கலிங்க நாட்டு தமிழ் மன்னன் மாகான் 

கலிங்க நாட்டிலிருந்து வந்த மாகான் என்னும் அரசன் இலங்கையின் முக்கிய இடங்களை அரசாண்டான். 

பொலன்னறுவையை(சனநாத மங்கலம்) இராசதானியாகக் கொண்டு கி.பி. 1215 – 1255 வரை அரசாண்டான். அவனைத் தொடர்ந்து சாவக இளவரசனான சந்திரபானு 1255 – 1262 வரை இலங்கையை ஆட்சி செய்தான். இலங்கையில் சிங்களம் + தமிழ் என இரு ஆட்சிப் பிரிவுகள் இருந்திருந்தன என்பதை முன்னர் பார்த்தோம்.(மாகான் அரசனின் விபரங்களில் சரித்திர வல்லுனர்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், அவன் ஒரு தமிழ் மன்னன் என்பது மட்டும் தேவையான தரவாகும்) 

குறிப்பாக திருக்கோணமலை மாவட்டம் அடங்கலாக கிழக்கு மாகாண எல்லை வரைக்கும் அவனின் சிறப்பாட்சி நிலை பெற்றிருந்தது. திருக்கோணமலை கோணேசர் ஆலயம் அவனின் காலத்தில் புனரமைக்கப்பட்டதாக வரலாறு உண்டு. தனித்தனியாக ‘வன்னிமை’ ஆட்சியை அறிமுகப்படுத்தி தமிழரின் ஆட்சி உலகறிய வியக்கவைத்த பெருமைக்குரிய மன்னன் ஆவான். பிறிதொரு வரலாற்றுத் தரவில் திருக்கோணமலையை இராஜதானியாகக் கொண்டு சிறப்புற ஆட்சி செய்த இராவணேஸ்வரன்(திரேதம்) காலத்திற்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை பின்னர் குளக்கோட்டு மன்னன் புனருத்தாபனம் செய்து கூடவே வன்னிமைகளையும் தெரிவு செய்து தமிழ் பகுதிகளில் ‘குட்டித் தமிழ் இராட்சியம்’ அமைத்து நிர்வகித்தான். கோணேசப் பெருமான் ஆலயத்துக்கு ஒழுங்கான திருப்பணிகள் செய்வதற்காக வயல்வெளிகளையும், குளங்களையும் அதற்கான தொழிலாளர்களையும் ஏற்படுத்தியிருந்தான்.(குளக்கோட்டன் காலத்தில் கந்தளாய்க் குளம் நிர்மாணிக்கப்பட்டதாக உறுதிப் படுத்தப்பட்டாலும், தற்பொழுது பாட நூல்களிலும் சாதாரண நடைமுறையிலும் ‘அக்ரபோதி’ என்ற சிங்கள மன்னனால் கட்டப்பட்டதாக திரிபுபடுத்தி கூறப்படுகிறது. இப்பிரதேசம் முழுமையாக சிங்கள மயப்படுத்தப்பட்டுவிட்டது.) 

வரலாறுகளை தமக்கேற்றாற்போல் மாற்றினாலும் உண்மைகளை மறைக்க முடியாது. வரலாற்றுக்காலங்களுக்கு அப்பாலும்(இராவணேஸ்வரன் காலம்), வரலாற்றுக்காலம் அடங்கலாக(கோணேசர் திருப்பதிகம் பாடப்பட்ட 16 ம் நூற்றாண்டுக் காலம்) தமிழருக்கான ‘தனித் தமிழ் இராட்சிய ஆளுகை’ இலங்கையில் நடைபெற்று இருந்ததென்பது எவராலும் மறைக்கப்பட முடியாத உண்மையாகும். 

இராஜேந்திர சோழன்கால பெளத்தம் 

மேற்குறித்த பொருத்தமான தரவுகளிலிருந்து தமிழரின் ஆட்சி வலிமை பற்றி புரியக் கிடைத்திருக்கும்.  

தமிழர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் சிங்களவர்களின் மேலாண்மை தமிழர் பகுதிகளில் கோலோச்சப்பட்டிருந்தது என்ற புனைவு எப்படி சாதகமாகியது? 

