இலங்கையில் தேர்தல் வெற்றியையும், புலிகள், தமிழின அழிப்பு வெற்றியையும் ஒருமுகமாக கொண்டாடிய கையோடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் அதிரடியாக வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கை என்னவென்றால் தமிழ், முஸ்லீம், சிங்கள பாகுபாடின்றி இனிவரும் காலத்தில் இலங்கையர்கள்என்ற குடையின்கீழ் அனைவரும் ஓரினமாகவே வாழவேண்டும் என்பதாகும்.

ஓரினமாக இலங்கையர்கள் என்ற போர்வையில் வாழுவதில் எவருக்குமே தாழ்வுச் சிக்கல் இருக்காது. ஆனால் அரசின் தந்திரோபாயமானது தமிழினம் என்று ஒரு இனம் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதும் அப்படி இருந்தாலும் சிங்கள இனத்தினுள் தமிழினம் சமிபாடடைந்த இனமாக இருக்கவேண்டும் என்பதும் ஆகும். விடுதலைப்புலிகளின் பின்னடைவு, எந்த அளவு சறுக்கலையும் தமிழினத்தின் சுயநிர்ணயத்தையும் காவுகொண்டுள்ளதென்பது புலனாகிறது. இலங்கை அரசுக்கு தோன்றுகின்ற புதுப் புது உத்திகளெல்லாம் 2009 மே மாதத்திற்கு முன்னர் கிடப்பிலே கிடந்திருக்கிறது. பல தசாப்த காலமாக கிடப்பில் போட்டு பூட்டி வைத்த பெருமை விடுதலைப்புலிகளையே சாரும். இப்பொழுது தமிழ்க்கட்சிகள் தங்களது ஒற்றுமையைக் காட்ட எத்தனை அரங்கங்கள்அமைத்தாலும் சிங்கள அரசின் அராஜகப் போக்கிற்கு ஒரு துரும்பைத்தன்னும் தடையாக போடமுடியாது

இந்த அரங்கங்களினால் எதுவுமே புரிய முடியாதென்று இலங்கை அரசிற்கு நன்றாகவே தெரியும். அப்படி ஏடாகூடமாக எதுவும் நடந்தாலும்கூட அவற்றை ஒரு தூக்கு விலை போட்டு கொள்முதல் செய்யவும் அரசிற்கு தெரியும். இவற்றிக்கு அப்பால் விடுதலைப்புலிகள் அமைப்பு நின்றிருந்தது

மீண்டும் இலங்கையர்கள்எனற விடயத்திற்கு வருவோம்.

வடகிழக் தமிழர் தாயகத்திலே இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பல பகுதிகள் குடியேற்றம் செய்யப்படவில்லை என்பதை அறிவோம். அத்தோடு தமிழர் பகுதிகள் பல உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் காணிகள் சுவீகரிக்கப்பட்டிருப்பதையும் மறைக்க முடியாது. வடகிழக்கில் வாழுகின்ற தமிழ்மக்களும் இலங்கையர்கள் என்ற எண்ணம் இலங்கை அரசிற்கு முதலில் ஏற்படவேண்டும். அப்போதுதான் ஓரினம்என்ற பற்றுதல் இயல்பாகவே ஏற்படும். இந்தப் பற்றுதல் உண்மையாகவே ஏற்படும்பட்சத்தில் பிரச்சனைகள் இயல்பாகவே தீர்க்கப்பட்டுவிடும். எதற்கும் உள்ளத்தைத் திறந்து தமிழ்மக்களையும் இந்நாட்டின் உரிமையுள்ள பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளல் என்பதுதான் ஒரு மறைமுகமான தொனி. அந்த அளவிற்கு சிங்களம்உண்மையாக நடந்துகொள்ளுமா என்பதுதான் கேள்வி

