யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், விடுதலைப்புலிகள் இயங்கு நிலையில் இருந்த வரைக்கும் எந்தவொரு இனத்துவேச நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத இலங்கை இனவெறி அரசு தற்பொழுது மிக வெளிப்படையாகவே தனது இனத்துவேச நடவடிக்கைகளை செய்ய ஆரம்பித்துள்ளது.  

யாழ்ப்பாணம் நீண்ட காலமாகவே இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்திருந்தாலும் விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களோ, திலீபனின் தூபியோ இடிக்கப்படவில்லை. மாங்குளத்தில் சிங்களக் குடியேற்றங்களும் மேற்கொள்ளப் படவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்னர் தற்செயலாக இலங்கைக்கு விடுமுறையில் சென்று வந்தவர் ஒருவர் தனது ஒளிப்பட கருவியில் பிடித்துக் கொண்டு வந்த சில ஒளிப்படங்களை நான் பார்க்க நேர்ந்தது. அவர் எடுத்து வந்திருந்த ஒளிப்படங்களில் நைனாதீவு நாகபூஷணியம்மன் ஆலயத்தில் பிடிக்கப்பட்ட ஒளிப்படத்தில் காணப்பட்ட அறிவிப்புப் பலகைகள் என்னை ஒருகணம் அதிர வைத்தது. அந்த அறிவிப்புப் பலகைகள் எல்லாமே சிங்களத்தில் மட்டுமே எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன்.

அதாவது சிங்கள இனவெறி அரசு தற்பொழுது மிகவும் வெளிப்படையாகவே இலங்கை சிங்கரவர்களுக்குரிய நாடு என்று சொல்லாமல் சொல்வதாகப் படுகிறது. 1956 இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவந்தார்கள் ஆனால் இன்று அதை வெளிப்படையாகவே நடைமுறைப் படுத்துகிறார்கள். கொழும்பில், கண்டியில் ஏன் கதிர்காமத்தில் கூட ஆலயங்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் அறிவித்தல் பலகைகள் எழுதப் பட்டிருக்குமிடத்தில், யாழ்ப்பாணத்தில் அதுவும் தமிழ் மண்ணில் இருக்கும் ஒரு இந்துக்கோவிலில் சிங்களத்தில் மட்டுமே அந்த அறிவித்தல் பலகையில் எழுதப்பட்டிருக்கின்றது. அதாவது இலங்கையின் வெவேறு பகுதிகளில் வாழும் தமிழ்மக்கள், வெளிநாடுகளில் இருந்து விடுமுறையில் செல்லும் தமிழ்மக்கள், மற்றும் தமிழரோ, சிங்களவரோ அல்லாத வெளிநாட்டுப் பிரஜைகள் அந்த ஆலையத்திற்கு வழிபடவோ பார்வையிடவோ சென்றால், அந்த பலகையில் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்று தெரிந்து கொள்வதற்கு ஒரு சிங்களவரையோ அல்லது சிங்களம் தெரிந்த ஒருவரையோ தான் உதவிக்கு நாடவேண்டும்

எனவே இந்த இனவெறி அரசு என்னத்தை சொல்லவருகின்றது என்பதை தமிழ்மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இதில் மிகவும் மனவருத்தம் என்னவென்றால், தமிழ் தேசியவாத அரசியல் கட்சிகளோ, சிங்கள இனவாத அரசுக்கு துணைபோகின்ற தமிழ் கட்சிகளோ, அந்த பிரதேசத்தில் வாழுகின்ற தமிழ்மக்களோ கண்டுகொள்ளாததும், கண்டிக்காததும் தான்.

மலையூர் பண்ணாகத்தான்