மாண்பு மிக்க கனவான்களே

எமது உடமையான தாயகத்தில் உரிமையுடன் வாழவேண்டும் வரலாற்றுக் காலங்களுக்கு அப்பால் இலங்கையில் தமிழர்என்ற தனி நாட்டினம் வாழ்ந்திருந்ததற்கான சான்றுகள் பல உள்ளது. ஏறத்தாள 2500 ஆண்டுகளுக்கு முன்னதாக சிங்களவர்என்ற இனத்தின் பிதாமகனான விஜயனும் அவனது தோழர்களும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்திருந்தனர். அவர்களின் வருகையின் போது இயக்கர், நாகர் என்ற தமிழினம் இலங்கையில் நாகரீகமுள்ள, வளமிக்க சமூகமாக வாழ்ந்திருந்தது. இதை சிங்கள மக்களின் ஆதி நூலாக கருதப்படும் மகாவம்சம்கூறுகிறது.

மேலும் கி.பி. 140 ஆண்டுகளில் வாழ்ந்திருந்த கிரேக்க நாட்டு புவியியல் அறிஞர் தலாமி‘ (Ptolemy) யின் இலங்கை வரைபடம் தமிழர் வாழ்விடங்களை துல்லியமாக காட்டுகிறதுவரலாற்றுக் காலங்களை கடந்து, 1529 ம ஆண்டுகளில் போத்துக்கீசர் இலங்கையைக் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து ஒல்லாந்தரும், பிருத்தானியரும் தம்வசமாக்கி ஆட்சி செய்தனர். போத்துக்கீசர் வந்திறங்கிய போது இலங்கைத் தீவில் மூன்று அரசுகள் ஆட்சியில் இருந்தன

* நல்லூரை தலைநகராக கொண்ட யாழ்ப்பாண தமிழீழ அரசு.

* கொழும்பு கோட்டையை தலைநகராக கொண்ட கீழ்நாட்டு சிங்கள அரசு.

* கண்டியை தலைநகராக கொண்ட மலைநாட்டு சிங்கள அரசு

யாழ்ப்பாண தமிழீழ அரசினுள்(திருக்கோணமலை மட்டக்களப்பு) கிழக்கு மாகாணமும் அடங்கியிருந்தது

ஒல்லாந்தர் ஆட்சியின்போது கைலாய வன்னியன்வடக்கு மாகாணத்திலுள்ள வன்னிப் பெருநிலப்பரப்பை தனித் தமிழ் இராட்சியமாக ஆண்டுவந்தான். இந்த ஆவணங்கள் தமிழ் நாட்டினம்‘ – ‘சிங்கள நாட்டினம்என்ற இரு வேறுபட்ட மதம் தழுவிய, வாழ்வுமுறை, பண்பாடு, நீதி, அரசு என்ற வேறுபாட்டுடன் இரு இனங்கள் வாழ்ந்திருந்ததற்கான அடையாளங்களாகும்

ஒல்லாந்தர் ஆட்சி ஏற்றதன் பின்னர் மேற்கூறிய ஆட்சிமுறையை அடியொற்றியே 6 ஆட்சிப் பிரிவுகளாக பிரித்தனர்

* கொழும்பு ஆட்சி மாவட்டம்

* புத்தளம் கற்பிட்டி ஆட்சி மாவட்டம்

* யாழ்ப்பாண ஆட்சி மாவட்டம்

* திருக்கோணமலை ஆட்சி மாவட்டம்

* மட்டக்களப்பு ஆட்சி மாவட்டம்

* கண்டி ஆட்சி மாவட்டம் 

இதை ஏன் குறிப்பிடுகிறோமென்றால், ‘தமிழர்கள்புதிதாக தமக்கான உரிமைகள் எதையும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து கேட்கவில்லை. சிங்கள அரசுகளால் காலம் காலமாக பறித்தெடுக்கப்பட்ட தமது ஆதிகால உரிமைகளை மீண்டும் வழங்குமாறு உரிமையாக கேட்கிறார்களே தவிர சலுகையாக அல்ல என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு தெரியப்படுத்துவதேயாகும்

பிருத்தானியர் ஆட்சிக்காலம் நிறைவேறி நாட்டைவிட்டுச் செல்லும்போது முன்பு இருந்த இலங்கையர் ஆட்சிமுறையை விடுத்து சிங்களவர்களுக்கு வசதியாக முன்னுரிமை வழங்கிச் சென்றமையே தமிழருக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு இன்றுவரை வாழவேண்டி இருப்பதை இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்ட விரும்புகிறோம். இலங்கையில் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக தமிழ்மக்கள் சாத்வீகமாக போராட தொடங்கினார்கள். இவற்றுக்கெதிராக இலங்கை அரச படைகளினதும், சிங்களக் காடையர்களினதும் துணையுடன் இலங்கை அரசு 1958 ம் ஆண்டு மிகப்பெரிய இனக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழ்மக்கள் பலரைக் கொன்றும், அங்கவீனமாக்கியும் பொருளாதாரங்களை நாசமாக்கியும், கொள்ளையிட்டும், கற்பழித்தும் தமிழ்மக்கள் மீது தமது மேலாதிக்கத்தை பிரயோகித்தனர்

1960 ம் ஆண்டிலே தமிழ்மக்கள் தமக்கு மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக சத்தியாக்கிரகப் போரில் ஈடுபட்டனர். அவ்வேளையிலும் சத்தியக்கிரகிகளை இலங்கை அரச படையினர் அடித்து நொறுக்கினர். தமிழ்மக்களுக்கு சிங்களப்பேரினவாதம் இழைக்கும் கொடுமைகளைக் கண்டு மனிதநேயம் கொண்ட பிறநாடுகள் கொடுத்த அழுத்தங்களினால் காலத்திற்கு காலம் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அவை எதுவுமே இதுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. தங்களின் பார்வைக்காக சில

* 1921 – இலங்கைத் தேசியக் காங்கிரஸ் என்ற தமிழ் அரசியல் அமைப்புக்கு சிங்கள அரசினால் எழுத்தில் வழங்கிய கொழும்புப்பிரகடனம்

* 1956 – பிரதம மந்திரி சேர் ஜோன் கொத்தலாவல யாழ்ப்பாணக் கூட்டத்தில் சிங்களம், தமிழ் அரசமொழியாக்குவேன் எனக் கூறிவிட்டு அதே ஆண்டில் களனி மாநாட்டில் மறுத்துரைத்தார்.