இலங்கையின் உரிமையுள்ள சம பிரஜைகளாக தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதென்பது உண்மையானால், வடகிழக்கு தமிழ்மக்கள் வீடுகளை இழந்து ஏதிலிகளாக அலையவேண்டிய தேவையில்லை. பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் காணிகளைப் பறிகொடுத்த தமிழ்மக்களுக்கு, அண்மைக்கால யுத்தத்திலே வீடிழந்து நிற்கும் தமிழ்மக்களுக்கு, உயர்பாதுகாப்பு வலயத்தினுள் காணிகளைப் பறிகொடுத்த சம்பூர்மக்களுக்கு, அம்பாறை மாவட்டத்தில் காணிகளைப் பறிகொடுத்து நிற்கும் குடுவில் மக்களுக்கு இலங்கை அரசு இலங்கையர்கள்என்ற குடையின் கீழ் இவர்களை எல்லாம் நோக்குவார்களானால் தென்பகுதியிலே தமிழ்மக்களுக்கு காணிகளை வழங்கி சிங்கள மக்களுடன் ஒன்றறக்கலந்து வாழ வைக்கலாம். இதுவே யதார்த்தம். ஆனால் இலங்கை அரசின் நோக்கம் யாதெனில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளை சிங்கள மக்களைக் குடியேற்றி ஐதாக்கவேண்டும் என்பதே. சிங்கள மக்களின் பிரதேசங்களில் தமிழ்மக்களைக் குடியேற்றி சிங்கள மக்களை ஐதாக்க ஒருபோதும் விரும்பாது. இந்த நோக்குத்தான் இன்றுவரை உள்ள விரிசலுக்கு காரணம் எனலாம்

இலங்கையர்கள்என்று வாய்ச்சவடால் விடும் ஜனாதிபதி மகிந்தா அவர்கள் முதலில் நாங்கள் யாழ்ப்பாணத்திலே வாழ்ந்தவர்கள், எம்மிடம் இருப்பது யாழ்ப்பாண அடையாள அட்டை, நாம் பேசுவது யாழ்ப்பாண தமிழ் என்று கூறிக்கொண்டு யாழ்ப்பாணத்திலே நிலவுரிமை, தொழிலுரிமை கேட்டு யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டு வந்திருக்கும் சிங்கள மக்களை அங்கே குடியேற்ற நினைப்பதற்கு முன்னதாக, சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுவதற்கு பல காலங்கள் முன்னர் நிகழ்ந்ததும், தென்பகுதியில் காலம் காலமாக வாழ்ந்துவந்த, 83 கலவரத்திலும் அதற்கு முற்பட்ட கலவரங்களிலும் யாழ்ப்பாணத்தை நோக்கி துரத்தியடிக்கப்பட்ட, சிங்கள மொழியை பேசக்கூடிய, கொழும்பு மற்றும் தென்பகுதி அடையாள அட்டைகளையும் வைத்திருக்கும், தற்பொழுது நீண்ட காலமாக யாழ்ப்பாணத்திலே வாழ்ந்துவரும் தமிழ்மக்களை அவர்கள் முன்பு வாழ்ந்த பகுதிகளில் காணிகளை வழங்கி தமிழ்மக்களின் தேவையான இந்த குடியேற்றத் திட்டத்தை செய்து காட்டல் வேண்டும்

தமிழ்மக்களின் இன்னல்களைக்காட்டி வெளிநாட்டில் உதவி கேட்கும் இலங்கை அரசு தன்னாட்டினுள்ளே தமிழ்மக்களுக்கான நலன்பேண் திட்டங்களை முதலில் செய்ய வேண்டும். தமிழர்களை தமது சொந்தநாட்டின் பிரஜைகளாக உள்ளம் திறந்து வெளிப்படைத்தன்மையாக, உண்மையாக சிங்களம் என்று ஏற்றுக்கொள்கிறதோ அன்றுதான் இலங்கையர்கள்என்ற நாமம் நிரந்தரமாய் நிலைக்கும்.

கனக கடாட்சம்

trincokadatcham@yahoo.com