இலங்கை அரசியலில் வரலாற்றிலே இப்போதுதான் புதிதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ தமிழருக்கான உரிமைகளை வழங்க மறுக்கின்றார் என்பதில்லை. காலம் காலமாக சிங்களத் தலைமைகள் தமிழருக்கு உரிமை வழங்குவதில் கட்சி பேதங்களை புறம்தள்ளி வைத்துவிட்டு உரிமைகள் வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அதிக ஒற்றுமையுடன் செயற்பட்டு வருகிறார்கள் என்பது வரலாறு.

அந்த வரலாற்றின் தொடர்ச்சியை தற்போதய ஜனாதிபதியும் செவ்வனே மாற்றமின்றி கொண்டு சென்று, மற்றுமொரு சிங்களத் தலைமையிடம் ஒப்படைக்க வேண்டியது அவரின் தலையாய கடமையாகும். இதைத்தான் சிங்களப் பேரினவாதிகளும் எதிபார்க்கிறார்கள். இதிலே சிறு பிசகு ஏற்படுமாயின் தேசத்தின் தலைமையை சிங்களமக்கள் மிக விரைவாக அகற்றிவிடுவார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்மக்களின் உரிமை வழங்கும் வள்ளலாக கணிக்கவில்லை. மகிந்தவோடு ஒப்பிடுகையில் சிறப்பாகத் தெரிவதை மறுக்கமுடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்ப்பு வாதத்தில் சம கொள்கையோடு இருப்பினும் ஈழத்தமிழர் பற்றிய கரிசனையில் ஒப்பீட்டு அடிப்படையில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி உயர்வானதே, இதுவே பிரதான காரணம், தென்னிலங்கைச் சிங்களமக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையையும், கட்சியையும் தூக்கி வீசுவதற்கு ஆகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்களமக்களின் ‘வீரனாக‘ கருதப்பட்ட சரத் பொன்சேகாவை தென்பகுதி சிங்களமக்கள் நிராகரிப்பதற்கும், ரணிலின் கூட்டே காரணமாகும். அதாவது, இவர்கள் ஆட்சிபீடம் ஏறினால் சிறிதளவு நன்மையாகிலும் தமிழருக்கு செய்துவிடுவார்கள் என்ற குரோத எண்ணமே ஆகும்.

தமிழ்மக்களுடனான விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் வரை ‘நானே ராசா‘ என்ற பொறிமுறையை மகிந்த ராஜபக்க்ஷ நன்கு புரிந்து கொண்டுள்ளார். அதுவே அவரை தொடர்ந்து ஆட்சிபீடம் ஏற்றும் என்பதில் வெகுவாக நம்பிக்கை கொண்டுள்ளார்.

அண்மையில் சிங்கப்பூர் ‘ஸ்ரைட்ஸ் டைம்ஸ்‘ பத்திரிகைக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த வழங்கிய செவ்வியிலிருந்து அவரின் மனநிலை வெளிப்படையாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. செவ்வியில் குறிப்பாக,

இலங்கையில் சமஷ்டி பற்றி கேட்ட கேள்விக்கு ஜனாதிபதியின் பதிலானது, ‘இலங்கையின் அரசியலிலிருந்து விலக அல்லது ஓய்வு பெறுவதென்றால் சமஷ்டியைப் பற்றி பேசலாம்‘ என்றார்.

மேலும் மாகாணசபைக்கு போலிஸ் அதிகாரம் வழங்குவதுபற்றி வினாவியபோது, ‘மாகாண முதலமைச்சர் பாதுகாப்பு சட்ட சபைக்கூட்டத்தை கூட்டுகிறார், ஆனால் அதிகாரம் வழங்கினால் தாங்கள் நினைத்ததெல்லாம் செய்து விடுவார்கள் எனது மக்கள் போலிஸ் அதிகாரங்கள் வழங்க வேண்டாமென்றே கூறுவார்கள்‘ என்றார்.

இதிலே ‘எனது மக்கள்‘ என கூறியதிலிருந்து பெரிய உண்மை வெளியாகியிருக்கின்றது. இலங்கையில் இரு வேறு மக்கள்கூட்டம் உள்ளதென்பதே. ஒன்று ‘எனது மக்கள்‘ என்ற சிங்களமக்கள்! மற்றையது தமிழ்மக்கள். இரண்டும் பிரிந்து வாழும் இனங்கள் என்பதை அவராகவே ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது, ஒரு தேசத்தில் இரு வேறுபட்ட நாட்டின் மக்கள்கூட்டம் வாழ்கிறார்கள் என்பதே அதன் கருத்து எனலாம்.

ஆகவே, ‘தமது மக்களை‘ திருப்திப்படுத்தி ஆட்சியேறும் நிலை இருக்கும் வரை தமிழரின் உரிமை கானல்நீர் ஆகும். ஆதலால், தமிழ்மக்கள் தம்மை தாமே சீர்ப்படுத்தி வாழ்வதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதே இதற்கான தீர்வாகும். முதல் வேலைத்திட்டமாக ஈழத்தமிழர் ஒற்றுமையுடன் ஒரு குடையின் கீழ் வருவதே மிகுந்த சாத்தியப்பாட்டை தோற்றுவிக்கும்.

தசக்கிரீவன்