* 1957 – பண்டா செல்வா ஒப்பந்தம் செய்யப்பட்டது ஆனால் நடைமுறைப் படுத்தப்படவில்லை.

* 1976 – இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் தமிழ்மக்களுக்கான சுயமான ஆட்சி நிறுவுவதற்கான கோரிக்கையை முன்வைக்கப்பட்டது. இதற்கான அங்கீகாரத்தை 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்மக்கள் அதற்கான ஆணையை (இதை வட்டுக்கோட்டைத் தீர்மானம் என அழைப்பர்)அக்கட்சிக்கு அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ததன் மூலம் வழங்கினர்.

* 1987 – இலங்கை இந்திய ஒப்பந்தம். வடகிழக்கு இணைப்பு சம்பந்தமாக இதுவரை எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை

தனி நாட்டுக்கான அங்கீகாரத்தை தமிழ்மக்கள் தமிழரசுக்கட்சிக்கு வழங்கியிருந்த போதும் அக்கட்சியால் முன்னெடுக்கப்படமுடியாதவாறு அக்கட்சியின் தலைவரான அமரர் S.J.V.செல்வநாயகம் உட்பட மற்றும் ஏனைய உறுப்பினர்கள் மீதும் இலங்கை அரசும் வன்முறைகளைப் பிரயோகித்தது. மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெறுவதற்கு வேறுவழியின்றி தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதம் தூக்க நேரிட்டது. நீதியின் பக்கம் அனைத்துத் தமிழ்மக்களும் நின்றிருந்ததனால் அப்போராட்டம் விடுதலைப் போராட்டமாக முகிழ்ந்தது. அரசுக்கு சமபலமாக விடுதலைப்புலிகள் இருந்தமையால் அரசாங்கம் அஞ்சியது. இதனால் வெளிநாடுகளின் துணையுடன் பலசுற்றுக்கள் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு அழைத்திருந்தது. ஆனால் உரிமைகள் எதையும் வழங்குவதற்கு இலங்கைஅரசுக்கு எண்ணம் இருக்கவில்லை. இதைப் புரிந்துகொண்ட விடுதலைப் புலிகள் அவர்களின் வஞ்சக வலையில் சிக்கிகொள்ளவுமில்லை

இலங்கை அரசுக்கு வேறு வழியில்லாமையால் புலிகளின் விடுதலைப் போரை பயங்கரவாதம்என பொய் முத்திரை குத்தி சர்வதேசத்தை ஏமாற்றியது. சில நாடுகள் இதற்குத் துணை போயின. இதன் வெளிப்பாடே கடந்த 2009 மே மாதத்தோடு விடுதலைப் புலிகள் அழித்தொழிக்கப்பட்டது. இந்த யுத்தத்தில் விடுதலைப் புலிகளை மட்டும் ஒழிப்பதென ஆரம்பித்த இலங்கை அரசு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் குழந்தைகள் உட்பட ஏராளமான தமிழ்மக்களை அழித்தும் அங்கவீனர்களாக்கியும் அகதிகளான நிலையில் கைவிட்டுள்ளது. இதுவே சிங்களமக்கள் வாழ்விடங்களில் பயங்கரவாதத்திற்கெதிரான ஒரு யுத்தத்தை இலங்கை அரசு மேற்கொள்ளுமாயின் ஒட்டுமொத்தமாக சிங்களமக்களை அழித்திருப்பார்களா? இதிலிருந்து புலப்படுவது யாதெனில் சிங்கள அரசு தமிழ்மக்களை தம்நாட்டு பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாகும்

கெளரவம் மிக்க கனவான்களே

விடுதலைப்புலிகளின் விடுதலை யுத்தம் பயங்கரவாதம் என அழித்தொழிக்கப்பட்ட தற்போதைய நிலையில் தமிழ்மக்களுக்கான நியாயமான உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பதை நீங்கள் உணர்வீர்கள் அல்லவா

நிபுணர்கள் குழுவான உங்களுக்கு இரண்டு கடமைகள் உள்ளதென உணர்கிறோம்.

* இலங்கையில் தமிழர்களுக்கெதிரான கடந்த கால போர் குற்றங்களை அடையாளம் காணல்.

* தமிழர்களுக்கான நியாயமான உரிமைகை வழங்க விதந்துரைத்தல்.

* இன்றுவரை சிறையில் வாடுகின்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளை விடுதலை செய்வதற்கு விதந்துரைத்தல்

குறிப்பு:-

மேற்படி விபரங்களை சுருக்கமாக தங்களின் கவனத்திற்கு தந்துள்ளோம். மேலும் விபரங்கள் அறிய வேண்டியிருப்பின் தயவுசெய்து தயங்காது எம்மோடு தொடர்புகொள்ளவும். இதற்கான ஆவணங்களை ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க ஆயத்தமாய் உள்ளோம்.

நன்றி

கனக கடாட்சம்

நன்றி தமிழ்வின்