நாடென்ன சொன்னது?

காடென்ன சொன்னது?

இதனுள் நீயென்ன கற்றுக்கொண்டாய் கூறு!

‘பிரம்மம்’ இல்லையென்ற புத்தருக்கு ஆலயங்கள்

தத்துவாத்துவ உலகிற்கு கெளதமர் ஓர் சவால்

ஞானம் மோனம் நற்பண்பு

இவை புத்தரின் ‘அனாத்மவாதம்’

காட்டுக்குள் நான்!

நாட்டுக்குள் நீ!

சிறைக்குள் பெளத்தம்!

யாகத்தில் உயிர்ப்பலி வேண்டாம்

உன்னை விடுவித்துக்கொள்ள சுயநல வேள்வி வேண்டாம்

‘சோதண்ட சூத்திரம்’ ஊடாய் சொன்ன கெளதமரே

நீங்கள் எங்கே?

நாங்கள் எங்கே?

அவர்கள் எங்கே?

‘அதர்வணத்தை’ வேதமாக கொண்டவர்களே

அகிம்சைகொண்ட ஐவகை சீலங்கள் எதற்கு?

‘இருக்கு வேத சங்கிதை’ யை பின்பற்றுங்கள்

அல்லது ‘அதர்வணம்’ தழுவிய அதர்மத்தைப் பற்றுங்கள்

அதுவரை,

கொல்லாமை பற்றி பேசாதீர்கள்

உலகை ஒரு ‘சிறங்கை’ க்குள் கொண்டு வந்ததாக கணணிக்கு நினைப்பு

என்ன… குழப்பமாக இருக்கிறதா?

நான்மட்டும் குழம்பவில்லை

நாடுமட்டுமல்ல, உலகே குழம்பி நிற்கிறது

எதற்காக இந்த ஒத்திகைகள்?

எப்போ கொம்புக்குமண் எடுப்போம் என்பதற்காகவே

பூகோளத்தின் மௌனங்கள்

இன்னமும் புரியவில்லையா? 

நகரும் காலங்கள் விரைவில் புரியவைக்கும்! 

விளக்கம் 

பிரம்மம்:- இறைவன்

அனாத்மவாதம்:- உயிர் நிலையற்றதென புத்தர் கூறியதால் பெளத்தத்திற்கு இது இன்னுமொரு பெயர்.

சோதண்ட சூத்திரம்:- ‘கொல்லாமை’ பற்றி கெளதமர் கூறிய ஒரு முக்கிய பகுதி.

அதர்வண வேதம்:- பிறருக்கு தீங்கு செய்யுமாறு இறைவனை வழிபாடும் மதம்.

இருக்கு வேதம்:- உலகத்தின் இயக்கம் தொடர்பானதும், ‘ஒரு கடவுள்’ கொள்கையைக் கொண்டதுமான வேதம்.

சிறங்கை:- ஒரு உள்ளங்கை அளவு.