makkalavai
Desember, 01. 2016
Norway

மனிதத்தை நேசித்த ஒப்பற்ற மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்கள் சுகவீனம் காரணமாக காலமாகிவிட்ட செய்தி தமிழக எல்லை கடந்து உலகத் தமிழர் நெஞ்சமெங்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக இறுதிவரை போராடிய இன்குலாப் அவர்கள் தமிழ் மொழி காக்க இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தார். கலைஞர், படைப்பாளி என்பதையும் கடந்து மனிதத்தை நேசிக்கத் தெரிந்தவராக இருந்ததுடன் அந்த மனிதத்திற்காகவே தனது ஆற்றல்கள் முழுதையும் வெளிப்படுத்தியவர் மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்கள். அவ்வழியே தமிழீழ விடுதலைப் போராட்டத்துடனான தனது உறவையும் வலுப்படுத்தியிருந்தார்.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இனவெறியாட்டத்தில் சிக்கி ஈழத் தமிழர்கள் அனுபவித்துவந்த கொடுந்துயரத்தை தன் துயரமாக கருதுமளவிற்கு உணர்வால் ஒன்றிணைந்திருந்தார் மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்கள். அதனால் தான் வகை தொகையின்றி எமது உறவுகள் கொன்று குவிக்கப்பட்டு வருவதனை தாங்கமுடியாது அதற்கு காரணமான காங்கிரசு-தி.மு.க. கூட்டணி அரசின் அயோக்கியத்தனத்தை உலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டிருந்த ‘கலை மாமணி’ விருதை திரும்பக் கொடுத்திருந்தார்.

தனது கவிதைகளால் ஈழத்துயரங்களை பதிவு செய்ததுடன் தமிழகத்தின் தார்மீகக் கடமையையும் தன் கவியால் கோடிட்டுக்காட்டியிருந்தார். 1983 ஜூலை படுகொலையின் போது அவர் எழுதிய கவிதை இன்றும் தமிழீழம்-தமிழ்நாட்டின் பிணைப்பை முரசறைவதாய் உள்ளது.

“காற்று ஈழத்தின் கனலாய் வீசுகிறது. கரைகளில் இனியும் நாங்கள் கைகட்டி நிற்கவோ?’

“ஈழப் போருக்கு கரங்கள் வேண்டும்
இங்குள்ள தமிழர் கரங்கள் நீளுக!
ஈழப் போருக்கு தளங்கள் வேண்டும்
எங்கள் கரைகள் தளங்கள் ஆகுக!
ஈழப் போருக்கு ஆயுதம் வேண்டும்
இங்குள்ள தமிழர் ஆயுதம் செய்க!
ஈழப் போருக்கு ரத்தம் வேண்டும்
இங்குள்ள தமிழர் ரத்தம் பாய்க!’

இன்றும் உயிரோட்டமாக அர்த்தம் பொதிந்திருக்கும் இக்கவிதை வெறும் வார்த்தைகளால் நிரப்பட்டதல்ல. உணர்வுகளால் கொட்டிநிரப்பப்பட்ட காவியமாகும்.

மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களின் தமிழ் பற்றையும் இன உணர்வையும் மதிப்பளிக்கும் வகையில், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் 2002 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் நேரில் அழைத்து விருது வழங்கி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தாங்கிநிற்கும் உணர்வுத்தளத்தில் இருந்து ஒரு கல் இன்று பெயர்க்கப்பட்டுவிட்டது. அந்த வகையில் மக்கள் கவிஞரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், உணர்வுத் தளத்தில் ஒன்றாகப் பயணித்த உணர்வாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களை!

-30-

International Council of Eelam Tamils (ICET) was established in 2011 by a number of grass-roots Tamil organizations, which were democratically elected by the Eelam Tamils. It is the largest Tamil diaspora organization with members drawn from fourteen countries. The ICET is absolutely committed to a non-violent agenda and it seeks a lasting peace in Sri Lanka, based on Vaddukoddai Resolution. For more information, please contact spokesperson Steven Pushparajah K, +47 90641699.