பசில் ராஜபக்ச என்ற பெயரும், நபரும் இலங்கை அரசியல் வானில் இன்று துருவ நட்சத்திரமாக பிரகாசிக்க பிரதான காரணம் மகிந்த ராஜபக்ச என்ற இலங்கை ஜனாதிபதியின் சகோதரனாகும். இவ்விருவரும் ஒரு காலத்தில் சிங்கள மக்களால் அரசியல் களத்திலிருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் என்பதும் குடும்ப அரசாட்சிக்கு எதிராக போக்கொடி தூக்கியவர்கள் என்பதும் மறைந்து அல்லது திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கும் உண்மைகளாகும்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் கன்னி அரசியல் பிரவேசத்திற்கு தளம் அமைத்துக் கொடுத்த தேர்தல் தொகுதி முல்கிரிகல ஆகும். 1977 ம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பசில் ராஜபக்ச தோல்வி அடைந்தார். அதே ஆண்டில் அவரின் சகோதரனான தற்போதைய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

தொடரும் பசிலின் அரசியல் 

இலங்கையில் பெண் பிரதமராகவிருந்த சிமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் ஆட்சிக்காலத்தில்(1970 ம் ஆண்டுக்கு பின்னர்) ‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகுடும்பக் கட்சியாக மாற்றப்பட்டு வருவதாகவும், தன்னிட்சையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகவும் கோசக்குரல் எழுப்பி 1980 ம் ஆண்டு காலப்பகுதியில் 13 முக்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பிரிந்து சென்று சுயேட்சைக் குழுவாக இயங்கியிருன்தனர். இந்த சுயேட்சைக்குழு பிரிந்து செல்வதற்கு சூத்திரதாரியாக இருந்தவர் பசில் ராஜபக்ச அவர்கள். அவரே அச்சுயேட்சைக் குழுவின் செயலாளராக செயற்பட்டவர்.(கால வரையில் அச்சுயேட்சைக்குழு பல எதிர் வழக்குகளில் தோல்விகண்டு காணாமல் போய்விட்டது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது செல்வாக்குத் தளத்திலிருந்து ஆட்டம் கண்ட காலம் அக்காலங்களாகும். பிரதமராகவிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்காவின் மகன் அனுரா பண்டாரநாயக்க அடுத்த இலங்கையின் அரசியல் தலைமைக்கு தெரிவாக இருந்த வேளை சூழ்ச்சியால் தாய் மகன் முரண்பாடு முற்றி அரசியல் எதிர்காலத்தை சிந்திக்காது அனுரா பண்டார நாயக்கா ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிக்கொண்டார். இந்த நிலையில் பண்டாரநாயக்கா குடும்பத்துக்குள் ஏற்பட்ட கடுப்புபசில்மீது ஏராளமாக இருந்தது. 1977 காலப்பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சரிவுகண்டது

ஐக்கியதேசியக் கட்சியும் பசிலும் 

1982 ம் ஆண்டு இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அமரர் J.R. ஜெயவர்த்தனா போட்டியிட்டார்(ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தது) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பின்னடைவும் அதன் உட்கட்சிக் குழப்பமும், J.R. இன் பக்கமே வெற்றி அதிகரித்திருந்தது. இதற்கு மறைமுகமாக பசிலின் உதவியும் இருந்தது எனலாம்

இதனை சாதகமாக பாவிக்க எண்ணிய பசில் ராஜபக்ச அதிகார பூர்வமாக J.R. ஐ ஆதரிப்பதற்காக ருகுணு பெரமுனஎன்ற அரசியல் கட்சியை ஸ்தாபித்து ஐக்கியதேசியக் கட்சியில் இணைந்துகொண்டு ஜனாதிபதித் தேர்தலில் J.R. ஜெயவர்த்தனாவுக்கு ஆதரவளித்திருந்தார்

பத்திரிக்கை மாநாடும் பசிலும் 

1982 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பத்திரிகையாளரால் கூட்டப்பட்ட மாநாட்டில் பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகியதற்கான காரணங்களை தெளிவுபடுத்தியிருந்தார். அதில் முக்கியமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குடும்ப ஆட்சி நடாத்துகிறது என்ற காரணத்தால் தான் விலகியதாக 1982 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 13 ம் திகதி வெளியான பிரபல சிங்களப் பத்திரிகையான தவசஇச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருந்தது. 

