மதத்தை அடிப்படையாக கொண்டு இனத்தின் இருத்தலை தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டமைதான் இலங்கையில் இன முரண்பாட்டிற்கான பிரதான காரணங்களாக கொள்ளலாம்

இந்துக்கள் யாவரும் தமிழர் என்றால் இந்தியாவில் 3/4 பங்கு தமிழர்கள் ஆவார்கள். அதுபோல், பெளத்தர்கள் யாவரும் சிங்களவர்கள் என்றால் இலங்கை உட்பட கடல்கடந்த நாடுகளான பர்மா, ஜப்பான் போன்ற பல தேசங்கள் முழுவதுமாக சிங்களவர்களாக இருந்திருக்க வேண்டும். இதற்கான எந்தவித சாத்தியப்பாடுகளும் அற்ற நிலையில், இலங்கையில் மட்டும் பெளத்தர்கள் அனைவரும் சிங்களவர்களாக இருந்திருக்க வேண்டுமெனவும், பெளத்த ஆலயங்கள் இருந்த இடம் யாவும் சிங்கள மக்களின் பூர்வீகங்கள் என்ற கற்பனை தீர்மானத்திற்கு வருவது எத்தனை அளவில் சரியாக அமையலாம்

தற்போது இலங்கையில் வாழும் இளம் சிங்கள சந்ததியினருக்கு உண்மைகள் விளங்க வழி இல்லாது இருக்கலாம். உண்மை தெரிந்த சிங்கள பழமை வாதிகள் வேண்டுமென்றே உண்மைகளை வெளிவிடாதிருப்பது பெரும் வேதனைக்குரியது. அரசியல் இலாபங்களை நோக்காகக் கருதி, சிங்கள மக்களை பேரினவாத மேலாண்மை சிந்தனைக்குள் எப்போதும் தக்க வைத்திருக்க வேண்டுமென்ற குறுகிய மனப்பான்மையே இதற்குக் காரணமாகும்

சிங்கள மக்களின் இந்தப் போக்கை மாற்றுவதற்கு, சிங்கள மக்கள் மத்தியில் இலங்கையின் உண்மைத்தன்மை ஊடுருவக்கூடிய வழிமுறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தமிழ்மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இதுவாகும்

தமிழர் இடங்களில் பெளத்த அடையாளங்கள்  

தமிழரின் பூர்வீக இடங்களில் பெளத்த எச்சங்கள் தோன்றக் காரணம் என்பதை மிக மிக சுருக்கமாக பகிர்ந்து கொள்வோம்

எல்லாளன் என்ற சைவ சமயத்தைச் சேர்ந்த தமிழ் மன்னன் கி.மு 161 – 117 ஆண்டுகள் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு இலங்கைத்தீவு முழுவதையும் அரசாட்சி செய்து வந்தான். அக்காலத்தில் வடக்கு, கிழக்கு, கரையோரம், மேற்கு பகுதிகள் தமிழரின் வாழ்விடங்களாக இருந்தன. விஜயன் வழி வந்த பெளத்தர்கள் தெற்கிலும், தென்மேற்கிலும் செறிந்து வாழ்ந்து வந்தனர்

இலங்கையில் எல்லாளனின் ஆட்சிக் காலம் என்பது ஒரு தமிழ் மன்னனின் ஆட்சிக்காலம். தமிழருக்கு பெருமை சேர்ப்பதோடு, இலங்கையை ஆளுவதற்கான சகல தகுதியும் தமிழருக்கு உண்டென்ற வரலாற்றுக் குறிப்பையும் சர்வதேசத்திற்கு வழங்கி நிற்கிறது

சோழர் காலம்

இற்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா தமிழ் நாட்டின் தஞ்சாவூரை இராஜ தானியாகக் கொண்டு அரசாண்ட சோழ பரம்பரையைச் சேர்ந்த இராஜ இராஜ சோழன் பிரதானமானவன்

இராஜ இராஜ சோழனின் வீர வரலாறு உலகெங்கும் பரவியிருந்த காலம் அது. கி. பி 993 ம் ஆண்டளவில் சோழனின் படைகள் இலங்கைத் தீவின் அனுராதபுரம் வரையுமுள்ள முழு வட பகுதியினையும் கைப்பற்றின

கி.பி. 1017 இல் இராஜ இராஜ சோழனின் மகனை இராசேந்திர சோழன் இலங்கைக்கு படையனுப்பி முழு இலங்கையையும் கைப்பற்றி கி.பி. 1070 வரை ஆட்சி செய்தான்

சோழர் ஆட்சி செய்த காலங்களில் இலங்கைக்கு சோழ மண்டலம் என பெயரிட்டு சன நாத மங்களம்என பெயர்கொண்ட இன்றைய பொலன் நறுவையை தலைநகராக கொண்டமையும் குறிப்பிடல் பொருத்தமாகும். இதிலிருந்து கிடைக்கும் வரலாற்றுத் தகவல் யாதெனில் மீண்டுமொருமுறை தமிழரின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை வந்துள்ளதென்பதே

எல்லாளன் காலத்திற்கும் சோழர் காலத்திற்குமிடையே விஜயன் வழி வந்த பெளத்த மன்னர்கள் இலங்கையை ஆட்சி செய்திருந்தனர் என்பதையும் குறிக்கப்படல் வேண்டும். அம்மன்னர்கள் ஆட்சி செய்யும் காலங்களில் தமிழர்களுக்கான ஆட்சி அதிகாரம் கொண்ட பகுதிகளை தமிழர்களுக்கே உரித்தாக தமிழ் குறுநில மன்னர்களும், வன்னிமைகளும் ஆட்சி அதிகாரம் பெற்றிருந்தார்கள். போத்துக்கேயரின் வருகையால் ஆரிய மன்னர்களின் ஆட்சி அதிகாரங்களுக்குட்பட்ட கண்டி, கோட்டே போன்ற பல பகுதிகள் போத்துகேயர் வசப்பட்டமையால் வியாபார நடப்பீடுகள் ஸ்தம்பிதமடைந்தன. அவ்வேளையில் இலங்கைக்கான கடல் வாசல் திறக்கப்படவேண்டிய தேவை இருந்தது

ஆரிய மன்னர்கள் தமிழ் ஆட்சிமை அதிகாரம் கொண்டவர்களின் அனுமதியைப் பெற்று திருக்கோணமலைத் துறைமுகம், மாதோட்டைத் துறைமுகம் போன்றவை கடல்வழித் துறைமுகப் போக்குவரத்திற்காக திறந்துவிடப்பட்டது. இதில் குறிப்பாக சுட்டிக்காட்டப்படவேண்டியது என்னவென்றால், ஆரிய மன்னர்கள் தமிழர் பிரதேசங்களில் உள்ள துறைமுகங்களை ஆட்சி அதிகாரம் கொண்ட தமிழர்களிடமே அனுமதி பெற்றமை தான். அதாவது ஏதோ ஒரு யாப்பின் கீழ் இலங்கைத் தீவினுள் இரு வேறுபட்ட, தன்னாட்சி அதிகாரம்கொண்ட, இறைமை மிக்க நிர்வாகம் தமிழ்ப் பகுதிகளுக்கும் சிங்களப் பகுதிகளுக்கும் இன ரீதியாக நடை பெற்றது என்பதே ஆகும். (ஆரிய மன்னர்கள் தமிழ் ஆட்சிமையாளர்களிடம் அனுமதி கோரி எழுதிய நிருபப் படிவங்கள் ஆவணப் படுத்தப்பட்டுள்ளது.

தொடரும்…… 

கனக கடாட்சம்

நன்றி தமிழ்வின்