இலங்கையின் தமிழராட்சிக் காலங்களின் மன்னன் ராஜ ராஜ சோழனின் மகன்(கி.பி.1070) இராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலம் தான் தமிழரை இந்த நிலைக்கு ஆளாக்கும் என்ற தீர்க்க தரிசனத்தை அப்போது உணர்ந்திருக்க நியாயமில்லை. இராஜேந்திர சோழன் பெளத்தம் தழுவிய மன்னன். அவனின் ஆட்சிக்காலங்களில் இந்துமத வழிபாட்டிற்கும் பெளத்த அனுஷ்டானங்களுக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லாமையால் இந்து ஆலய எல்லைக்குள் பெளத்த ஆலய நிர்மாணிப்பை இந்துக்கள் எதிர்க்கவில்லை. மேலும் சோழர்குல மன்னன் தமிழராக இருந்தமையால் இலங்கையில் வாழ்ந்த தமிழர்களிடையே இனரீதியான முரண்பாடுகள் தோன்றவுமில்லை. இராஜேந்திர சோழனின் எண்ணங்களில் மத முரண்பாடுகளை தோற்றுவித்து ஆட்சி செய்யவேண்டுமென்றோ அல்லது பெளத்தத்தை பலவந்தமாக பரப்ப வேண்டுமென்ற அவசியமுமில்லை. அதனால் பல இந்து ஆலயங்களில் பெளத்த வழிபாடுகளை இராஜேந்திர சோழன் சிறிது சிறிதாக ஏற்படுத்தி தானும் தான் சார்ந்த பெளத்தம் தழுவிய தமிழர்களையும் வணங்க வழிசெய்தான். இதில் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால் இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் பெளத்த ஆலயங்கள் நிர்மாணிக்கப்பட்டது தமிழர்களால் தான் என்பதை அறிந்துகொள்ளல் வேண்டும்.  

இலங்கையில் பெளத்த வணக்க ஸ்தலங்கள் இருந்த இடமெல்லாம் சிங்களவர்கள் வாழ்ந்தார்கள் என்ற எடுகோள் மேற்காட்டிய தரவுகளில் இருந்து உண்மையற்றது என வெளிக்காட்டுகிறது. மன்னன் இராஜராஜ சோழன் மகன்(கி.பி. 1070) இராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் தான் இலங்கையில் தமிழ் பெளத்தம் உருவாகியிருந்தது எனக் கொள்ளலாம். அதன் பின்னரான காலங்களில் சிங்களம், பெளத்தம் எமக்குரியது தான் என்ற மேலாதிக்க தன்மை ஓங்க ஆரம்பித்த வேளை தமிழர்கள் தங்களையும் சிங்கள மக்களின் ஒரு பிரிவு என இனங்காட்டப்பட்டு விடுவோமோ என்ற தனித்துவ இறைமையின் காரணமாக தமிழர் பெளத்த மதத்திலிருந்து விடுபட தொடங்கி விட்டார்கள். 

பொலன்னறுவ சிவாலயம் 

சனநாத மங்களம் என அழைக்கப்பட்ட தற்போதைய பொலநறுவ சிவாலயம் ஆனது முழுமையாக பெளத்த ஆலயமாக சிங்களவர்களின் வணக்க ஸ்தலமாக மாற்றப்பட்டு விட்டது. இப்போதும் கூட சிவாலயத்தின் எச்சங்களை காணலாம். இந்த ஆலயம் தமிழ்மன்னன் இராஜேந்திர சோழன், மாகான் போன்ற மன்னர்களால் சிவாலயமாக இருந்த காலங்களில் பிரதிஸ்டை செய்யப்பட்டதும், மாகான் காலத்தில் பொலன்னறுவை இராஜதானியாக இருந்தது என்பதும் வரலாற்றுத் தரவு. 

மேலும், இதுபற்றிய இன்னுமொரு ஊர்வழக்குச் செய்தியும் உள்ளது. 

