ஏறத்தாள 40 வருடங்களுக்கு முன்னர், மிக பிரபல்யமாக பேசப்பட்ட செம்மீன்மலையாள திரைப்படம் நினைவுக்கு வருகிறது.

தர்மத்திற்கு ஒவ்வாது நடந்துகொண்ட குடும்பப் பெண்ணின் காதலையும், அவளின் தாம்பத்திய வாழ்வையும், ஏமாற்றப்படும் கணவனையும், கொந்தளிக்கும் அலைகடல் சீற்றம் கொண்டு பழிவாங்குவதுதான் அத்திரைப்படத்தின் மூலம்.

அது அன்று வெறும் செயற்கையான திரைப்படம்.

ஆனால் இன்று இயற்கையின் சீற்றத்தில் நிதர்சனமாகும் நிஜங்கள்.

இவை இரண்டிற்கும் தர்மத்தின் தண்டனைஒன்றுதான். ஒரு வருடம் கடந்த போதிலும் வன்னி அவலத்தின் மரண ஓலங்கள் இன்றுவரை ஒவ்வொருவரினதும் செவிகளிலும் ஒலித்த வண்ணம் உள்ளது. சென்ற ஆண்டின் இதே நாள் தான் தமிழின அழிப்பின்உச்சக்கட்டமாக வரலாறு சொல்லப்போகும் செய்தியாகும். தமிழினத்தை அழித்தமையை பெரு வெற்றி விழாவாக கொழும்பிலே கொண்டாடுவதற்கு சிங்களம் எடுத்துக் கொண்ட பெரும் எடுப்புக்களை இயற்கை விரும்பாது சீற்றம் கொண்டதை இப்போது காணக் கூடியதாக உள்ளது. தமிழினத்துக்கு இந்த இயற்கையின் சீற்றம் பெரும் ஆறுதலைத் தந்துகொண்டிருப்பதையும் மறைக்க முடியாது. இதை ஒரு பழிவாங்கும் நினைப்பாக கொள்ள முடியாவிட்டாலும் இயற்கையின் தண்டனையாக கொள்ளலாம்.

ஏறத்தாள 5 இலட்சம் தென்பகுதி மக்கள் அடைமழை வெள்ளத்தினால் அகதிகளாக்கப்பட்டுள்ளார்கள். அதோடு 20 பேருக்கு மேல் காணவில்லை என்னும் செய்திகளோடு, திருக்கோணமலை மாவட்டத்திலே அத்து மீறிக் குடியேற்றப்பட்ட பல பெரும்பான்மையின சிங்கள மக்களின் வீடுகள் வெள்ளத்தில் அள்ளுண்டு போனதும், அவர்கள் நிர்க்கதியாகி உள்ளதையும் கண்டு மகிழ்வுறவில்லை. ஆனால் வன்னி மக்களின் கண்ணீரிலிருந்து பெரும்பான்மை சிங்கள மக்கள் தப்பிக்க முடியாது என இயற்கை சொல்லும் செய்தியாகும்

இதே இயற்கைக்கு தமிழர் கூறும் செய்தியானது, குறிவைக்க வேண்டியவர்களை மட்டும் குறி வைத்திருந்தால் அரசைப் பொறுத்த வரையில் நியாயமாகலாம். ஆனால் அப்பாவிப் பொதுமக்களும், குழந்தைகளும் அநியாயமாக ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டதானது இலங்கையிலே இரு வேறுபட்ட நாடுகள் என்றும், முற்றாக வேறுபட்ட கலாசார விழுமியங்களோடு வாழும் இரண்டு இனங்கள் உள்ளதென்பதையும் இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதென்பது உண்மையானதாகும் என்பதே.

இலங்கை அரசைப் பொறுத்தவரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயங்கரவாதிகள் என தோற்றமளித்தது உண்மைதான். அதையே சர்வதேசத்திற்கு ஏற்ப பயங்கரவாதிகளாக திசை திருப்பிய சாணக்கியத்திற்காக இலங்கை அரசைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். அதேவேளை தமிழினத்தின் மேல் கொண்ட வக்கிர உணர்வோடு சிங்களம் செய்த பரப்புரைகளை செவிமடுத்து ஏற்றுக்கொண்ட சர்வதேச வல்லரசு நாடுகளின் பேதமைப் போக்கை எந்த பட்டியலில் சேர்த்துக் கொள்வது? ஒட்டு மொத்தத்தில், விடுதலப்புலிகளுக்கு எதிரான போரில் சர்வதேசம் ஒத்துழைத்தமைக்கான காரணமானது, ஒரு வல்லரசு நாட்டின் படையினர் போன்று போர்ப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி அதற்கமைவாற்போல் பலதரப்பட்ட போர்ப்படையினர்களை விடுதலைப் புலிகள் ஒரு குறுகிய பிரதேசத்தினுள் கட்டுமானத்துடனும், ஒழுங்குடனும் நிர்வகித்து வந்தமையை ஏற்றுக்கொள்ள முடியாததன் வெளிப்பாடேயாகும்.

இது ஒருபுறமிருக்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒட்டு மொத்த ஆசீர்வாதத்தோடு பாராளுமன்றம் வந்திருந்த உறுப்பினர்கள் ஈழத்தமிழ் மக்களின் விடுதலை விருப்புக்களையோ அல்லது புலிகளின் போர்விடுதலை நோக்கிய பயணம் சார்பாக சர்வதேசத்திற்கு தெளிவுறக் கூறாது மெளனித்திருந்தது பெரும் வேதனைக்குரியதாகும். வெறுமனே புலிகளை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக பாராளுமன்றத்தில் உரையாற்றுவதிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகுந்த கவனம் செலுத்தியதையும், அவர்களின் நிகழ்ச்சிநிரலையோ, கட்டமைப்பையோ ஏற்படுத்துவதில் விடுதலைப் புலிகள் பாராமுகமாக இருந்ததையும் கடந்த காலங்களில் அவதானிக்க கூடியதாக இருந்தது. முழுப்படியாக இராணுவ வெற்றியின் முனைப்பிலே கவனம் செலுத்தியதும் இதற்கான காரணமாக அமையலாம்.

இவை யாவும் நடந்து முடிந்தவை. இனி நடப்பதில் தான் கவனம் வேண்டும். கடந்தவைகளில் கிடைத்த அனுபவங்களை சரியான முறையில் பிரயோகித்தல் வேண்டும். இனியும் தவறி விழாமைக்கான முன்னெச்சரிக்கைகள் மிக அவசியம். களைத்துப் போயும், அன்னலுற்றும் வாழும் வடகிழக்கு தமிழ்மக்களுக்கான நிரந்தர தீர்வுபற்றி அனைத்து தமிழ் புத்திஜீவிகளும் ஒன்றிணைந்து தீர்வு காண்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து அறிதல் வேண்டும்.

இதற்காக நாம் தேடவேண்டிய தீர்வுகள் என்ன?
அதை எப்படி நடைமுறைப் படுத்த வேண்டும்?
யாரெல்லாம் பங்குகொள்ள வேண்டும்?
இவையே எம்முன் விரிந்து நிற்கும் வினாக்கள்.

தசக்கிரீவன்

Thanal