இலங்கை தமிழர்களுக்கே சொந்தம் மறுக்க முடியாத சரித்திர உண்மைகள்!

சிங்களர்கள் வங்காளத்திலிருந்து தமிழர்களுக்குப் பின்னர் குடியேறியவர்களேயென்று இலங்கை சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றார்கள். இலங்கை சேதத்தின் புராதனக் குடிகள் தென்னிந்தியத் தமிழர்களேயன்றி சிங்களர்களல்ல. இந்த உண்மையை நிரூபணம் செய்வதற்கு சரித்திர ஆதாரங்கள் மலிந்து கிடக்கின்றன.  டாக்டர் ஜி.ஸி.மெண்டிஸ் என்பவர் தாம் வரைந்துள்ள இலங்கை சரித்திரமும் உலக சரித்திரமும் என்ற நூலில் இலங்கையின் பூர்வீக மக்கள் வேடர்களே யென்றும், கி.மு. 543 ஆம் ஆண்டில் வந்த சிங்களர்கள் இலங்கைக்கு அந்நியர்களாகவேயிருந்தார்களென்றும் திட்டமாகச் சொல்லியிருக்கிறார். அதே புத்தகத்தின் 14 ஆம் பக்கத்தில் சிங்களர்களின் வருகைக்குச் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே ஆரியத் தமிழர்கள் இலங்கைக்கு வந்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதுபோல் திரு.கீஜர் என்னும் பிரபல சரித்திர ஆராய்ச்சியாளர் தம்முடைய மகாவம்சத்தில் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்,

இலங்கையின் பூர்வீகக் குடிகள் நாகர்களும் யக்ஷர்களுமே, சிங்களர்களின் வருகைக்கு முன்னால் இவ்விரு வகுப்பைச் சேர்ந்த மன்னர்களும் இலங்கையை ஆண்டு வந்தார்கள். அந்த அரசர்களுள் மணியக்கிகா, மஹேதரன், குலோதரன் ஆகிய நாக வம்சத்து மன்னர்களும், குவினி, மஹாகல சேனன் ஆகிய யக்ஷ வம்சத்து மன்னர்களும் குறிப்பிடத்தகுந்தவர்கள். கி.மு.543 ஆம் வருடத்திற்கு முன்பு வரை சிங்களவர்கள் இலங்கைக்கு அந்நியர்களாகவே இருந்தார்கள்.

நாகர்களும் யக்ஷர்களும் யார்?

நாகர்கள் என்ற பதத்திற்கும், யக்ஷர்கள் என்ற பதத்திற்கும் முறையே சர்ப்பங்களை பூஜிப்பவர்கள் பிசாசங்களைப் பூஜிப்பவர்கள் என்று பொருள். இலங்கையிலிருந்த புராதனத் தமிழர்கள் சர்ப்பங்களையும் பிசாசங்களையும் பூஜை செய்பவர்களாக இருந்து அது காரணமாக இப்பெயர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கக் கூடும். தவிர பண்டைக் காலத்து திராவிடர்களிற் பொரும்பாலோர் வேட்டையாடுவதையே ஜீவனமாகக் கொண்டிருந்தார்கள்.

சிங்களர் சரிதை என்ன கூறுகிறது?

ஆகையால், வேடர்களென்ற பெயரும் அவர்களுக்கு உண்டாயிற்று. இந்த அபிப்பிராயத்தை திரு.ஜான் எம்.செனிவிரத்னா என்ற பிரபல சரித்திர நூலாசிரியர் தம்முடைய சிங்களர் சரிதை என்ற புத்தகத்தில் ஆதரிக்கிறார். அவரும் வித்யானுகூல லங்கா இதிகாசபா என்ற நூலின் ஆசிரியரான திரு.டப்ளியூ.எம்.பெரே ராவும் இலங்கை புராதனக்குடிகளாகிய நாகர், யக்ஷர், வேடர் ஆகியோர்களைப்பற்றி பின்வருமாறு எழுதியிருக்கின்றார்.

நாகர், யக்ஷர்,வேடர்ஆகியோர் திராவிட வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மணிக்கீகா, மஹோ தரன், குலோதரன், குவினி, ராவணன், மஹாகல சேனன் முதலான திராவிட மன்னர்கள் சிங்களவர்களின் வருகைக்கு முன்னால் இலங்கையை ஆண்டு வந்தவர்கள் அய்ரோப்பியர்கள் அபிப்பிராயம். மேற்படி ஆதாரங்களைத்தவிர டாக்டர் கால்டுவெல், டாக்டர் ஜி.யு.போப்முதலான அய்ரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் இவ்வாறே கூறியிருக்கின்றார்கள். தமிழர் என்ற தமிழ்ப்பதத்திற்கு திராவிடர் என்பது சமஸ்கிருத மொழிபெயர்ப்பென்றும் ஆகையால் இலங்கையின் பூர்வீகக் குடிகளான திராவிடர்கள் தென்னிந்தியத் தமிழர்களே யென்றும் அவர்கள் ஊர்ஜிதம் செய்திருக்கின்றனர்.

