இலங்கைத்தீவில் முப்பது நூற்றாண்டுகளுக்கு மேலாக பூர்வீக இனமாக தமிழர் வாழ்ந்து வந்ததற்கான ஆதாரம் உண்டு. இதனை பிரித்தறியக் கூடிய எல்லைகளை இலங்கை கொண்டுள்ளது

தமிழர் நாட்டினம் சிங்கள நாட்டினம் என்ற இரு பிரிவுகளை இலங்கை உள்ளடக்கியிருந்தது. இவ் வேறுபாட்டினை தெளிவுற புரிந்து கொண்டால்த்தான் எம்முடைய சொத்து இதுஎன்று கூசாமல் அச்சமின்றி கூறலாம். மரபு வழி நிலப்பரப்பை பறிகொடுத்து விட்டால் உலகில் தமிழருக்கான தனி நிலம் எங்குமே இல்லை என்றாகிவிடும். குறிப்பாக இந்த விடயத்தில் உலகத்(ஈழத்தமிழர் அல்லாத பிறநாட்டு) தமிழர்கள் அடங்கலாக ஆதாரங்களுடன் இருக்கும் ஈழத்தமிழருக்கு உரிமையான ஒரு தனி நாடமைக்க தம்மால் இயன்ற அளவு சேவை புரிய முன்வர வேண்டும். தமிழருக்கான தனியாட்சி இலங்கையில் அமைப்பதில் தான் அனைத்துலக தமிழர்களின் தனித்துவ அடையாளங்களும், கெளரவங்களும் காப்பாற்றப்படும் என்ற உண்மையை புரிந்துகொள்ளல் அவசியம்

வந்தேறு குடிகள் 

வரலாற்றுக் காலங்களுக்கு முன்னதாக ஒரு வாழ்வியல் கட்டமைப்பை அமைத்து குடிகளைப் பெருக்கி நெருக்கமாகவும் நிரந்தரமாகவும் வாழ்ந்து வருபவர்களை பழம்குடியினர்என அழைக்கப்படுவர். வேறு இடங்களில் இருந்து புலம்பெயர்ந்து பழம் குடியினருடன் இணைந்தோ அல்லது அவர்களின் வாழ்வியல் கலாச்சாரங்களுடன் இணைந்தோ வாழ்ந்து வருபவர்கள் எனில் அவர்களை வந்தேறுகுடிகள்என அழைக்கப்படுவர். இவ்விடத்தில் தான் இலங்கையில் யார் பழம்குடியினர்? யார் வந்தேறுகுடியினர்? என பகுத்தாய வேண்டிய நிலையில் வரலாற்றாய்வாளர்கள் உள்ளனர்

ஏறத்தாள 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் துணைக்கண்டத்தின் பழம்குடியினர் திராவிடரே என்பது வரலாற்றாய்வாளர்கள் கருத்தாக உள்ளது. வடக்கே இமயமலை தொடங்கலாக தெற்கே இலங்கை தீவு வரை இந்திய துணைக்கண்டத்தின் நிலப்பரப்பு விரிந்து கிடந்திருக்கிறது. இதுவே திராவிடரின் உரிமையான நிலப்பரப்பாகவும் இருந்துள்ளது. இதனால் இலங்கையின் பழம்குடியினர் திராவிடரே என்பது நிறுவப்பட்டு விடுகிறது

இலிங்க வழிபாடு 

இலங்கைத் தீவின் பழம்குடியினர்(திராவிடர்) வாழ்ந்திருந்த காலத்தில் ஏறத்தாள 2500 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயனும் அவனது நண்பர்களும் மகதம், கலிங்கம் இணைந்த இந்திய வட புலத்திலிருந்து இலங்கைக்கு வந்தார்கள் என மகாவம்சம்கூறுகிறது. அவர்களின் வருகையின்போது இலங்கையிலே இயக்கர், நாகர் இனம் வாழ்ந்திருந்தார்கள். இயக்கர்குலப் பெண்ணாகிய குவேனியை விஜயன் இலங்கையிலே மணம் முடித்திருந்தான்(ஆதாரம் மகாவம்சம்). பின்னர் குவேனியை வஞ்சகமாக கொன்றுவிட்டு பாண்டியநாட்டு இளவரசியை வரவழைத்து(இளவரசி வந்திறங்கிய இடம் மாதோட்டை துறைமுகம்) மணம்புரிந்து கொண்டான். விஜயனின் வழித்தோன்றல்களில் இருந்துதான் சிங்கள இனம் ஆரம்பமானது என சிங்கள மக்களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் ஆகும். ஆகவே வந்தேறுகுடிகள் சிங்களமே. ஏனெனில் இயக்கர் நாகர் என்ற திராவிட இனம் ஏற்கனவே இலங்கையில் வாழ்ந்திருந்தனர் என்பதால் தமிழரே பழம்குடியினர் என்பது நிருபணமாகிறது

