இலங்கை சிங்கள அரசாங்கம் கிழக்கு மாகாணத்துக்கு காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்ட ஒரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமித்திருக்கின்றது.

அவர்கள் நினைத்திருந்தால் அதாவுல்லாவையோ, மகிந்தாவின் மிக நெருக்கமான நஜீப் அப்துல் மஜீத்தையோ அல்லது ரவூப் ஹக்கீமையோ நியமித்திருக்கலாம். அதாவுல்லாவோ, ரவூப் ஹக்கீமோ அல்லது நஜீப் அப்துல் மஜீத்தோ ஒரு இறுக்கமான சூழ்நிலையோ பிரச்சனையோ வந்தால் அவர்கள் தமிழர்களுடன் தான் சேர்ந்து நிற்பார்கள் என்று சிங்கள இனவாத அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும்.

ஆனால் ஹிஸ்புல்லா அப்படி அல்ல, அவர் சிங்களவர்களுக்கு சார்பாகவே நிலைப்பாடு எடுப்பார். கிழக்கு மாகாணத்தை நிரந்தமாக வடக்கிலிருந்து பிரிப்பதற்கும் தமிழர் முஸ்லீம்களுக்கிடையில் ஒரு பெரும் இனக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழர்களை ஒட்டுமொத்தமாக கிழக்கிலிருந்து விரட்டுவதற்கோ அல்லது இல்லாது அழிப்பதற்காகவோ திட்டமிட்டு ஹிஸ்புல்லவை நியமித்திருக்கின்றார்கள்.

ஹிஸ்புல்லா ஏற்கனவே தமிழர் வாழ்விடங்களை எப்படி வலிந்து கையகப்படுத்தினேன், இந்துக்கோயில் இருந்த இடத்தை எப்படி கைப்பற்றி பள்ளிவாசலுக்கு கொடுத்தேன் என்று வெளிப்படையாகவே பேட்டி கொடுத்து சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார் என்று தெரிந்தும் அவரை ஆளுநராக நியமித்திருக்கின்றார்கள் என்றால் எப்படியான அழிவுத்திட்டத்தை தீட்டியிருக்கின்றார்கள் என்பதை தெளிவாகவே புரிந்துகொள்ள கூடியதாக இருக்கின்றது.

அவரது நியமனத்திற்கு எதிராக கடையடைப்பு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என்று தமிழர்கள் தாமாகவே சிங்கள இனவெறி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் போய் விழுந்திருக்கின்றார்கள். ஏதாவது கலவரம் மூண்டு அழிவு ஏற்பட்டால் சிங்கள அரசாங்கத்திற்கோ, சிங்கள மக்களுக்கோ எந்த நட்டமும் ஏற்படப்போவதில்லை. அழிவும் பாதிப்பும் தமிழர்களுக்கே(அதாவது இஸ்லாமிய தமிழர்களும், ஏனைய தமிழர்களும்).

கிழக்கில் ஹிஸ்புல்லாவுக்கு எதிர்ப்பு அதிகரிக்கும் போது அரசாங்கம் ஒரு சிங்கள இனத்தவரை ஆளுநராக நியமிக்கும். அப்படி நியமித்தால் ஹிஸ்புல்லாவும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும். இந்த சூழ்நிலையை ஒட்டுமொத்த தமிழர்களும் (இஸ்லாமிய தமிழர்களும்) மிகவும் அரசியல் சாணக்கியத்துடனும், புத்திசாலித்தனமாகவும் கையாளவேண்டும்.

இஸ்லாமிய தமிழர்களதும், ஏனைய தமிழர்களதும், தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் பேராதரவுடன் ஜனாதிபதி பதவியேற்ற மைத்திரியின் தந்திரம் பதவியேற்ற மறுகணமே இந்துக்கலாசார அமைச்சராக மஸ்தான் என்ற இஸ்லாமியரை நியமித்ததன்மூலம் நாம் புரிந்துகொள்ளவேண்டிய விடயம் என்னவென்றால், தமிழ் முஸ்லீம் மக்களின் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றிய நன்றியை விட சிறுபான்மையினத்தவரில் தங்கியே தனது பதவியை பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் ஒவ்வொரு சிங்கள தலைமைகளும் இருக்கின்றோம் என்ற காழ்ப்புணர்வே மேலோங்கி இருந்திருக்கின்றது.

எதிர்காலத்தில் சிங்களவருக்கு இந்த நிலைமை என்றுமே வரக்கூடாது என்று எண்ணி முதல் கட்டமாக தமிழ் முஸ்லீம் மக்களை பிளவு படுத்தவேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதே அன்றைய மஸ்தானின் இந்துக்கலாசார அமைச்சு பதவியும் இன்று ஹிஸ்புல்லாவின் ஆளுநர் பதவியும் என்பதை நாங்கள் சரியாக விளங்கிக்கொள்ளவேண்டும். இஸ்லாமிய தமிழ் மக்களினதும் ஏனைய தமிழ் மக்களினதும் ஒற்றுமைப்பாடு பெளத்த சிங்கள தலைமைப்பீடங்களையும் சிங்கள மக்களையும் கதி கலங்க வைக்கும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணரல் வேண்டும்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்போ, தமிழரசுக்கட்சியோ இந்த விடயத்தில் ஒருபோதும் எந்த விதத்திலும் தமிழர்களின் நலன்சார்ந்து சிந்திக்கப்போவதுமில்லை, சிங்கள அரசை எதிர்த்து எந்த நடவடிக்கைகளிலும் இறங்கப்போவதுமில்லை. மைத்திரியின் ராஜ தந்திரத்திற்கு முன்னால் சம்பந்தனினதும் சுமந்திரனதும் ராஜ தந்திரம் புஷ்வாணமாகிப் போயிருக்கின்றது. சிந்திப்போம் செயற்படுவோம் எதிர்காலம் பற்றி.

மலையூர் பண்ணாகத்தான்