‘மா புளிப்பது அப்பத்திற்கு நல்லது’ என்பார்கள். ஏனெனில் இலங்கை தனது முக்கிய அரசியல் காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. தமிழர் போராட்டத்தினூடாக இலங்கைக்கான நிபுணர்குழு விவகாரம் நோக்கப்படுதல் அவசியமாகும். இலங்கை தலைநகர் கொழும்பு – பெளத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐ. நா. அலுவலகம் (தற்போது) கடந்த இரு நாட்களாக
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், இலங்கை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சருமான விமல் வீரவன்ஸவும் அவரது சகாக்களும் நிபுணர் குழு கலைக்கப்படும்வரை சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்ற நிலையில் மேலும் பல அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விட்டவாறு முற்றுகை இடப்பட்டுள்ளது. இந்தப் போராட்டமானது வெறுமனே அமைச்சர் விமல் வீரவன்ஸவின் எதேச்சைப் போக்குடன் ஆரம்பிக்கப்பட்டதென இறுதிவரை ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.

(இராஜ)தந்திரத்திற்குள் மந்திரம்

சிறுபான்மை இன அரசியல் கட்சிகள் (மலையகம் உட்பட)  அடங்கலாக மற்றும் பெரும் தேசியக் கட்சியான ஐ.தே கட்சி உட்பட கட்சிகள் யாவற்றையும் சின்னாபின்னமாக உடைத்தெறிந்தது இலங்கை வரலாற்றிலே ஜனாதிபதி மகிந்தவையே சாரும். இதனூடாக குடும்ப ஆளுமையை அரசியலினுள் அனுமதித்து அதிகாரம் செலுத்துவதற்கு மிக இலகு வாய்ப்பாக இது அமைந்துவிட்டது.

முன்னாள் ஜனாதிபதி J.R. அவர்களால் தனது பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இராஜினாமாவிற்காக ‘வெற்றுக் காகிதத்தில் ‘கையெழுத்து வாங்க முடிந்ததே தவிர அதனால் எதுவித பயனும் இருக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி மகிந்தவால் அவரது பாராளுமன்ற உறுப்பினர்களை சாவிகொடுத்து ஆட்டும் ‘வெற்றுப் பொம்மைகளாக ‘ உள்ளும் புறமுமாக நடமாட விட்டிருப்பது என்ற சாணக்கியத்தை குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

இதன் வெளிப்பாடுதான் அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையில் தற்போது நடைபெறும் போராட்டமாகும். ஒரு அமைச்சரவையில் இருக்கும் பொறுப்புக்கொண்ட அமைச்சர் இதனை முன்னெடுக்கின்றார் என்றால் அவர் சார்ந்த தலைவர் ஜனாதிபதி மகிந்தவினோடு மந்திர ஆலோசனை நடத்தாமல் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருக்க முடியாது. இதனை இலங்கை அரசாங்கமே முன்னெடுத்துச் செல்கின்றதென்பது சொல்லாமலே புரியக்கூடியதாக இருக்கின்றது.

உள்ளும் புறமும்

ஜனாதிபதி மகிந்த குழுவினால் தயாரிக்கப்பட்ட தந்திரக் கட்டமைப்புகள் இன்றுவரை சரிவர இயங்குவதை அவதானிக்கலாம். பாராளுமன்றத்தினுள்ளே (குடும்ப)  தனக்காக, நம்பிக்கையான, அங்கத்தவர்களை பொம்மைகளாக வைத்திருப்பது ஒருபுறம். தனது இருத்தலுக்கு ஆபத்து ஏற்படும்போதோ, தனக்கு தேவையான போது சாத்வீக ரீதியாகவும் (அமைச்சர் விமல் வீரவன்ஸ போன்று)  வன்முறை ரீதியாகவும் (அமைச்சர் மேர்வின் சில்வா போன்று)  உடனடியாக களத்தில் இறங்கி ஆடுவதற்கு ஏற்ற ‘பொம்மைகளை ‘ ஏற்படுத்தியிருப்பது மேலும் ஒரு தந்திரமாகும். இந்தப் போக்கில் கைநழுவிப் போனது ஜெனரல் சரத் பொன்சேகா மட்டும் தான்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை வன்முறையின் பிறிதொரு புறமாக அதாவது இராணுவ நிலையினூடாக உபயோகிக்க முனைந்த தந்திரம் தோற்றுவிட்டது. இதனூடாகவும் ‘தமிழர் போராட்டத்தை‘  நோக்கவேண்டிய தேவையும் உள்ளது.