விஜயன் இலங்கைக்கு வந்த காலங்களில் இலங்கையில் தமிழர் வாழ்ந்திருந்தனர் என்பதற்கு மேலும் அடையாளமாக தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் தமிழ்ச் சங்கம்அமைக்கப்பட்டு தமிழ்கூறும் நல்லுறவுகள் தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர்.ஈழத்து பூதம் தேவனார்என்ற சங்ககாலப் புலவர் இலங்கையைச் சார்ந்தவர். அவரால் அகத்துறைபாடல்கள் பல பாடப்பட்டிருந்தன. அக நானூற்றில் மூன்றும்(88, 231, 307) குறுந்தொகையில் மூன்றும்(189, 343, 360) நற்றிணையில் ஒன்றும்(366) என ஏழு பாடல்கள் ஈழத்தமிழர்களின் அக வாழ்வு பற்றியும் நாகரிக விழுமியங்கள் பற்றியும் குறிப்பிடுவதை காணலாம்(உசாத்துணை நூல் தமிழீழம் நாட்டு எல்லைகள் சச்சிதானந்தம்). 

ஏறத்தாள 800 ஆண்டுகளுக்கு முன்னர் தான்(கி.பி. 1282) ஆரிய மன்னர்களின் ஆட்சி நிலைபெறத் தொடங்கியது. இலங்கையில் பெளத்த வழிபாட்டுத் தலங்களை ஆதாரமாக கொண்டு பூர்வீக உரிமை கொண்டாட சிங்களத்திற்கு உரிமை இருப்பின், இலங்கையில் தமிழரின் இலிங்க(இந்து) வழிபாட்டுத் தலங்களை ஆதாரமாகக் கொண்டு தமிழரும் உரிமை கொண்டாடுவதற்கு உரிமை உண்டு. எனவே சிங்கள நாட்டினம் வாழ்ந்த இடங்களில் தமிழருக்கு இந்து வழிபாட்டுத்தலங்களை ஈந்து வழங்கக் கூடிய மனோநிலையோ பரோபகார எண்ணமோ என்றுமே சிங்கள நாட்டினருக்கு என்றுமே ஏற்படாது. எனவே தமிழரின் வழிபாட்டுத்தலம் இருந்த இடமெங்கும் தமிழரின் வாழ்விடங்களாக இருந்ததென்பது இயல்பாகவே நிறுவப்படக்கூடியது. இலங்கையின் கரையோரங்கள் அடங்கலாக தமிழர்கள் செறிந்து வாழ்ந்திருந்தார்கள் என்பதற்கு தமிழரின் வழிபாட்டுத்தலங்கள் ஆதாரம் தந்து நிற்கின்றது

* முன்னேஸ்வரம் தென்மேற்குக்கரை(சிலாபம்)

* திருக்கேதீஸ்வரம் மேற்குக்கரை(மன்னார்)

* நகுலேஸ்வரம் வடக்குக்கரை(கீரிமலை)

* திருக்கோணேஸ்வரம் கிழக்குக்கரை(திருக்கோணமலை)

* மாமாங்கேஸ்வரம் கிழக்குக்கரை(மட்டக்களப்பு) 

சிங்கள நாட்டினம் வாழும் பகுதிகளில் இலிங்க வழிபாடுகள் அனுஷ்டிக்கப்பட்டமையானதை, தமிழினம் கூர்ந்து கவனிக்க வேண்டியதாகும். சிங்கள நாட்டினம் ஆரம்பமாகுமுன்னரே தமிழரின் ஆலயங்கள் அமைந்திருந்தமையால் மீண்டுமொருமுறை தமிழர்கள் தான் பழம்குடியினர்என தடையின்றி நிறுவ முடிகிறது. 

* சந்திர மெளலீஸ்வரம் தெற்குக்கரை(தேவேந்திரமுனை)

* கதிர்காமம் இலங்கையின் தெற்குப்பகுதி

* சிவனொளிபாத மலை சிவனாலயம் இலங்கையின் நடுப்பகுதி

* இரத்மலானை சிவனாலயம் இலங்கையின் மேற்குப்பகுதி(கொழும்பு)

(இரத்மலானை சிவாலயம் தற்பொழுது கோணகோவிலஎன அழைக்கப்படும் பெளத்த விகாரையாகும். கோண என்றால் எருது. அதாவது நந்தி.) 

