Internationalகடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் நாட்டில் இரகசியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது? எதற்காக அந்தக் கூட்டம் நடைபெற்றது என்பது தொடர்பாக பேச்சுக்களில் கலந்துகொண்ட தனிமனிதர்களோ அல்லது அவர்களினுடைய அமைப்போ இன்றுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் In Transformation Initiative அமைப்பு வெளியிட்டிருந்த ஊடக அறிக்கை தொடர்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தனது சந்தேகங்களை எழுப்பி இருந்ததுடன், தமிழர் தரப்பின் உண்மையான பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டமை, இந்த கூட்டங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் குற்றம் சாட்டியிருந்தது.

இந்நிலையில் மீண்டும் இரண்டாவது தடவையாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மற்றும் சுரேன் சுரேந்திரன், வெளிநாடுகளின் பிரதிநிதிகள், இணைந்து இங்கிலாந்து நாட்டில் ஒரு இரகசியப் பேச்சுவார்த்தை வியாபாரம் நடத்தி இருக்கின்றனர்.

இது சுரேன் சுரேந்திரன், எம்.ஏ சுமந்திரன் போன்றவர்களது தனிப்பட்ட பிரச்சனைக்கான தீர்வை காண்பதற்கானதல்ல இது ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களின் உரிமைப்பிரச்சனை. இதில் தீர்வு பற்றி பேசும்போது அதன் பிரதிநிதிகளாக மக்களின் உண்மை பிரதிநிதிகளை உள்வாங்க வேண்டும் என்பதோடு அவர்களுக்கே தெரியாமல் இரகசிய பேச்சுவார்த்தை இரகசிய ஒப்பந்தம் என்ற நிலைக்கு தமிழர்களின் தீர்வுகள் இட்டுச்செல்லப்படக்கூடாது.

தென்னாபிரிக்கா நாடு தாம் வரலாறில் கடந்து சென்ற அடக்குமுறைகளையும், அதிலிருந்து விடுதலை அடைந்த அனுபவத்தையும் வைத்துக்கொண்டு ஈழத்தமிழர் பிரச்சனையில் மூக்கை நுளைக்கப் பார்க்கிறது தென்னாபிரிக்கா எதிர்கொண்ட நிறவெறி இன ஒடுக்குமுறைக்கும் தமிழீழ மக்கள் எதிர்கொள்ளும் இன அழிப்புக்கும், மற்றும் தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை அடிப்படையில் இறையாண்மை சார்ந்த தேசிய இனப்பிரச்சனைக்கும் நீண்ட, நெடிய வேறுபாடுகள் உள்ளது என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.

அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்தமிழ்த் தலைவர்களுடன் சிங்கள அரசியல் தலைமைகள் செய்த ஒப்பந்தங்கள் அனைத்தும் கிழித்தெறியப்பட்டிருக்கின்றன இதுவே ஆவணப்படுத்தப்பட்ட ஈழத்தமிழர்களின் உண்மை வரலாறாகும். அடிப்படையில் சிங்கள பேரினவாத அரசோடு ஒரு உள்நாட்டு பொறிமுறை ஊடாக அரசியல் தீர்வொன்றினை காண முடியாது என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் பல தடவைகள் கடந்து வந்த ஈழத்தமிழர்களின் வரலாற்று பகுப்பாய்வுக்கூடாக பல தளங்களில் சொல்லியிருக்கிறார்கள்.

ஈழத்தீவை மாறி மாறி ஆட்சிசெய்த இரு பிரதான கட்சிகளும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டவண்ணம் அரசியல் சட்ட யாப்புகளை மாற்றும் பணியிலும், ஒருவர் மீது மற்றவர் தமிழர்களை அடக்கி ஒடுக்கும் உத்திகளில் நான் பெரிதா நீ பெரிதா என்று குற்றம் பிடிப்பதிலும், வசை பாடுவதிலும், தங்களின் ஆட்சி அதிகாரங்களைத் தக்கவைத்துக்கொள்வதிலும், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதிலும், மக்களின் ஆணையை துஷ்பிரயோகம் செய்து சட்டங்களைத் தாங்கள் நினைத்தவாறு மாற்றி தங்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலுமே சாதித்து வந்துள்ளன. தொடர்ந்தும் இந்த நிலையே காணப்படுகின்றது. ஆனால் ஈழத்தமிழர்கள் மீது ஒரு கட்டமைப்புசார் இன அழிப்பு செய்வது ஒன்றில் மட்டும் சிங்கள பேரினவாத இரு பிரதான கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கின்றன.

