“.அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை… சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள  பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது… ” 

தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்

இந்த வருடம் 83 கறுப்பு ஜூலை கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான ஒரு தலைமை இல்லாது உள்ள நிலையில் இலங்கை அரசு தொடர்ந்தும் இலட்சம் வரையான தமிழர்களைத் தடுப்பு முகாம்களில் வைத்திருக்கிறது. அத்தோடு 10,000 வரையான இள வயதினர் வெளிப்படுத்தப்படாத இடங்களில் சிங்கள இராணுவத்தினரால் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாகி வருகின்றனர். இந்த ஆண்டில் தமிழர்களின் திடசங்கற்பமாக அரசியல் வழிமுறைகள் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தை தொடரச் சபதம் கொண்டுள்ளனர். மேலும் சர்வதேச சமூகத்தினை வற்புறுத்தி இலங்கை அரசை இன அழிப்புப் போர் குற்றங்களுக்காக நீதி விசாரணைக்கு உட்படுத்தவும், இலங்கை அரசின் சிறைக் கைதிகளாக உள்ள தமிழரை விடுவிக்கவும் சபதம் எடுத்துள்ளனர்.

இருபத்தேழு வருடங்களுக்கு முன்னர் இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புக் கலவரத்தை முன்னெடுத்து நடத்தி 3000 தமிழரின் உயிரையும் மூவாயிரம் இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதி உள்ள தமிழரின் சொத்து அழிப்பையும் ஏற்படுத்தியது. 1983 ஜூலை 24 முதல் ஜூலை 30 வரையான தினங்கள் தமிழ் மக்கள் மனதில் மறக்கமுடியாத அவல நாட்களாக ஆழப்பதிந்து விட்டன. தமிழர்கள் இம்மாதத்தை கரிபடிந்த மாதமாக கடைப்பிடிப்பது மட்டும் இல்லாமல் இந்த மாதத்தை தமிழர் தமது எதிரிகளை எப்படி எதிர்கொண்டு மேலும் செயற்படுவது பற்றிய சபதம் எடுக்கும் மாதமாகவும் கருதுகின்றனர்.

உலகில் வாழும் 800 இலட்சம் தமிழர்கள் வாழும் நிலையிலும் தமிழருக்கு ஆட்சி அதிகாரம் கொண்ட ஒரு நாடு இல்லாதுள்ளது. தமிழர் எங்கும் உள்ளனர் அந்தந்த நாடுகள் செழிக்கக் கடினமாக உழைப்பவர்கள் என மட்டுமே ஆறுதல் அடையமுடிகிறது.

ஐக்கிய நாடுகளின் சபையால் அங்கீகரிக்கப்பட மற்றும் அழுத்தம் கொடுக்குமளவு தமிழர்களுக்கு செல்வாக்கு இல்லை. ஆயிரக்கணக்கில் அவர்கள் இலங்கையில் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் கொல்லப்பட்ட போது உலகத் தமிழரால் தாமிருக்கும் நாடுகளின் அரசை உதவக்கேட்டு வீதிகளில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்வதைத் தவிர வேறு எந்தவித உதவியும் செய்ய முடியவில்லை. என்ன நடந்தும் ஏறக்குறைய எல்லா நாடுகளுமே அடக்குமுறைக்கு ஆளான மக்களுக்கு உதவாது அரசின் இறையாண்மையைக் காரணம் காட்டி அடக்குமுறை அரசான சிங்கள அரசுக்கு ஆதரவை வழங்கின. மே 2009ல் ஒரு சில நாட்களில் 30,000 தமிழரைக் கொன்றது உட்பட 100,000 தமிழரின் உயிரைப் பறித்த அரசின் இன அழிப்புப் போரை நடத்திய இலங்கை அரசைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ முயலவில்லை. இப்பொழுது வவுனியாவில் யேர்மன் நாசிகளின் கொலைக் களங்களை ஒத்த தடுப்பு முகாம்களில் எல்லாத் தமிழரும் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 10,000க்கும் அதிகமானோர் இரகசிய இடங்களில் மேலதிக விசாரணைகள் என்ற சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பிரச்சனையைப் புலம்பெயர் தமிழர் கையில் எடுத்துவிட்டனர்

