கறுப்பு யூலை என்னும் இந்தக் கோரத்தினை மீள் நினைக்கவும், நம் தமிழினத்தின் அவலம் இன்னும் முடியவில்லை என உணர்த்தவும் நாம் தொடர்ந்து போராடுவோம். தமிழீழ தனியரசே தீர்வென சர்வதேசத்துக்கு உரத்துக் கூறிடுவோம். இவ்வாறு  தமிழீழ விடுதலைப்புலிகள் அறிக்கை!

அறிக்கையின் முழுவடிவம்:

தலமைச்செயலகம்,
தமிழீழ விடுதலைப்புலிகள்,
தமிழீழம்.
 
எமது அன்புக்குரிய தமிழ் மக்களே!
 
ஜூலை 23, இன்றோடு இருபத்தேழு ஆண்டுகளாகின்றது – யூலைக் கலவரம். சிறீலங்காவின் அரச பயங்கரவாதத்தின் கொடூரமான கரங்களில் தமிழினம் அவலத்தை அனுபவித்த துயரமான நாள். யூலை 83 இற்கு முன்னும் பின்னும் எத்தனையோ பல்லாயிரம் கோர இறப்புக்களை, சொத்துடமை இழப்புக்களை, அவமானங்களைச் சந்தித்திருக்கின்றோம், சந்தித்துவருகின்றோம்.

காலனித்துவ ஆதிக்கத்துக்குப் பின்னரான காலத்தில் தமிழ் மக்கள் தமது தாயகமண்ணில் பூரண சுதந்திரத்தை இழந்து சிறீலங்காவின் இனவெறி ஆட்சிக்குட்பட்டு சிக்கிச் சீரழிந்து வருகின்றனர். சமாதானம் பேசவந்த வல்லூறுகளினாலும், உலக ஆதிக்க சக்திகளினாலும், துரோகத்தனங்களினாலும் எமதியக்கம் முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக மௌனித்தது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் இன்றுவரையான நாட்களில் இச்சக்திகள் எவையும் எமது மக்களின் அடிப்படை பிரச்சனைகளைக்கூட தீர்க்க முடியவில்லை.

மக்களின் விடிவுக்காகப் போராடிய எம்மை, பயங்கரவாதிகளாக்க முற்பட்ட சிறீலங்கா தற்போது ஐ.நாவின் பிடியில் சிக்கியுள்ளது.
இதுவரைகாலமும் இனவெறி கொண்ட சிறீலங்காவிடம் நாம் பட்ட துன்பத்தை தற்போது சர்வதேசம் அனுபவிக்கின்றது. இந்தசாதகமான சூழலை நாம் பற்றிக்கொள்ள வேண்டும். உலகில் பரந்து வாழும் தமிழினம் ஒன்றுபட்டு உரத்துக் குரல் கொடுக்கவேண்டும். இந்நிலையில், கறுப்பு யூலை என்னும் இந்தக் கோரத்தினை மீள் நினைக்கவும், நம் தமிழினத்தின் அவலம் இன்னும் முடியவில்லை என உணர்த்தவும் நாம் தொடர்ந்து போராடுவோம். தமிழீழ தனியரசே தீர்வென சர்வதேசத்துக்கு உரத்துக் கூறிடுவோம்.

தலமைச்செயலகம்,
தமிழீழ விடுதலைப்புலிகள்,
தமிழீழம்.

தமிழீழத்தின் குரல்