உட்புறத்திலே மகிந்த அரசுக்கு முண்டு கொடுக்கும் மேலும் பல அரசியல் கட்சிகள் உண்டு. அதில் ஒன்றான ‘ஹெல உறுமய’ கட்சி தனது நிலைப்பாட்டை இருவிதமாக முன்வைக்கிறது.

அக்கட்சியின் எல்லாவல மேதானந்தாவின் நிலைப்பாடானது தேசிய சுதந்திர முன்னணியால் நடாத்தப்படும் எதிர்ப்பு ஊர்வலம் முறையற்றதென கூறியுள்ள அதேவேளையில், அதை ஒழுங்குபடுத்தி ஜனநாயக வரம்பு மீறாமல் நடாத்தப்பட வேண்டுமென ஒரு ‘நழுவல்‘ போக்காக கூறியுள்ளார். அதாவது ‘எதிர்ப்பு‘ அவசியமானது, அதாவது நிபுணர் குழு இலங்கைக்கு அவசியமற்றதென கூறுவதை அவதானித்தல் வேண்டும். இதே வேளை ஹெல உறுமயக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய அத்துரலிய ரத்ன தேரர் கடந்த யூன் 28 ம் திகதி நடாத்திய எதிர்ப்பு ஊர்வலத்தில் ஐக்கிய நாட்டின் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் ‘வீழ்ந்த விடுதலைப்புலிகளுக்கு உயிர் கொடுக்க முயல்கிறார்‘ என்ற தொனிப்பொருளை முன்வைத்திருந்தார். அந்த ஊர்வலம் நடைபெற்ற விதம் ஒலிக்கப்பட்ட வார்த்தைகள், சொற்பிரயோகம் போன்றவை ஜனநாயக எல்லையின் வரம்பை மீறி இருந்தது. அதாவது வசதிக்கேற்றால் போல் வேடம் தரிப்பதற்கு உட்புறமும் ஆட்கள் உண்டென்பதுதான் உண்மை.

இந்த விடயத்தில் J.V.P யின் நிலைப்பாடானது, நிபுணர் குழுவிற்கு இலங்கை அரசுக்கு எப்படி முகம் கொடுக்கவேண்டியது என்பதாகும். மறுவளமாக நோக்கின், போர்க்குற்றங்களில் இருந்து அரசு தப்பிப்பதற்கு பொய் ஆவணங்களை உருவாக்கி தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற அறிவுரையோடு நிற்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியானது 17 ஆவது திருத்தச் சட்டம் திருத்தப்பட்டிருக்குமானால் இந்த நிலை இலங்கை அரசுக்கு ஏற்பட்டிருக்காது என்று நடக்காமல் போன இறந்த காலத்தை நிகழ் காலத்தில் கூறி தப்பித்துக் கொள்கிறது. இதற்கு மேலாக ஒரு இறைமை உள்ள நாட்டில் ஐ. நா. தலையிட உரிமையில்லை என்ற நிலைப்பாட்டில் அது உறுதியாக உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தோற்றப்பாடு யாதெனில், ‘ஒரு ஜனநாயகப் போராட்டத்தை அமைச்சர் விமல் வீரவன்ஸ நடாத்துவதற்கு உரிமை உண்டு’ என அக்கட்சியின் சார்பாக கட்சியின் பொருளாளரும் அமைச்சருமாகிய டலஸ் அழகப்பெரும கருத்தை வெளியிட்டு இந்த ‘எதிர்ப்புக்கு ‘ பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

சுருக்கமாக சிங்களக் கட்சிகளின் நிலைப்பாட்டை அவதானித்தால், அரசியல் பலத்தில் இருக்கும் பெரும்பான்மை இனக்கட்சிகள் யாவும் வெவ்வேறு திசைகளில் நின்றாலும் இலங்கையில் ‘நிபுணர்குழு‘  தேவையற்றது என்ற குறிக்கோளிலிருந்து மாறாமல் நிற்பதை உணர முடிகின்றது. அதாவது அதர்மத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது பொருளாகும்.