இப்பொழுது உள்ள கள நிலைக்கு மாறாக, புலிகள் இராணுவ ரீதியாக மே 2009ல் தோற்கடிக்கப்பட்ட நிலையில், தமிழ் மக்கள் இன்னமும் அரச வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அரசு ஆதரவு கொண்ட துணை இராணுவக் குழுக்களின் தொடர்ச்சியான மிரட்டலுக்கு தமிழ் மொழி ஊடக வெளியீட்டுச் சாதனங்கள் மரண அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளன. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், வைத்தியர்கள், மருத்துவசாலை இயக்குநர்கள் உட்பட இன்னும் பல தரப்பினர் தடுப்புக்காவலுக்கு கூட்டிச் செல்லப்பட்டு அவர்களால் தேசிய பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தல் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றனர். மேலும், இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ளவர்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இவை தமிழீழக் கனவை முற்றாக நசுக்கி விட்டதாகக் கூறிவரும் போதிலும் இக்கொலைகள் இராணுவத் தடுப்புக் காவலில் உள்ள தமிழ் மக்களுக்கும் ஏற்படுகின்றன. இந்நிலையில் புலம்பெயர் தமிழர்களுக்கு ஈழத் தமிழரின் விடுதலையை தமிழீழ விடுதலைப் புலிகளின் வழியில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தார்மீகக் கடப்பாடு இருக்கின்றது. நின்று விட்ட இடத்திலிருந்து தமிழீழ விடுதலைப் போரை நகர்த்திச் செல்ல வேண்டிய பொறுப்பைத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு புலம்பெயர் மக்களிடத்தில் சுமத்தியுள்ளது.

இந்த வருடம், “மீண்டும் எழுவோம்” என்ற குரலுடன் புலம்பெயர் தமிழர் சபதம் எடுத்து அமைதி வழி ஆர்ப்பாட்டங்களைத் தாம் வாழும் நாடுகளில் தமது நாட்டு அரசுகளைத் தமது அரசியல் கோரிக்கைகளை மறந்து விடாது நினைவூட்டி வருகின்றனர். சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் இலங்கை அரசின் தமிழின அழிப்புப் போர்க்குற்றங்களை விசாரணைக்கு உட்படுத்தவும் வற்புறுத்தி வருகின்றனர்.

இலங்கை இராணுவத்துக்கும் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இடையில் போர் தொடங்குவதற்கு முன்பாகத் தமிழர்கள் அமைதிவழியில் தமது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிய போது என்ன நடந்தது என இச்சந்தர்ப்பத்தில் நினைவு கொள்வது பயன் தருவதாக இருக்கும். 1956ல் இருந்தே தமிழருக்கு எதிரான சிங்களவரின் வன்முறைகள் இருந்துள்ள போதிலும், 1983 ஜூலைக் கலவரத்துக்கு மூல காரணமாக இருந்தது யாழில் ஏற்பட்ட 13 சிங்கள இராணுவத்தினரது மரணம் எனப் பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. ஆனாலும் 1983 ஜூலைக் கொடுமைகள் சர்வதேச சமூகத்தினது கவனத்தையும் இந்தியாவின் நேரடித் தலையீட்டையும் தமிழருக்கு ஆதரவாக பெற்றுக்கொடுத்தது.

1983 ஜூலைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக மே 11, 1983ல், பெரதேனிய சர்வகலாசாலையில் சிங்கள மாணவர் தமிழ் மாணவர்களைத்தாக்கினர். தொடர்சியாக 3 தினங்களுக்குத் தமிழ் மாணவர்கள் சிங்கள சமூகத்தின் வெறுப்பின் கொடுமையை அனுபவித்தனர். ஆனால் சர்வகலாசாலை நிர்வாகமும் கல்விமான்களும் நாட்டின் ஆட்சியாளரும் தமிழ் மாணவருக்கு எதிரான அந்த வன்முறையை நிறுத்தக் கடுகளவும் முயற்சி செய்யவில்லை.

பழைய மாணவர்கள் சர்வகலாசாலை நிர்வாகத்தினதும் அதிகாரிகளினதும் இது காலவரை கடைப்பிடித்து வந்த நடைமுறை இல்லாது போனதை அவதானித்தனர். தாம் உடனடியாகத் தமது வீடுகளுக்குத் திரும்பி மே 11 முதல் மே 13 வரை தமக்கு நேர்ந்ததை நினைத்து மன ஆறுதல் பெற எண்ணிய தமிழ் மாணவர்களை அவர்களின் நிலையை உணராது அவர்களைத் தொடர்ந்தும் வகுப்புகளில் இருக்கும்படி கட்டாயப் படுத்தப்பட்டனர். சர்வகலாசாலை தமிழ் மாணவர்களுக்குக் கல்வி கற்க ஏற்ற பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கத் தவறிவிட்டது.

