சிறிலங்கா அரசு கடந்த 5ஆண்டுகளாக அனுபவித்து வந்த பொதுப்படுத்தப்பட்ட முன்னுரிமை முறைமையைத் (GSP+) தற்காலிகமாக நிறுத்துவது என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை சார்ந்த நாம் வரவேற்கிறோம். ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா அரசு பன்னாட்டு அளவைகளுக்கு அமைவான அடிப்படை மனிதவுரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை கொடுக்க மறுத்த பின்னணியிலேயே நாம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை ஆதரிக்கிறோம்.

2009 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியமே சிறிலங்காவின் அதிமுக்கிய ஏற்றுமதிச் சந்தையாக விளங்கியது. அதன் பெறுமதி யூரோ 220 கோடியாகும். இது சிறிலங்காவின் மொத்த ஏற்றுமதியில் ஏறக்குறைய 40 விழுக்காடாகும். இதில் மூன்றில் இரண்டுபங்கு துணியும் ஆடைகளும் ஆகும். (GSP+) சலுகைகள் தெரிந்தெடுக்கப்பட்ட நாடுகள் சிலவற்றுக்கே கொடுக்கப்படுகின்றன. தொடர்ச்சியான பொருளாதார மேம்பாடு மற்றும் நல்லாட்சி தொடர்பான சில மரபுகளை நடைமுறைப்படுத்தும் நாடுகளுக்கே இந்த சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

முக்கியமாக மூன்று பன்னாட்டு மனிதவுரிமை மரபுகளைக் குறிப்பிடலாம். அவையாவன பன்னாட்டு பொது மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய மரபு, சித்திரவதைக்கு எதிரான மரபு மற்றது குழந்தையின் உரிமைபற்றிய மரபு. சிறிலங்கா அரசு, உலக நாடுகளால் விலக்கி வைக்கப்பட்டிருக்ம் நாடுகள் போல் நடந்து கொள்வதையிட்டு நாடுகடந்த தமிழீழ அரசு கவலை கொள்கிறது. சிறிலங்கா அரசு பன்னாட்டு மனிதவுரிமை மரபுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்ற உறுதிமொழியை ஐரோப்பிய ஒன்றியத்துக்கக் கொடுக்க மறுப்பதன் மூலம் தனது சொந்தக் குடிகளான சிங்கள மக்களின் நலன்களைவிட தனது நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்க முனைகிறது.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய (GSP+) சலுகையானது பெரும்பாலும் சிறிலங்காவின் சிங்கள சமூகத்திற்கே அநுகூலமாக அமைந்திருந்தது. இதே சமயம் சிறிலங்கா அரசு கடந்த அறுபது ஆண்டு காலமாக தமிழ் மக்களின் அடிப்படை மனிதவுரிமைகளை மீறியுள்ளது. எனவே சிறிலங்கா அரசுக்கு எதிராக சிங்கள பொது மக்களைக் கிளர்ந்தெழுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதன் மூலம் சிங்கள மக்கள் சிறிலங்கா அரசு ஆகக் குறைந்த பன்னாட்டு மனிதவுரிமைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள வைக்கவேண்டும்.

இது சிறிலங்கா மக்கள் (GSP+) தகைமையைத் தொடர்ந்து அனுபவிக்க வழிசெய்யும். தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சிக்கும் இது வழிகோலும். அதனால் சிறிலங்கா குடிமக்களது வறுமை களையப்பட்டு சிங்கள மக்களது வாழ்க்கை மேன்மையடையும். (GSP+) சலுகை மறுக்கப்பட்டாலும் சிறிலங்காவின் ஆகக்கூடிய ஏற்றுமதிச் சந்தையாக ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து விளங்கும் என எதிர்கூறல் சொல்லப்படுகிறது.