இந்த நிலையில் தமிழ் கட்சிகளின் முடிவுகள் என்ன?

மௌனம் சம்மதத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடும்.

தமிழ் கட்சிகள்

இலங்கையில் உள்ள பிரதான தமிழ்க் கட்சிகளை மூன்று வகையாக பிரிக்கலாம்.

* அரசு சார்ந்த தமிழ்க் கட்சிகள் (EPDP, தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் போன்றவை)

* அரசு சாராத தமிழ்க் கட்சிகள் (TNA போன்றவை)

*  நடுநிலைமை போன்று தோன்றும் கட்சிகள்

நிபுணர்குழு கலைக்கப்படவேண்டும் என்பதற்கு அரசு சார்ந்த தமிழ் கட்சிகளும், நடுநிலைமைக் கட்சிகளும் மௌனமாக இருப்பது ஓரளவு ஆறுதலைத் தந்தாலும் அது சம்மதம் என்ற முடிவுக்கு வந்துவிடும் என்ற பயமும் எழுகின்றது. அரசு சாராத தமிழ்க் கட்சிகளின் குரல் இந்த இடத்தில் பலமிழந்து இருப்பதையும் அவதானிக்ககூடியதாக இருக்கின்றது. மேலும், ஒருபடி முன்னேற்றகரமாக சிந்தித்தால் ‘தமிழருக்கான நீதி‘  விடயத்தில் சிங்களக் கட்சிகள் யாவும் பேதங்களை மறந்து ஒரே கருப்பொருளைக் கொண்டிருக்கையில், நீதிக்காக அங்கலாய்த்து நிற்கும் தமிழ் இனத்திற்காக குரல் கொடுப்பதற்கு ஏன் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் பேதங்களை மறந்து ஒருமைப்பட்டு வரமுடியாது என்ற கேள்வி அனைத்து தமிழ் உள்ளங்களிலும் விசாலித்து நிற்கிறது.

பாதிப்பு

இலங்கையில் ஐ.நா. முன்றலில் நடைபெறும் போராட்டமானது, இறுதியில் அதனை இயங்கவிடாது ஸ்தம்பிதமடையும் நிலை ஏற்பட்டால் முழுமையாக பாதிக்கப்படப்போவது இலங்கையின் வடகிழக்கு வாழ் தமிழ்மக்களே. இருப்பினும் போராட்டம் நடைபெறும் இடங்களில் எக்காரணம் கொண்டும் ஐ.நா. இயங்காமல் இருக்காது என்ற விதிமுறைக்கமைய தமிழ்மக்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம் போல் தெரிகிறது.

ஐ.நா. வின் அனுசரணையுடன் இயங்கும் முக்கிய அமைப்புகளான,

* உலக உணவுத் திட்டம்

* உலக சுகாதார நிறுவனம்

* சிறுவர் பாதுகாப்பு நிதியம்

இவை இயங்காமல் இருக்குமாயின் இன்றைய போர் அனர்த்த சூழலில் தமிழ் மக்களுக்கு கைகொடுக்க முடியாத அரசின் வெற்றிடத்தை உதவி நிறுவனங்கள் செய்யமுடியாமல் போகும் நிலை ஏற்படும். இவற்றால் பாதிப்படைவது தமிழ்மக்களே. சிங்கள அரசு இதுபற்றி எள்ளளவும் கவலையடைய போவதில்லை என்பதை வரலாறு சொல்லிவிட்டது.

தமிழ் மக்களுக்கு எதிரான அரசின் ஒருவித மறைமுக பழிவாங்கலாக இதனை எடுத்துக் கொள்ளலாம். இன்னுமொரு விதமாக இலங்கை அரசு மீண்டும் ‘தமிழினம் – சிங்கள இனம்’ என்ற இரண்டு வேறுபட்ட இனங்கள் இலங்கையில் உண்டென்பதை நிறுவி இருக்கிறது.