தமிழ் மாணவரை சர்வகலாசாலையிலிருந்து நிரந்தரமாக விரட்டிவிடுவதே தமிழ் மாணவர் மீதான தாக்குதலின் நோக்கமாக இருந்தது. முன்னுதாரணம் இல்லாத சர்வகலாசாலை நிர்வாகத்தின் நடத்தை தாக்குதலை நடத்தியவர்களின் எண்ணம் நிறைவேறக் காரணமாயிற்று. ஏறக்குறைய 95 வீதமான தமிழ் மாணவர் சர்வகலாசாலையை விட்டுத் தமது வீடுகளுக்குத் திரும்பி விட்டனர். இந்த மாதிரியான தமிழ் மாணவரின் ஒட்டு மொத்த வெளியேற்றத்தின் பின்னரும் சர்வகலாசாலை பாடங்களையும் தேர்வுகளையும் தொடர்ந்து நடத்தியது. இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சர்வகலாசாலை நிர்வாகம் தமிழ் மாணவருக்குச் சிறிதளவு இரக்கமும் காட்டத் தவறிவிட்டது.

1983 ஜூலையில் யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமையினால் தமிழ் மக்கள் மீது சிங்களவருக்கு வெறுப்பை மூட்டியது. இலங்கை இராணுவம் ஜூலை 24 முதல் 30 வரை தொடர்ச்சியான பதிலடித் தாக்குதலை எதுவித குற்றமும் செய்திராத அப்பாவித் தமிழர் மீது அவர்கள் தமிழராகப் பிறந்த காரணத்தால் நடத்தியது. தமிழரின் சொத்துக்களைச் சூறையாடல், சேதப்படுத்துதல் உட்பட இத்தாக்குதல் இருந்தது. இலங்கை அரச அதிகாரிகள் இவற்றைத் தடுக்க எதுவித முயற்சியும் எடுக்காது அரசு செயலிழந்து விட்டது எனக் கூறிக் கொண்டனர்.

ஜூலை 25 நள்ளிரவு வேளையில் மக்கள் கூட்டம் கையில் தமிழ் வாக்காளர் பதிவு இடாப்புகள் சகிதம் மின் சூள் வெளிச்சத்துடன் தமிழர்களின் வீடுகள், தொழில் நிறுவனங்களை அடையாளம் கண்டு அவற்றை சூறையாடி அழித்தனர். எல்லா வாகனங்களையும் மறித்துச் சோதனையிட்டு தமிழர் எவரேனும் தென்பட்டால் கொன்று ஊனப்படுத்தித் தீயிட்டுக் கொழுத்தினர். கண்ட சாட்சிகள் அந்தக் கூட்டத்தை இராணுவத்தினர் கை அசைத்து மகிழ்ந்ததையும் பதிலுக்கு மக்கள் கும்பலும் கை அசைத்துச் சென்றனர் எனவும் கூறியுள்ளனர்.

பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் கோயில்களிலும் பாடசாலைகளிலும் புகலிடம் தேடினர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வெலிக்கடைச் சிறையில் தடுத்து விளக்கமறியல் சிறைக்கைதிகள் 35 பேர் சிங்களச் சிறைக்கைதிகளினால் சிறைக்காவலரின் அனுசரனையுடன் கத்திகள், ஈட்டிகள,; பொல்லுகள், இரும்புச் சிலாகைகளினால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வன்செயல் ஏனைய நகரங்களான கம்பகா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, திருகோணமலைகளுக்கும் விரைந்து பரவியது. இந்திய வம்சாவழித் தமிழரின் நகரமான நுவரெலியா அருகேயுள்ள கந்தப்பொல முற்றாக துடைத்து அழிக்கப்பட்டது.

ஜூலை 26ந் திகதி இலங்கை அரசு தமிழர் எதிர்ப்பு வன்செயல் செய்திகளுக்கு ஊடகத் தணிக்கை முறையைக் கொண்டு வந்தது. இலங்கை அரசின் குழப்ப நிலை கண்கண்ட சாட்சிகளின் கூற்றுக்களாகவும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் ஒளிப் படங்களாலும் வன்முறையின் உண்மையான பரிமானம் தெரியவந்தது.

ஜூலை 27ல் முதற் படுகொலை நடந்து இரண்டாவது நாளில் மீண்டும் வெலிக்கடைச் சிறையில் 17 தமிழ் அரசியல் கைதிகள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். உயிர் தப்பி மீதமிருந்த 36 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். சூறைச் சம்பவங்கள் தொடர்ந்தன, ஊரடங்கு வேளையும் நீடித்தது. கண்கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி கொழும்பு நகர வீதிகளில் கருகியும்; “புள்ளடி” அடையாளம் இடப்பட்ட பிரேதங்களும் காணப்பட்டன.

ஜூலை 28ல் அரச அதிபர் ஜே.ஆர்.ஜயவர்த்தனா தமிழருக்கு எதிரான வன்முறை தொடங்கிய பின்னர் முதல் முறையாக நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் எவராவது பிரிவினை பற்றிப் பேசினால் அவர் தமது “குடியுரிமை” இழப்பர் எனக் கூறி எரிகிற தீயில் எண்ணை ஊற்றும் பணியைச் செய்தார். மேலும் “…சிங்கள மக்களின் நாட்டைப் பிளவு படுத்தும் முயற்சியை முறியடிக்கும் குரலுக்கு இணங்க வேண்டிய காலம் வந்து விட்டது” என்றும் கூறினார்.