பொலநறுவையில் உள்ள சிவாலய திருவிழாவின் 8 ம் மடை விழாவை தரிசித்த மன்னன் இராஜேந்திர சோழன் பரிவாரங்களுடன் சிற்றாறு, தேனீட்டை மடு வழியாக வெள்ளம் தாங்கி நிலையை அடைந்து நேர்வழியாக(தற்போதைய அல்லைக் கந்தளாய் வீதி) அகத்திய தாபனத்தை(கங்குவேலி) அடைந்து அங்குள்ள சிவ ஆலயத்தை தரிசித்து சென்றதாகவும், 8 ம் மடை விழா, சோழன் விழா என அழைக்கப்படுவதான கதை இன்றும் வழக்கிலுள்ளது. (அகத்திய ஸ்தாபனத்தின் எஞ்சிய எச்சங்களை சிங்களப்படை 2009 ம் ஆண்டு முற்றாக அழித்துள்ளனர்) 

பொலநறுவையின் மேற்குப்புறமாக திருக்கோணமலையின் எல்லைகளை இணைத்த பெரும் காட்டுப்பகுதியான வெட்டுக்காட்டு ஓடை, புலவனார் ஓடை, திருமங்களாய் போன்ற இடங்கள் தமிழ் மன்னர்களின் ஆட்சிப்பிரதேசமாக இருந்ததற்கான நாணயங்கள், தளவாடங்கள், மண் பானைகள், அரண்மனைக்கட்டடங்கள் போன்ற வரலாற்றுத் தடயங்களை இன்றும் காணலாம். 

திராவிடர்களின் வாழ்விடங்களை ஆதாரப்படுத்த, பிரேத அடக்கத்திற்காக உபயோகப்படுத்திய கறுப்பு – சிவப்பு தாழிகள் (பெரிய மண்பானைகள்), கல் மேசைகள், கல்லறைகள் போன்றவை அண்மைக் காலங்களில் கண்டெடுக்கப்பட்டு தாயகத்தில் ஆவணப்படுத்தப் பட்டிருந்ததை குறிப்பிட்டாக வேண்டும். 

திரியாய் பெளத்த விகாரை 

ராஜேந்திர சோழன் வருகைக் காலத்திற்கு முன்னதாகவே சிவாலயம் மிகப் பிரசித்தி பெற்றிருந்தது. வன்னி பெருநிலப்பரப்பின் எல்லைப்புறத்திலும் திருக்கோணமலை மாவட்ட எல்லைப் புறத்திலும் அமைந்திருந்த இச்சிவாலயத்திற்கு மிகப்பெரும் திரளான வன்னி மக்கள் திருக்கோணேஸ்வரத்தின் வாரிசாக வணங்கி வந்திருந்தார்கள். சோழனின் வருகைக்கு பின்னர் அவ்வாலயம் சோழ மன்னனால் பற்றோடு வணங்கப்பட்டதுடன் கூடவே பெளத்தம் மேல் கொண்ட பக்தியினால் சிறிய பெளத்த விகாரையும் அமைத்து வணங்கினான். 

தமிழ் பெளத்தனாகிய இராஜேந்திர சோழனால் உருவாக்கம் பெற்ற அந்த பெளத்த ஆலயம், தற்பொழுது பெரிய அளவில் ‘கிரி விகாரை’ என உருவெடுத்துள்ளதுடன் சிங்கள மக்கள் எக்காலத்திலும் வாழ்ந்திராத அத்தமிழ்ப் பிரதேசம் இப்பொழுது சிங்கள மக்களின் புரான கால வாழ்விடமாகிவிட்டது.(திரியாய்க்கு தெற்கே வெல்வேரியில் அமைந்துள்ள பெளத்த விகாரையின் கதையும் இதுபோன்று தான். வெல்வேரி என்றால் ஆலயத்தில் ஓமம் வளர்ப்பதற்கான தீ) 

சேருவில பெளத்த ஆலயம் 

திருக்கோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதிக்கு கிழக்குப் புறமாக அமைந்திருப்பது சேருவில பெளத்தவிகாரை ஆகும். சேர்வில் காட்டுப்பிள்ளையார் ஆலயம் என்பதுதான் புரான பெயராகும்.(வில்லு – குளம்) இவ்வாலயத்தை வழமையாக தரிசித்து வந்த சோழன் தனது பெளத்தப் பற்று காரணமாக அங்கு ஒரு பெளத்த விகாரையை அமைத்திருந்தான். காலப் போக்கில் ‘விகாரை உள்ள இடமெல்லாம் எமது பூர்வீகம்’ என்னும் சிங்களவர்களின் மேலாதிக்கத்தால் சேருவில என மாற்றப்பட்டு பெருவாரியாக சிங்களக் குடியேற்றமும் நடைபெற்றது. 