 இந்தப் பொருளாதார நெம்புகோலை ஐரோப்பிய ஒன்றியம் விரைவாகப் பயன்படுத்தி சிறிலங்காவின் மனிதவுரிமை நிலைமையைச் செம்மைப்படுத்தல் வேண்டும். 2009 ஆண்டு நடைபெற்ற போரின் கடைசிக் கட்டத்தில் சிறிலங்கா அரசும் அதன் இராணுவமும் தமிழ் தேசத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்ட – கீழ்கண்டவை உட்பட – மிருகத்தனத்தை இப்போது உலகம் விளங்கிக் கொள்ளத் தொடங்கியுள்ளது.

* ஆயிரக்கணக்கில் திரளாகக் கொல்லப்பட்ட தமிழ்ப் பொதுமக்கள் (இறந்தவர்களின் எண்ணிக்கை 40,000 – 80,000 வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

 * பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளும் ஐ. நா. சபை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வெள்ளைக் கொடியுடன் இரணுவத்திடம் சென்ற அவர்களது அரசியல் பிரிவுத் தலைவர்களும் கொலை செய்யப்பட்டமையும்.

 * 300,000 இற்கும் மேலான தமிழ்ப் பொதுமக்கள் முட்கம்பி வேலிக்குப் பின்னாலே இருந்த வதை முகாம்களில் பலவந்தமாக அடைக்கப்பட்டார்கள்.

 * அவர்களது நலனைக் கவனிக்கத் தன்னிச்சையான மனிதவுரிமை அமைப்புக்களுக்கு அனுமதி மறுத்தல்.

 * கைதுசெய்யப்பட்ட பல தமிழீழ விடுதலைப் போராளிகள் மிக அணித்தாக வைத்துச் சுட்டுக் கொலை செய்யப்பட்டது. சிறிலங்கா இராணுவத்திடம் சென்றடைந்த பின்னர் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போனது. போர்க் காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களைச் சுதந்திரமாக விசாரிக்க சிறிலங்கா பிடிவாதமாக மறுத்துவிட்டது.

பன்னாட்டு மனிதவுரிமை மரபுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தைத் தர மறுத்தமை, போரின் கடைசிக் கட்டத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை விசாரிக்க ஐ. நா. நியமித்த ஆலோசனைக் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது, அரச சார்பற்ற மனிதவுரிமை அமைப்புக்கள் தமிழ்ப் பகுதிகளுக்கு சுதந்திரமாகச் செல்வதற்கு தடை செய்தது ஆகியன சிறிலங்கா ஈழத் தமிழர்களை எப்படி நடத்துகிறது என்பதற்கு போதிய சாட்சியாகும். ஏனைய மக்களைப் போல் தமிழீழ மக்களும் தங்களது தாயக மண்ணில் சிறிலங்காவின் தலையீடு மற்றும் இராணுவ வல்வளைப்பு இல்லாது அமைதியோடும் பெருமையோடும் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் ஆவர்.

நாடுகடந்த தமிழீழ அரசு விடுக்கும் வேண்டுகோள்:

சிறிலங்கா அரசு தனது சிங்கள குடிமக்களை இட்டும் தமிழீழ குடிமக்களை இட்டும் பன்னாட்டு மனிதவுரிமை மரபுகளை கடைப்பிடிப்பதாக உறுதிமொழி தரும் வரையும் தமிழீழ மக்களது தாயகத்தை விட்டு தனது படைகளை விலக்கிக் கொள்ளும் வரையும் பின்வரும் விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டுகின்றோம். சிறிலங்காவின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்கா மீது மேலதிக வாணிகக் கட்டுப்பாடுகளை விதித்தல் வேண்டும். சிறிலங்காவுக்கு வாணிக அநுகூலங்களை வழங்கும் ஏனைய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பின்பற்றி அப்படியான அனநுகூலங்களைப் பிற்போட வேண்டும். சிறிலங்காவோடு வாணிகம் மேற்கொள்ளும் அமைதி விரும்பும் நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக வாணிக தடைகளை விதித்தல் வேண்டும்.

பேராசிரியர் E.A. செல்வநாதன்

ஒருங்கு கூட்டுனர்.