ஜூலை 29ல் கொழும்பிலிருந்து தமிழரை சரக்குக் கப்பல் மூலம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. இடம் பெயர்ந்த மேலும் பல நூற்றுக் கணக்கானோர் சரக்குக் கப்பல் மூலமான அடுத்த பயணத்துக்காக யாழ்ப்பாணம் செல்லக் காத்திருந்தனர்.

தமிழர் இனிமேலும் இலங்கை அரசை நம்பத் தயாராக இல்லை

தமிழர் இனிமேலும் இலங்கை அரசை நம்ப முடியாது. முன்னர் பதவியில் இருந்த இலங்கைத் தலைவர்கள் கூட தமிழரின் அரசியல் கோரிக்கைகளை நிறை வேற்றித் தமிழரை அரவணைத்துக் கொண்டு அமைதிவழியில் இணைந்து வாழத் தவறியுள்ளனர் என்பதை அவர்களின் இனவெறிப் பேச்சுக்கள் காட்டி உள்ளன. தமிழ்த் தலைவர்கள் தனி நாடு கேட்கவில்லை. மாறாக இணைப்பாட்சி மூலம் தம்மைத் தாமே ஆழும் அரசமைப்பு முறையைத்தான் கேட்கின்றனர். ஆயினும் இலங்கைப் பேரினவாதம் தமிழரின் அமைதிவழிக் கோரிக்கையை வன்முறை கொண்டு எதிர்த்தனர். தமிழ் விடுதலைப் போராளிகள் வானத்திலிருந்து வந்தவர்கள் அல்ல மாறாக இலங்கை அரசினால் உருவாக்கப்பட்டவர்கள்.

1983 முதல் 2009 வரையான கொடிய போரினால் பத்து இலட்சத்துக்கும் அதிகமானோர் நாட்டை விட்டோடினர், உள் நாட்டில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்து வாழுகின்றனர். ஒரு இலட்சத்து முப்பதினாயிரம் பேரைக் கொன்றும் முப்பதினாயிரம் பெண்களை விதவைகளாக்கியும் பல்லாயிரம் அநாதைகளை உருவாக்கியும் காயப்படுத்திய வடு ஆழமானது. இந்தக் காயத்தின் வடுவை உலகிலுள்ள தமிழ் மக்களின் மனதில் ஏற்படுத்திய இலங்கை அரசு நாட்டின் இரு இனங்களுக்கிடையில் நிகழ்ந்த இக்கொடும் போரின் பின்னரும் கூட ஒற்றை ஆட்சி முறையைக் கைவிட்டு இணைப்பாட்சி முறையில் சேர்ந்து வாழ மறுப்பதைக் காணும் அவலம் பரிதாபகரமானது.

எனவே சிங்களத்தினால் காயமடைந்து காயங்கள் புரையோடித் தத்தளிக்கும் தமிழ் மக்களை இணைந்து வாழக் கேட்பது யதார்த்த நிலைக்கு வெகு தூரத்தில் உள்ள கற்பனையாகும்.

தமிழ் மக்களை மறந்து மன்னித்து வாழக் கேட்பது மிகக் கோரமான தவறாகும். ஆனால் சர்வதேச சமூகம் இலங்கை அரசின் மீது அழுத்தத்தை பாவித்து தமிழருக்கான சுயாட்சி வழஙகித் தமிழரை மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை 1983 போன்றதொரு கொடுமைக்கு இலங்கை ஆளாக்காது என்று செயலால் உத்தரவாதமளிக்க வேண்டும். எனவே இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழருக்கு கறுப்பு ஜூலை என்றுமே மறக்க முடியாது உள்ளது. உலகெங்கும் உள்ள கறுப்பு இன மக்களுக்கு எப்படி பெப்ருவரி எப்படியோ தமிழருக்கும் ஜூலையும் உள்ளது.

தமிழருக்கு இந்த மாதம் சிந்தனைக்கும் நினைவு கூரவும் செய்ய வேண்டிய மாதம். மேலும் இந்த ஆண்டின் நினைவு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 2009 வன்னியில் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையிலும் பல்லாயிரம் மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் தமிழர் பல ஆர்ப்பாட்டங்களை “மீண்டும் எழுவோம்” எனப் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தி சர்வதேச சமூகத்தை அதிகளவு அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புகள் மூலம் இலங்கை அரசை தமிழ் மக்களுக்கு சுதந்திரமும் நீதியும் கொண்ட தீர்வை முன்வைத்து அவர்கள் தமது தாயகத்தில் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் வாழ வழி செய்ய நிர்பந்திக்க வேண்டும்.

தொல்காப்பியன்