தமிழ் மக்களுக்கான அரசியல் அந்தஸ்தை உரிமைகளைக் கொடுக்க நினைத்திருந்தால், 1965 காலப்பகுதியில் வழங்கியிருக்க முடியும். ஆனால், சகல சிங்கள அரசியல் தலைமைகளும் மகாசங்கத்தினர்களின் ஆதிக்கத்துக்குள் உட்பட்டு இருந்ததன் காரணமாக எந்தவொரு அரசியல் செயற்பாடுகளையும் சுயமாக செய்யமுடியாமல் நாட்களை மட்டும் கடத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். பொதுவாக 1944இல் உருவாக்கப்பட்ட சோல்பரி யாப்பானது ரோல் புரூட் என்பவரால் தயாரிக்கப்பட்டபோதும் 1948இல் அப்போதைய பிரதமராக விளங்கிய டி.எஸ்.சேனாநாயக்கவின் ஆலோசனைக்கமைய பெளத்த மதத்தை விரிவாக்கும் வகையில் திருத்தப்பட்டு நாடாளுமன்றில் பிரஸ்தாபிக்கப்பட்டது. மேற்படி சோல்பரி யாப்பில் சிறுபான்மை மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 29 சரத்தை வெறுமனே விட்டுவிட்டதுடன், காலபோக்கில் அதில் குறிப்பிட்டபடி சிறுபான்மையினர்களுக்கான உரிமைகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியோடு நின்றுவிட்டன.

டி.எஸ்.சேனாநாயக்காவின் மறைவுக்குப்பின் டட்லி சேனாநாயக்கா நாட்டின் பிரதமராக விளங்கினார். ஆனால், அவரால் ஒருவருடம் கூட தாக்குப்பிடிக்க முடியாத நிலையில், அவரது பதவி சேர்.ஜோன் கொத்தலாவெலவிடம் ஒப்படைக்கப்பட்டது. இருந்தும் கொத்தலாவெலவால் எதுவும் செய்யமுடியவில்லை. 1956இல் இந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கா தான் இந்த நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்ற காரணத்தால் தமது தேர்தல் பிரசாரத்திற்கு சிங்கள மயமாக்கல் சட்டத்தைப் பிரயோகப்படுத்தினார். இதன் காரணமாக இனச்சுத்திகரிப்புக்கு வித்திட்டதுடன் பண்டா -செல்வா ஒப்பந்தமும் இறுதியில் கிழித்தெறியப்பட்டது.

1960 ஆம் ஆண்டு நாட்டின் தலைமையை ஏற்றுக்கொண்ட திருமதி சிறிமா பண்டாரநாயக்கா தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் நிலையைத் தோற்றுவித்தார். அத்துடன், சிறிமா, சாஸ்திரி ஒப்பந்தம் வாயிலாக பல நூற்றுக்கணக்கான இந்திய நாட்டவர்களை இலங்கையிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றினார். 1965ஆம் மீண்டும் டட்லி சேனாநாயக்கா பதவியேற்றார். அன்றும் வட்ட மேசை மாநாடு, டட்லி செல்வா ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டபோதும், வடக்கு, கிழக்கில் குறைந்தபட்ச அதிகாரத்துடன் சுயாட்சி ஒன்றை வழங்க டட்லி விருப்பம் தெரிவித்தபோதும் மகாசங்கத்தினர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக இறுதியில் அப்படி எதுவும் வழங்கமுடியாதென உறுதியாகக் கூறிவிட்டார்.