இலங்கையைத் திராவிடர்களே ஆண்டார்கள்

சந்திரசேகர பாவலரின் இராமாயண ஆராய்ச்சி (இரண்டாம் பாகம்) புரொபசர் எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளையின் இலங்கைச்சக்கரவர்த்தி இராவணன், திரு.வி.பி சுப்பிரமண்ய முதலியாரின் இராமாயண உள்ளுரை திரு.என்.எஸ்.கந்தையா பிள்ளையின் தமிழகம் ஸ்ரீஜத் சிவானந்த சரஸ்வதியின் மதவிசாரணை அகஸ்திய மகாமுனிவரின் அகஸ்தியர் இலங்கை ஸ்வாமி வேதாசலத்தின் மாணிக்கவாசர் சரிதை மாணிக்கநாயனாரின் நாவணாசனம் தேவாரம், திருவாசகம் முதலான நூல்களிலும் இதே அபிப்பிராயம் ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டிருப்பதை நாம் காணலாம்.

திராவிட நாகரிகம் பரவியிருந்தது

சிங்களவர்களின் வருகைக்கு முன் இலங்கையிலிருந்த திராவிடர்களின் நாகரிகம் உச்சஸ்தானத்தையடைந்திருந்தாதாயும் மேற்படி நூல்கள் சாற்றுகின்றன. இதை திரு.ஜான். எம்.செனிவிரத்னாவும் தமது சிங்களர் சரிதை என்ற புத்கத்தில் ஆதரித்து எழுதியிருக்கிறார். இலங்கையை ஆண்ட முதல் சிங்கள மன்னனால் விஜயன் மஹாகலசேனன் என்ற திராவிட மன்னனிடமிருந்து தான் சிங்காதனத்தைப் பெற்றனென்பது மேற்படி சரித்திர ஆசிரியர்களின் திட்டமான அபிப்பிராயம். அதோடு இலங்கையை ஆண்ட கடைசி மன்னரும் (கண்டி மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கா) தமிழர்தானென்பதை திரு. பிளேஸ் ஊர்ஜிதம் செய்கிறார்.

புராதனத் தமிழர்கள் கால்நடையாகவே வந்தார்கள்

இலங்கையின் புராதனக் குடிகள் தமிழர்களேயென்பதற்கு இது வரையில் அநேக சரித்திர ஆதாரங்களை எடுத்துக்காட்டினோம். அதே சரித்திர நூல்களில் இந்தியத் தமிழர்கள் முதன் முதலாக இலங்கைக்கு எப்படி வந்தார்களென்பதும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. திரு.அய்.ஸி. மெண்டஸ் என்பவர் தமது இலங்கை சரிதமும், உலகசரிதமும் என்ற நூலின் மூன்றாவது பக்கத்தில் இதுவிஷயமாக எழுதியிருப்பதாவது, இலங்கையின் புராதனக்குடிகளான தென்னிந்தியத் தமிழர்கள் கப்பல்களின் மூலமாகவோ அல்லது படகுகளின் மூலமாகவோ இலங்கைக்கு வரவில்லை. அவர்கள் கால்நடையாகவே இலங்கையை வந்தடைந்தார்கள்.

அவர்கள் வந்த காலத்தில் இலங்கை தேசம் ஒரு தனித்தீவாக இல்லாமல் இந்தியாவோடு இணைக்கப்பட்டு இந்தியாவின் ஒரு நாடாக இருந்தது. இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலுள்ள கடலில் இப்பொழுது சிதறிக்கிடக்கும் ஆதாம்பாலம் (தற்போது ராமர்பாலம் என்று கதைக்கப்படும் பகுதி) என்பது அக்காலத்தில் உண்மையான நிலப்பாதையாகவே இருந்தது. அதன் மூலமாகத்தான் தென்னிந்தியாவிலிருந்தே வேடர்கள் இலங்கைக்கு நடந்து வந்தார்கள் முன்னர் இலங்கை கடலினால் பிரிக்கப்படவில்லை.

மேற்படி அபிப்பிராயம் திரு.பி.குணசேகரா வின் ராஜாவளி வித்யானாகூல இலங்கா இதிகாசயா மாணிக்க வாசகர் சரிதை ஸர்ஸ்காட் எலியட்டின் மறைந்து போன தீவுகள் முதலான மற்றும் பல நூல்களிலும் ஆதரிக்கப்பட்டிருக்கின்றது தவிர, ஈழநாடு எனப்படும் இலங்கையும் பாண்டியநாடு, சோழநாடு, சேரநாடு (மலை யாளம்) முதலான பிரதேசங்களும் கடலினால் இடையில் பிரிக்கப்படாதிருந்தனவென்பதை அநேக அய்ரோப்பிய ஆசிரியர்களும் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

எனவே, மேற்படி ஆதாரங்களிலிருந்தும்

(1) இலங்கையின் பூர்வீகக்குடிகள் இந்தியத்தமிழர்கள்தான்.

(2) அவர்கள் வசித்துவந்த நாட்டில் சிங்களர்களே குடியேறினார்கள்.

(3) சிங்களர்களின் வருகைக்கு முன்னால் இலங்கை தேசம் தமிழ் மன்னர்களின் ஆட்சியிலேயே இருந்தது.

(4) அக்காலத்தில் இலங்கை வாசிகளின் (இந்தியத்தமிழர்களின்) நாகரிகம் உச்சஸ்தானத்தை அடைந்திருந்தது.

(5) கி.மு 543 ஆம் வருடத்திற்கு முன்வரை தமிழர்கள் வாழ்ந்துவந்த இலங்கைக்கு சிங்களவர்கள் அந்நியர்களாகவே இருந்தார்கள் என்னும் விஷயங்கள் மறுக்கமுடியாத சரித்திர உண்மைகளாகப் புலப்படுகின்றன.

(செட்டி நாடு)