land_0011948ம் ஆண்டு இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் சிங்களம் முதல் கையாண்ட யுக்தி இலங்கையை தனிச்சிங்கள நாடாக மாற்றுவது. இதற்காக தமிழர்களை அவர்களது சொந்த வாழ் நிலங்களிலிருந்து இடம்பெயர வைத்து ஐதாக்குவது.

அடுத்தபடி தமிழர்களை இல்லாதொழிப்பது. இதன் தொடக்க வேலையாக கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருக்கோணமலை மாவட்டத்தில் இப்பணியை ஆரம்பித்தது. மிகத்துல்லியமாக திட்டமிட்டு 1954ம் ஆண்டுகளில் பலவிதமான குடியேற்றத்திட்டங்களின் மூலம் (கல்லோயாத்திட்டம், மகாவலித்திட்டம்) தன் பணியை ஆரம்பித்தது.

மனித குலத்தின் நாகரீகம் நதியோரங்களிலிருந்து ஆரம்பித்ததாக தொன்மை வரலாறு கூறுகின்றது. இலங்கையின் வரலாற்றை ஆழமாக நோக்கின் கங்கைக் கரையோரங்களிலிருந்து தமிழர் நாகரீகம் ஆரம்பித்தது எனக்கொள்ளலாம்.

இதனடிப்படையில் மகாவலிக் கங்கைக் கரையோரங்களில் ஆரம்பித்த தமிழனின் தொன்மை வரலாறு இல்லாமல் செய்ய வேண்டுமென என்றோ சிங்களம் போட்ட கணக்கு இன்றுவரை நடைமுறைப் படுத்தப்படுகின்றது.

இதனை அடிப்படையாகக் கொண்டு அண்மையில் நடைபெற்ற திருக்கோணமலை மாவட்டத்தில் தமிழருக்கான நெற்செய்கை நிலங்களை சிங்களம் செய்யவிடாது தடுத்து வன்முறைக்குட்படுத்தியது இதன் வெளிப்பாடேயாகும்.

திருக்கோணமலை மாவட்டத்தின் இதயமாக அமைந்துள்ள கொட்டியாபுரப்பற்றின் (மூதூர்) நெல்வளம் கங்கைக்கரைகளை அண்மித்த நிலங்களிலேயே தங்கியிருந்தது. இதில் ஒருசில இடங்களான ஒட்டு, படுகாடு, தெத்தி, திருமங்கலாய், புலவனாரோடை, வவுணாவில், அகத்திய தாபனம் போன்ற இடங்கள் நெற்சாகுபடியில் வளமிக்க நிலங்களைக் கொண்ட இடங்களாகும். அதிகளவான ஏக்கர் நிலங்களையும் தன்னகத்தே கொண்டது.

தமிழரின் பொருளாதாரத்தை தம் வசப்படுத்தும் நோக்கத்திற்காக இந்த வளம்மிக்க நெற்பிரதேசங்களை தன்னகப்படுத்துவதற்காக திட்டமிட்ட குடியேற்றங்களை ஏற்படுத்தியது.

உதாரணத்திற்கு கூறப்போனால், ஒட்டு, படுகாடு, வவுணாவில், அகத்திய தாபனம், தெத்தி போன்ற இடங்களில் நூற்றாண்டு காலங்களாக தமிழர்களின் விளை நிலங்களை கபளீகரம் செய்தற்பொருட்டு தமிழரின் பழம்பெரும் கிராமங்களிலிருந்து தமிழ் விவசாயிகளை வெளியேற்றி இந்த பகுதிகளில் விவசாயம் செய்யவிடாது, 1954ம் ஆண்டிற்குப் பின் குடியேற்றப்பட்டு வந்த சிங்களவர்கள் நீலன் பளை என்ற தமிழருக்கு சொந்தமான இடத்தை நீலாப்பளை எனப் பெயர் மாற்றி முகப்பில் அமர்ந்துகொண்டு தமிழருக்கான தொழில்த்துறையை துண்டித்தனர்.

தற்போது நீலன் பளை என்ற தமிழர் நிலம் பெருமளவில் சிங்களச் சனத்தொகையைக் கொண்ட நீலாப்பளை என்ற இடமாக மாற்றப்பட்டுள்ளது. அதன் பின்னரான காலப்பகுதியில் இந்த சிங்களக் கிராமத்தை ஊடறுத்தே கங்குவேலி, மேன்காமம், மல்லிகைத்தீவு, பட்டித்திடல், முன்னம்பொடிவெட்டை போன்ற கிராமத்தைச் சேர்ந்த தமிழ் விவசாயிகள் செல்ல வேண்டியிருக்கின்றது.

அவ்வேளைகளில் தமிழ் விவசாயிகள் சிங்களவர்களால் அச்சுறுத்தப்படுவது வழக்கமாகிவிட்டது. 1977ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த விளைநிலங்களை அப்படியே கைவிட்டு இடம்பெயர்ந்து ஓடிவரும் வரும் வகையில் தமிழ் விவசாயிகள் மீது சிங்களவர்கள் வன்முறையை ஏவிவிட்டிருந்தனர்.

இந்த வன்முறையை அப்பொழுது இருந்த பாராளுமன்ற உறுப்பினர் அருணாசலம் தங்கத்துரை அவர்கள் மிக உச்சமான நடவடிக்கை எடுத்தும் எதுவும் பலனளிக்கவில்லை.

தமிழ் விவசாயிகளின் புகார்களை காவல்துறையினர் ஏற்கவுமில்லை நடவடிக்கை எடுக்கவுமில்லை. அண்மையில் இப்பகுதிகளில் நடந்த தமிழ் விவசாயிகளுக்கெதிரான வன்முறை ஒரு புதிய விடயமல்ல. இது என்றோ சிங்களத்தினால் போடப்பட்ட அட்டவணையின்படி நிறைவேற்றப்படுகின்றது என்பது தெளிவாகின்றது.

இதற்கான சுயநிர்ணயமான தீர்வு ஒருபோதும் தமிழர் சிங்களவர் இணைந்த ஒரே நாடு என்ற அமைப்பினுள் சாத்தியமாகாது.

உடனடி நடவடிக்கையாக தமிழ் விவசாயிகளின் காணி உறுதிகளை ஆதாரம் காட்டி சட்டத்தின் மூலமாக நீதிமன்றம் சென்று நியாயம் கோரலாம்.

இதை வழிநடாத்துவதற்கு சட்டத்தில் முதிர்ச்சி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன், கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி. தண்டாயுதபாணி போன்றோர்கள் அடங்கலாக சிறந்த சட்ட ஆலோசனை பெறுவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் அவர்களையும் உள்ளீர்த்து தமிழ் விவசாயிகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்கலாம்.

மேலும், நீதிமன்றத்திற்கு முன்பாக இவ்விடயம் வருமாயின் சர்வதேசத்திற்கும் சிங்களத்தின் மேலாதிக்க நோக்கத்தை தோலுரித்துக் காட்டுவதாகவும் அமையும்.

தசக்கிரீவன்