இடைத்தேர்தல் 

1983 ம் ஆண்டு இலங்கையில் ஒரு இடைத்தேர்தல் நடைபெற்றிருந்தது. அதில் பசில் ராஜபக்சவின் மருமகளான நிருபமா ராஜபக்ச(கணவர் ஒரு தமிழர்) போட்டியிட்டிருந்தார். பசில் ராஜபக்ச, மருமகளோடு ஏற்பட்ட பிணக்குகள் காரணமாக நிருபமாவை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட ஆனந்த குலரட்னவுக்கு ஆதரவளித்து அவரை வெல்லப் பண்ணினார். (பின்னர் தேர்தல் வழக்கில் நிருபமா வெற்றி அடைந்தது வேறு விடயம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மீண்டும் பசில் 

1988, 1989 ம் ஆண்டுகள் வரை பசில் ராஜபக்ச ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராகவே இருந்து ஆதரவளித்து வந்தார். 1989 ம் ஆண்டளவில் இலங்கையை விட்டு வெளியேறிய பசில் வெளிநாடொன்றில் பதினேழு ஆண்டுகள் வரை அஞ்ஞாத வாசம் செய்திருந்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்களின் அழைப்பின் பேரில் மீண்டும் இலங்கைக்கு வந்தார். அக்காலங்களில் தனது அரசியல் முகத்தை வெளிக்காட்டாது சந்திரிகாவுக்கு ஆதரவளித்து வந்த வேளையில், தொடரும் வெற்றிடத்தை நோக்காக கருதி அவரது சகோதரன் மகிந்த ராஜபக்ச அரசியலில் தலையெடுக்க வேண்டிய முன்னேற்பாடுகளில் ஈடுபட்டதுடன் தன்னையும் அதற்குள் நாசூக்காக ஈடுபடுத்திக் அடையாளம் காட்டிக் கொண்டார்

பாராளுமன்ற பிரவேசம் 

கிழக்கு மாகாண தேசியப்பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினரின்(அன்வர்) பின் அந்த இடத்திற்கு(2008 ம் ஆண்டளவில்) தேசியப்பட்டியலூடாக முதல்முதலாக பாராளுமன்றம் நுழைந்தார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆரம்ப ஆட்சிக்காலத்தில் அதிகூடிய அமைச்சரவையைக் கொண்ட பாராளுமன்றமாக இலங்கைப் பாராளுமன்றம் விளங்கியது. ஆளும் கட்சியில் நிருபமா ராஜபக்ச உட்பட விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தார்கள். பசில் ராஜபக்ச அமைச்சர்ப் பதவி வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இலங்கையின் சகல அதிகாரங்களையும் பிரயோகிக்கும் ஜனாதிபதியின் பிறப்பாக்கி(Genarator) ஆக இருந்தார். இது பல உட்சண்டைகளை ஏற்படுத்தியிருந்த போதும் அதிகாரத் திரை மறைத்திருந்தது. 2010 ம் ஆண்டு தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று உரிமையுடன் பாராளுமன்றம் வந்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக உள்ளார்

பசிலின் முல்லைத் தீவு விஜயம் 

இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சிங்கள மயமாக்குவதில் அரசு வெற்றி கண்டுள்ளது என்பது ஒருபுறமிருந்தாலும், வடக்கு மாகாணத்தை சிங்கள மயமாக்குவதில் குறிப்பாக நில அமைப்பும், இனப்பரம்பாலும் இடையூறாக உள்ளது என்பதை அரசு நன்கு புரிந்துள்ளது. இதனைத் தகர்த்து உள்நுழைந்து குடியேற்றங்களை உருவாக்கும் தந்திரோபாயங்களை வெசாக் உட்பட பல கொண்டாட்டங்களூடாகவும் தென் வடக்கு உறவுகளூடாகவும் ஆரம்பித்தது. இதன் பிரதான நோக்கம் சிங்களக் குடியேற்றத்தின் மூலமாக தமிழர் தாயக மக்கள் செறிவை ஐதாக்கல் ஆகும். 

கடந்த காலங்களில் அரசு, கிழக்கில் தமிழ் முஸ்லீம் பிரச்சனைகளை உருவாக்கி பரீட்சை பார்த்துக் கொண்டது. அதில் கிடைத்த வெற்றியின் தந்திரோபாயத்தை முல்லைத் தீவிலும் பிரதியிட தொடங்கியுள்ளது. இதனை ஆரம்பித்து வைக்கும் படலத்தின் சூழலை பசில் ராஜபக்ச ஒரு அமைச்சராக முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தாரென கொள்ளலாம்

தமிழ்மக்களின் கட்டமைப்பை உடைப்பதற்கு தமிழ் பேசும் முஸ்லீம் மக்களையே பயன்படுத்துவது பொருத்தமானதும் நீண்டகால திட்டத்திற்கு அனுகூலமாக இருக்கும் என அரசு நினைப்பது தவறு இருக்காது. ஏனெனில் கிழக்கில் கண்ட வெற்றியே ஆகும். 