சர்வதேசமும் நிபுணர் குழுவும்

இவ்வாண்டு 31 ம் திகதி பெல்ஜியத்தில் ஐ.நா. தூதுவர் அலெக்ஸ் வன்மேனுவன் தலைமையில் நடைபெற்ற ஐ.நா. சபைக்கூட்டத்தில் ஜூன் 19 ம் திகதிய அமர்வின் போது இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்களை பலர் முன்வைத்தனர். அதிலே நவநீதம்பிள்ளையின் உரை பலரைக் கவர்ந்தது. உள்நாட்டு விசாரணைகள் பயன் தராது எனவும், சர்வதேச விசாரணைக் குழு தேவை எனவும் உறுதியாக கூறியிருந்தார். இதற்கு சார்பாக கனடாப் பிரதிநிதி அலிசன் லேகியாளரும் அவரின் கருத்துக்கு ஒத்துப் போயிருந்தார். இதன்போது இலங்கையின் சார்பில் சட்டமா அதிபர் மொகான் பீரிஸ், தூதுவர் திருமதி கேநிஸ்கா செனிவிரத்ன ஆகியோர் பிரசன்னமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முன்மொழிவுகள் இலங்கைக்கு பெரும் சரிவை சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தியிருந்தது.

இலங்கைக்கு சார்பான நாடுகள் என்ற வரிசையில் முக்கியமாக ரஷ்யாவையும் சீனாவையும் எடுத்துக் கொள்ளலாம். அமெரிக்கா, நோர்வே போன்ற நாடுகள் நீதியின் பக்கம், அதாவது ‘நிபுணர்குழு‘  அமைக்கப்படல் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதையும் மறந்துவிடல் ஆகாது. இதில் சுட்டி உரைக்கப்படல் வேண்டியது யாதெனில் ‘இலங்கைத் தமிழ்மக்களின் போராட்டமானது பயங்கரவாதம் அல்ல. அது விடுதலைக்கானது’ என்பதை சர்வதேசம் மெது மெதுவாக ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கின்றதென்பதே ஆகும்.

நல்லிணக்க ஆணைக்குழு

நல்லிணக்க ஆணைக்குழுவானது இலங்கை ஜனாதிபதியால் தயாரிக்கப்பட்டதொன்றாகும். இதனூடாக உண்மைத் தன்மையும், நம்பகத் தன்மையும், வெளிப்படைத் தன்மையும் வெளிப்படும் என்பதில் பெரிய அளவில் சர்வதேசம் அடங்கலாக சந்தேகம் நிலவுகிறது. இந்த ஆணைக்குழு முழுக்க முழுக்க இலங்கையர்களை மட்டும் உள்ளடக்கியிருந்ததோடு வெளிநாட்டவர் எவரும் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பது சந்தேகத்திற்கு மேலும் வலுவூட்டியிருந்தது. இதனால் நிபுணர் குழு இலங்கையின் நிலைப்பாட்டில் தலையிட வேண்டும் என சர்வதேசம் உறுதியாக இருக்க வேண்டியதாயிற்று.

நல்லிணக்க ஆணைக்குழுவின் குறிக்கோள்களில் பிரதானமானது யுத்தத்தின் மூல காரணத்தை அறிதலும், மீண்டும் ஏற்படாவண்ணம் பொறிமுறை ஒன்றை அமைத்தலுமாகும். எனவே தமிழ்மக்களுக்கு எதுவித நிரந்தர தீர்வும் இக்குழுவினால் சொல்லப்பட முடியாது என அனைத்து புத்தி ஜீவிகளாலும் உணர்ந்துகொள்ள முடிந்தது.

நிபுணர் குழு பல நாடுகளையும் சேர்ந்த புத்திஜீவிகளையும் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால் பாரபட்சமற்ற தன்மையை வெளிப்படுத்தலாம். மேலும், இதனால் நல்லிணக்க ஆணைக்குழுவும் நிபுணர் குழுவும் ஒருமித்து பணியாற்றுவதில் மிகுந்த பலன் கிடைக்கும் என ஜப்பான் நம்பியுள்ளது.