சேருவில என்ற தேர்தல் தொகுதி உருவாகி, 1977 இல் ஒரு சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்(லீலாரத்ன) தெரிவாகும் அளவிற்கு உயர்ந்து தற்பொழுது 2010 ம் ஆண்டில் இரு பாராளுமன்ற உறுப்பினர்களை(குணரட்ன, புஞ்சிநிலமே) உருவாக்கிய நிலையில் நிற்கிறது. எதிர்காலம் எப்படி அமையுமோ??? 

தமிழர்கள் – பெளத்தர்கள் 

பெளத்த வழிபாட்டுத்தலம் யாவும் சிங்கள மக்களின் புரான வாழ்விடங்கள் என இலங்கையை மாறி மாறி ஆட்சிசெய்துவரும் அரசுகள் திணிக்கும் கருத்தாகும். நடைமுறைக்கு ஒவ்வாத சாத்தியமற்ற தரவுகளை சிங்களம் வழங்கி சர்வதேசத்தின் ஏமாற்றும் வித்தையை காணக்கூடியதாக உள்ளது. தமிழ் மன்னன் சோழன் பெளத்தத்தை ஏற்றுக் கொண்டான் என்பதற்காக அவனால் ஸ்தாபிக்கப்பட்ட பெளத்த ஆலயங்களின் அமைவிடங்கள் யாவும் சிங்களவர்களின் புரான இடங்கள் என்னும் வக்கிர அபிப்பிராயத்தை மாற்றியமைக்க வேண்டும். இல்லாவிடின் காலவரையில் சோழ மன்னனையும் சிங்கள மன்னன் என மாற்றிவிடுவார்கள். 

வரலாற்றுச் சேவை 

‘தமிழர் தாயகம்’ கபளீகரம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எண்ணிலடங்காதவை. அவசர பார்வைக்காக கடுகளவு தரவுகள் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. கால தேவைக்கேற்றாற்போல் பல கபளிகர வரலாறு ஆதாரத்துடன் மேலும் பல தமிழர்வாழ்விடங்களில் இருந்து வெளிவரல் வேண்டும். இதுவே தமிழர், வரலாற்றுக்கு செய்யும் சேவையுமாகும். 

சிங்கள வரலாற்று ஆசிரியர்களைப் பொறுத்த வரையில் தமிழர்களின் உண்மை வரலாறு பற்றி நன்கு தெரியும். சிங்களத் தேசியத்தின் நன்மை கருதி உண்மையை மறைத்து ஊமையாகியுள்ளார்கள். சிங்கள அரசியற் தலைமைகளின் ‘சிங்கள மேலாண்மை’ அழுத்தத்தின் காரணமாக மௌனித்து கிடக்கிறார்கள். 

எனவே, இவ்முரண்பாட்டிற்கு தீர்வு காண வழிதான் என்ன?

சர்வதேசத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நடுநிலைமை வாதிகள் கொண்ட பொதுச்சபைக்கு சிங்கள மேலாண்மை கொண்ட(குறிப்பாக பெளத்த பிக்குகள்) புத்தி ஜீவிகளை அழைக்க வேண்டும். நடுநிலைமை வாதிகளின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் நியதியும் வகுக்கப்பட வேண்டும். இதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்குவதற்கு பல கோணங்களில் இருந்தும் புலம்பெயர் வாழ் புத்திஜீவிகள் ஏற்படுத்த வேண்டும். இதற்கு துணையாக நாடுகடந்த அமைப்புகளும், ஈழத்தமிழர்களில் பற்றுக்கொண்ட ஆர்வலர்களும் களத்தில் இறங்கவேண்டும். நிட்சயம் உண்மை வெளிவரும். 

ஏனெனில், தர்மம் தோற்றதாக வரலாறு இல்லை.

நன்றி தமிழ்வின்