நிர்வாக சேவை உத்தியோக முறைமை(SLAS) 

முல்லைத்தீவு அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் அறிக்கை மூலம் கண்ணிவெடி அபாயத்தை நீங்கியபின் மக்கள் மீளக் குடியேறலாம் என்பது பிழையானதல்ல. அது அனைத்து இனத்திற்கும் பொருந்தும். இதனை திட்டமிட்டே முஸ்லீம் மக்களுக்கெதிராக திசைதிருப்பி நிர்வாக உத்தியோகத்தரான முல்லைத்தீவு தமிழ் அரசாங்க அதிபரை அகற்றி நிர்வாக அனுபவம் இல்லாத, இலங்கை நிர்வாக சேவை தகமை பெறாத இராணுவ அதிகாரியை அரசாங்க அதிபராக நியமிக்க முனைவது மிகவும் பாரதூரமான அதிகார துஸ்பிரயோகமாகும்

இலங்கை வரலாற்றில் முதல்முதலாக இராணுவ அதிகாரி ஒருவரை இலங்கை நிர்வாக சேவை தகமை இன்றி அரசாங்க அதிபராக உள்ளீர்க்கப்பட்டது திருக்கோணமலை மாவட்டத்திற்குத்தான். பெரும்பான்மையாக தமிழ் பேசும் மக்களை உள்ளடக்கிய பகுதிக்கு தமிழரை அரச அதிபராக நியமிப்பதால் ஏற்படப்போகும் நடைமுறைச் சிக்கலை விட தமிழ்க் குடிகளை ஐதாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். தமிழர்களுக்கான சம உரிமை வழங்கப்படுவதானது எந்தவொரு சிங்களப் பெரும்பான்மைப் பகுதியிலும் தமிழ் அல்லது இராணுவ அதிகாரி அரச அதிபராக நியமிக்கப்பட்டிருந்தால் சிங்களத்தின் சமத்துவம் பேணலை ஏற்றுக்கொள்ளலாம். இதுவானது சிங்களத்தின் மேலாதிக்கத்தன்மையை நிலைநிறுத்த ஏற்படுத்தப்பட்டவை ஆகும். ‘அரசாங்க அதிபர்என்ற உயர்பதவி நிலைக்கூடாக தமிழ்ப் பகுதிகளை சிங்களமயப்படுத்துவதே முக்கிய காரணமாகும். 

இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளை தான்(அரச அதிபர் போன்றவர்கள்) இலங்கை நிர்வாக சேவைக்கு இணைக்கப்படல் வேண்டும்(SLAS) என்ற இலங்கையின் நடைமுறை மீறப்பட்டதை எதிர்த்து அதுசார்ந்த அதிகாரிகள் இனபேதமின்றி அழுத்தமான தாக்கத்தை அரசுக்கு கொடுக்க வேண்டும். அதாவது சிங்களவர்களாக இருந்தாலும் தமிழ்ப் பகுதிகளில் நியமிக்கப்படுபவர்கள் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளாக இருக்கவேண்டும் என்பதை(தற்போதைக்கு) தொழிற்சங்கங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வெற்றி காணப்படல் வேண்டும்

நில அமைப்பு 

திருக்கோணமலை மாவட்டத்தை வடக்கு மாகாண எல்லையோடு இணைக்கும்(மணலாறு வெலி ஓயா) பகுதி முல்லைத் தீவாக இருப்பதால் சிங்களத்தின் சிந்தைக்கு ஒரு நெருடலைக் கொடுத்திருந்தது. வடகிழக்கு எல்லையை துண்டாடவேண்டிய தேவை இன்று அரசுக்கு ஏற்பட்டிருப்பதை அவதானிக்கலாம். தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுடன் விருத்தி செய்துவரும் நட்புறவானது 87 ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமுல்படுத்த வேண்டிய(வடகிழக்கு இணைப்பு) நிர்ப்பந்தம் இலங்கை அரசிற்கு பெரும் அச்சத்தை தரத் தொடங்கிவிட்டது. இதன் ஆரம்ப முன்னெச்சரிக்கையே இத்தனை கால அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்த தமிழ் அரச அதிபர் இமெல்டாவை முல்லைத்தீவு மாவட்ட முஸ்லீம் மக்களோடும் அவை சார்ந்த முஸ்லீம் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களோடும் விரோதப் படுத்தப் பட்டமையே ஆகும். மேலும் இந்த போக்கு நல்லுறவு பேணிவரும் இலங்கை முஸ்லீம் காங்கிரசோடும் முரண்பாடுகளை ஏற்படுத்த வழி அமையலாம். முஸ்லீம் சிங்களக் குடியேற்றமானது வடகிழக்கை இணைப்பதற்கான எதிர்ப்பு சக்தியாக மிளிரவைக்கும் தந்திரோபாயமாகும். இதற்கு அடித்தளத்திற்கு ஒரு சிங்கள அரச அதிபர் அதோடு இராணுவ அதிகாரியாக இருப்பது பொருத்தமாகும் என்பது புரிதலுக்கு கஷ்டமன்று

தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை 

1915 ம் ஆண்டு

முஸ்லீம் சகோதரர்கள் மீள் நினைவுக்குட்படுத்தப்பட வேண்டிய ஆண்டு

தொழுகையை முடித்துவிட்டு கம்பளைப் பள்ளிவாசலை மௌன ஊர்வலமாக முஸ்லீம் மக்கள் கடக்க முற்பட்ட வேளை வெறிகொண்ட சிங்களக் காடையர்கள் வன்முறையில் ஈடுபட்டிருந்தார்கள். அதிலிருந்து ஆரம்பித்த சிங்கள முஸ்லீம் கலவரம் முஸ்லீம் மக்களின் பொருளாதாரம் அடங்கலாக உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டிருந்தது. அக்கால கட்டங்களில் தமிழ்த் தலைவர்கள் முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட்ட அனர்த்தங்களுக்காக குரல் கொடுத்திருந்ததும் இதுபோன்ற பல சந்தர்ப்பங்களில் தற்போதைய முஸ்லீம் தலைவர்கள் தமிழ்மக்களின் அனர்த்தங்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருப்பதும் வளர்ந்து வரும் முஸ்லீம் தமிழ் உறவுகளுக்கு நீரூற்றுவதை நினைத்துப் பார்ப்பது பொருத்தமாகும். 

சிங்களத்தின் மேலாண்மையானது இதனை எள்ளளவும் பொறுத்திருக்காது. இரு இனங்களும் சேர்ந்து சிங்களத்தின் எண்ணங்களுக்கு சாவுமணி அடித்தால் விடிவை நோக்கிய பயணத்தை நிறைவு செய்து வைக்கும் நிலையை அண்மித்ததாக அமையும். சிறுபான்மை இனங்களைப் பிரிப்பதால் சிங்களம் தனது இருத்தல்களை மிக இலகுவாக தமிழ்பேசும் மக்களின் வாழ்விடங்களை நிலைப்படுத்திக் கொள்ளலாம் என்பது ஸ்திரமான கட்டமைப்பாகும். இதனால் தமிழ் பிரதேசங்கள் மட்டும் பறிபோவதில்லை. தமிழ் பிரதேசங்கள் பறிபோன கையேடு முஸ்லீம் பிரதேசங்களும் வழிவழியே கையறுந்து போவது என்பது வரலாற்றுத் தரவுகளாகும்

பகடைக் காய்கள் 

இலங்கை அரசின் பகடைக்காய் அரசியலுக்குள் மலையகத் தமிழ்மக்கள் உட்பட சிறுபான்மை மக்கள் பொறியில் அகப்படாது ஒவ்வொருவரும் உண்மையை விளங்கிக்கொண்டு அரசின் கபடத்தனத்தை தகர்க்கக் கூடியவாறு செயற்படுதல் காலத்தின் தேவையாகும். இந்த நிலையில் முஸ்லீம் தமிழ் உறவு விஸ்தரிக்கப்படுவதால் மாத்திரமே இலங்கையின் சிறுபான்மை மக்களின் நிலைமாற இடமுண்டு. வன்னி மாவட்ட முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களை தற்போது அரசு தனது கபடத் தனத்திற்கு சாதகமாக்கிக் கொண்டதுபோல் தென்படுகிறது. தயவுசெய்து அரசுக்கு துணைபோகாமல் அரசின் பிரித்தாளுகைக்கு ஆதரவு வழங்காமல் எதிர்கால சிறுபான்மையினரின் சுதந்திரத்தையும் வாழ்வியல் உரிமைகளையும் வென்றெடுக்க வேண்டிய கடமைக்காக சிறுபான்மை மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பதை சிறுபான்மை பாராளுமன்ற(குறிப்பாக வடகிழக்கு) உறுப்பினர்கள் உறுதியாக ஏற்றுக் கொள்ளல் வேண்டும்

இலங்கையின் வரலாற்றுக் காலமாக சம உரிமையோடு வாழ்ந்து வந்த கட்டமைப்பை மீண்டும் நிரந்தரமாக்கி எதிர்கால சந்ததியினரின் கைகளில் ஒப்படைக்க வேண்டிய தியாக நிலையை நினைவில் நிறுத்திக் கொள்ளல் வேண்டும்.

இதுவே எமது ஒற்றுமையின் பலமாக அமையும் என்பதில் ஐயமில்லை. 

trincokadatcham@yahoo.com

 நன்றி தமிழ்வின்