் பெறுமதியை தாழ்வான நிலையில் வைத்திருக்கும் சீனாவின் ஏற்றுமதிக்கு, இந்த விவகாரம் சாதகமாக அமையுமே தவிர, பாதகமாக அமையாதென்பதை அமெரிக்கா உணரவில்லை

வேலையற்றோர் அதிகரித்துச் செல்லும் நிலையில், உள்நாட்டு உற்பத்திக்கு முதலீடுகளை வழங்காமல், வெளிநாடுகளை நோக்கி, மக்களின் வரிப்பணத்தை கொண்டு செல்வது தவறானது என்றும், இவற்றிக்கு வரி விதிக்க வேண்டுமெனவும், பல பொருளியல் ஆய்வாளர்கள் தமது காட்டமான விமர்சனத்தினை முன் வைக்கின்றனர்

ஆகவே QE 2 , QE 3 என்று புதிய திட்டங்களை அமெரிக்கா முன்வைத்தாலும், ஏற்கனவே 12 ட்ரில்லியன் கடனில் இருக்கும் FEDERAL RESERVE ஆனது, டொலரின் வீழ்ச்சியையும், வேலையற்றோர் குறித்த நெருக்கடிகளையும், சரியான பொருளாதாரத் திட்டமின்றி, எதிர்கொள்ள முடியாது. அமெரிக்காவின் கொல்லைப்புறத்தில் [ latin america ] வந்திறங்கியுள்ள சீனா, ஆசியா,ஆபிரிக்கா போன்று, அங்கும் தனது முதலீட்டு வைரங்களை பதிக்குமென திடமாக நம்பலாம்

இதயச்சந்திரன்