நிபுணர்குழு உறுப்பினர்கள்

* சட்டத்தரணி ஸ்டீபன் ரட்னர் – அமெரிக்கா

* முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருஸ்மன் – இந்தோனேசியா

* ஜஸ்மன் சூகா – தென் ஆபிரிக்கா

இவர்கள் இலங்கையின் தமிழர் சார்ந்த விடுதலைப் போராட்டத்தை ‘பயங்கரவாதம்’  என முன்னர் கூறியவர்கள் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

கடமை

நிபுணர் குழுவுக்கு எதிராக சிங்களப் பேரினவாதம் நடாத்தும் எதிர்ப்புகளுக்கு அனைத்து தமிழர்களும் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எம்முன் உதயமாகிறது. வெறுமனே பார்வையாளர்களாக இருந்தால் பயனேதும் இல்லை. இலங்கையில் நிபுணர் குழு கலைக்கப்படவேண்டும் என்பதற்காக சிங்களம் மேற்கொள்ளும் எதிர்ப்பு சக்திகளை முறியடிக்க புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்மக்களும் நிபுணர் குழு கலைக்கப்படக்கூடாது என்பதற்காக ஐ.நா. விற்கு சாதகமாக சாத்வீக போராட்டங்களை முன்னெடுத்தல் வேண்டும்.

தமிழரின் வாழ்வியல் உரிமைகளை மறுப்பதற்கு ‘சிங்களம்’  பேதங்கள் மறந்து இணைகின்றன. பெறவேண்டியவர்கள் நிலையில் இன்னமும் வெளிச்சமில்லை. பேதங்கள் மறந்து (K.P, கஸ்ரோ, நெடியவன், உருத்திரகுமாரன், தமிழர் பேரவைகள், நாடுகடந்த அரசு, பிள்ளையான், கருணா, டக்ளஸ், சிவாஜிலிங்கம், PLOTE, TELO, EPRLF, EPDP, TNA போன்ற மேலும் பல)  ஒரு குடையின் கீழ் வருதல் காலத்தின் தேவை.

கடந்த காலங்களில் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுத்த சாத்வீக போராட்டங்களை மீளவும் நடைமுறைக்கு கொண்டுவருதல் வேண்டும். இக்காலகட்டம் தமிழ் மக்களுக்கான விடிவுகாலத்தின் ஆரம்பம். இதனைப் பாழாக்கினால் வரலாற்றுத் தவறின் அத்தியாயங்கள் ஆகிவிடுவோம். ஐ.நாவை தமிழ் மக்களுக்கு சாதகமாக்கி கொள்ள தொடர் ஒழுக்கநெறி தவறா சாத்வீக போராட்டங்களை தமிழ்மக்கள் மத்தியில் ஏற்படுத்தல் வேண்டும். ஈழத்தமிழர் நிலைபற்றி ஆதாரங்களுடனான துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்படல் வேண்டும். தாம் தாம் வாழும் நாடுகளில் உள்ள அரசியல் பிரமுகர்களுக்கு ஈழமக்களின் அவலங்களை ஆதாரபூர்வமாக அறிவூட்டப்படல் வேண்டும். அத்தோடு புலம்பெயர் நாடுகளில் உள்ள சாதகமான அரசியல் கட்சிகளுக்குள் புகுந்து அங்கத்துவம் பெறல் வேண்டும். இதற்கான வேலைத் திட்டத்தையும் இதற்கான உந்துசக்தியையும் புலம்பெயர் நாடுகளில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் முன்னெடுத்தல் வேண்டும்.

‘பயங்கரவாதம் – விடுதலை வேட்கை’  இரண்டுக்கும் பாரிய வேறுபாடுண்டென உலகறியச் செய்தல் வேண்டும். இதுவே ஈழத் தமிழ்மக்களின் விடிவிற்கான ஆணிவேர்.

‘நீதிக்கு இது ஒரு போராட்டம்

நிச்சயம் உலகம் பாராட்டும்’

நன்றி தமிழ்வின்