அனுராதபுரத்தில் மாபெரும் சிவனாலயம் இருந்ததாகவும் அதனை நிர்மூலமாக்கி அபெகிரி விகாரைஎன்னும் பெளத்த ஆலயம் அதன்மேல் எழுப்பியதாக வரலாற்று ஆசிரியர்களான மளலசேகரா, அரிச்சந்திரா ஆகியோர் தமது வரலாற்று ஆய்வுநூல்களில் இதனை வெளிப்படையாக கூறியுள்ளார்கள். மேலும், ஒரு கர்ண பரம்பரைக் கதையாக கொழும்பு கோட்டையை இராஜதானியாக கொண்டு ஆட்சிசெய்த நெடுமால் என்ற தமிழ் மன்னன் தனது வாசஸ்தலத்தை தெஹிவளைக்கு அண்மையில் அமைத்திருந்ததாகவும் அந்த இடம் தற்பொழுது நெதிமால்என இன்றுவரை அழைக்கப்பட்டு வருவதையும் அறியலாம்

முழு இலங்கையும் ஆரம்ப காலத்தில் தமிழரின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்ததை சிங்களத்திற்கு நன்கு தெரிந்திருந்தாலும் கூட, அந்த உண்மைகள் வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இந்த உண்மைகளை இலங்கை வாழ் தமிழ்மக்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவருவது முடியாத காரியமாகும். இவற்றை வெளிக்கொண்டுவர முனைந்த பல எழுத்தாளர்கள் இரத்தமுமின்றி, சத்தமுமின்றி காணாமல் போய்விட்டது கடந்த வரலாறாகும். இலங்கை அரசின் இந்த திட்டமிட்ட சட்டத்திற்குட்படாத பயங்கரவாத நிகழ்ச்சித் திட்டத்திற்கு இரையாகின்றார்கள். எஞ்சியவர்கள் மெளனித்திருக்கின்றார்கள். இதனோடு தொடர்புடைய சாட்சியாக, ஆசியாக் கண்டத்தின் மாபெரும் நூல்நிலையமான யாழ்ப்பாண நூல்நிலையம் சிங்களத்தால் முற்று முழுதாக எரிக்கப்பட்டதன் பின்னணியும் இதுவாகும்

இவற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்கான ஒரேஒரு வழி, புலம்பெயர் மக்களின் கைகளிலேயே உள்ளது

* சிதறலாக எழுதப்பட்ட திரிபற்ற வரலாற்று நூல்களை இனம்கண்டு ஒன்றுசேர்த்தல் வேண்டும்.

* சிறுகச் சிறுக எழுதிய ஊடக பிரசுரங்களை ஒன்று சேர்த்தல் வேண்டும்.

* உலகத்தில் பரந்துவாழும் தமிழ்ச் சமூகம் ஒன்றுசேர்ந்து தத்தமது தேசத்தின் பிரதான மொழிகளில் பிசகின்றி, பொருளடக்கம் மாறாது மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும்.

* புலம்பெயர்வாழ் தமிழர்கள் வாழும் ஒவ்வொரு இடத்திலும் அவ்விடத்தின் முக்கியஸ்தர்களை அழைத்து பெரும் வெளியீட்டு விழாவினை ஒழுங்குசெய்தல் வேண்டும்.

* புத்தகத்தின் பிரதிகள் அனைத்தும் ஒவ்வொரு தமிழ்மக்களின் கைகளிலும் ஆவணமாக இருக்க வேண்டும்.

* ஒவ்வொரு தமிழரும் தமிழர் தம் வரலாற்றில் முழுமையாக தெளிவுபெற்று, வாழும் நாடுகளிலுள்ள அயலவருக்கும், நண்பர்களுக்கும் புரிய வைக்க வேண்டும். 

இந்நிகழ்ச்சிநிரல் செவ்வனே அமுலாக்கம் பெறுமாயின் சிங்களம் ஆடிப்போகும். அனைத்தும் எமது பேதங்கள் மறந்த கூட்டுச்சேர்விலும், கூட்டுமுயற்சியிலும் தங்கி உள்ளது என்பது கட்டாய தேவையாகும்

உண்மையும் ஒருநாள் உறங்கிவிடும்! அது

ஒருநாள் வந்து பதிலளிக்கும் 

trincokadatcham@yahoo.com

நன்றி தமிழ்வின்