1970ஆம் ஆண்டு மீண்டும் சிறிமாவின் கூட்டணியான முன்னணி பதவியேற்றது. அன்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளையும் வழங்குவோம் என்று கூறியே அதிகாரத்துக்கு வந்தார்கள். ஆனால், 1972 இல் வரையப்பட்ட இலங்கையின் குடியரசாக்கல் யாப்பில் சிறுபான்மை மக்களுக்கான 29 ஆவது சரத்தை முற்றாக இல்லாமல் செய்தனர். 1977 ஆம் ஆண்டு ஜெயவர்த்தனா தலைமையிலான ஐ.தே.கட்சி நாட்டின் அதிகாரத்தை ஏற்றது. இருந்தும் சிறுபான்மை மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை இல்லாமல் செய்யவென நன்கு திட்டமிட்ட முறையில் 1978இல் மற்றுமொரு அரசியல் யாப்பை உருவாக்கியது. நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் அதிகாரம் அனைத்தையும் சகல நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தியதுடன் நாட்டின் சகல விடயங்களும் ஒரு தனிநபரின் ஆதிக்கத்துக்குள் சவாரிசெய்ய தொடங்கியது.

ஈழத்தீவில் உள்நாட்டு பொறிமுறை ஊடாக முன்னெடுக்கப்பட்ட அனைத்து நகர்வுகளையும் அறுபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக சிங்கள பேரினவாத அரசு ஈழத்தமிழர்கள் மீது ஒரு கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பை நடத்துவதற்க்கு வாய்ப்பாக பயன்படுத்தியது இன்றும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. ஒரு நிரந்தர அரசியற் தீர்வு என்பது வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தாயகத்திலும், புலத்திலும், தமிழ் நாட்டில் வதியும் ஈழத் தமிழர்களிடமும் சர்வசன வாக்கெடுப்பு மூலமே நிறுவப்படவேண்டும்.

அன்றுதொட்டு இன்றுவரை சிங்கள தேசிய அரசில் இணைந்து செயற்பட்ட தமிழ் பேசும் அரசியல்வாதிகள் சமூகத்தின் நலன்கருதி எதையும் உருப்படியாக மேற்கொண்டது கிடையாது. புலம்பயர்ந்த தமிழ் அமைப்புகளை தமிழீழம் என்ற விடுதலைப்பாதையை விட்டு விலத்தி அக்கிய இலங்கை, அபிவிருத்தி, நல்லிணக்கம், என்ற மாயவலையில் சிக்குண்டு அகலபாதாளத்தில் தமிழினத்தை விழ்த்தி தடம் தெரியாது இல்லாமல் செய்யும் சிங்கள பாசிச அரசின் கபடம் நிறைந்த சர்வதேச நகர்வுகள் வெளிக்கிளம்பத் தொடங்கிவிட்டன.

புலம்பெயர் தமிழர்களே! மிகவும் விழிப்பாக இருங்கள்

கொல்லைப் புறங்களில் பேச்சுவார்த்தை நடத்தும் தம்மைத் தாமே உயர்த்திப்பேசும் ஒரு சில தமிழ் அமைப்புக்களும் அதன் முடிசூடா தனிமனித ராஜாக்களும் ஒருசில தமிழ் ஊடகங்களும் , புலம்பெயர் தமிழர்களுள் அறிவாளிகள் எனக்கூறுவோரும், தற்போது ஈழத்தமிழர்களின் விருப்பு, கனவு, தியாகம், அற்பணிப்பு அனைத்தையும் தங்கள் சுயநல ஏலத்தில் விற்றுக்கொண்டிருக்கின்றனர் தமிழர்களை தவறான அரசியல் பாதையில் இட்டுச்சென்று தமிழர்களின் விடுதலை மழுங்கடிப்பதற்கான வேலைகளைச்செகின்றனர் !

தமிழீழ மக்களும், தமிழக மக்களும் மற்றும் புலம்பெயர்ந்த தமிழீழத் தமிழ் மக்களும் தமிழீழம் என்ற ஒரே இலட்ச்சியப்பாதையில் வரித்துக்கொண்ட இலட்ச்சியத்தில் இருந்து தடம் புரளாது உறுதியுடன் மௌனித்த இடத்தில் இருந்து தொடர்ந்து செல்வோம் ஈழவிடுதலையை நோக்கி…

நன்றி
– ஈழத்து நிலவன் –