cv-vigneshwaran_ananthyநடந்து முடிந்த வடமாகாண தேர்தல்(2013) பல பாடங்களைக் கற்பித்ததாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் கூறுவதில் நியாயமுண்டு. இத்தேர்தல் சிங்களத்திற்குக் கபித்ததையும் தாண்டி சர்வதேசத்திற்கும் கூட்டமைப்பினருக்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும் ஒரே செய்தியைக் கூறியுள்ளது.

அதாவது,

உயிர்வாழ்தலுக்கான அரசியல், சோரம்போதலுக்கான அரசியல், அபிவிருத்திக்கான அரசியல், வறுமைக்கான அரசியல், வெறும் சலுகைகளுக்கான அரசியல் இவை அனைத்தையும் தவிடு பொடியாக்கி, மானம் ஒன்றே பெரிதென எண்ணி தமிழர் தம் சுயநிர்ணய உரிமையை நோக்கி  தேசிய உணர்வோடு தான் நாம் இன்னமும் இருக்கின்றோம் என்பதைக் காட்டியுள்ளது.

கூட்டமைப்பினரும் இதில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால் தேசியம் பேணாத எவரையும் தமிழ்மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். தலைமைகள் காட்டும் தேசியம் சாராத எந்த கொடிக்குக் கீழும் தமிழ்மக்கள் அடியெடுத்து வைக்கமாட்டார்கள்.

சுயநிர்ணயம் கொண்ட வாழ்வுதான் ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பு என்பதை இத்தேர்தல் உணர்த்தியுள்ளது. அதற்கு உரமாக அஸ்திவாரமிட்ட விடுதலைப்புலிகளை மக்கள் மனதிலே பூஜித்து வருகின்றார்கள் என்ற மற்றுமொரு உண்மை தெளிவாகின்றது.

எழிலன் அனந்தி

விடுதலைப்புலிகள் பலமாக இருந்த காலத்தில் திருக்கோணமலையிலே கட்டளைத்தளபதி சொர்ணத்தின் கட்டமைப்பினுள் எழிலன் திருக்கோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராய் பணியாற்றினார்.

அக்காலகட்டத்தை மீள்நினைவு படுத்துகையில் அனந்தியின் அரசியல் திறமை புலனாகின்றது. திருக்கோணமலை சாராத எழிலன் எப்படி திருக்கோணமலை மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளராக பணியாற்றுவது சாத்தியமாகும் என கேட்கப்பட்டதற்கு “ரமணா படத்தைப் பாருங்கள் அதில் வரும் நாயகன் தான் எழிலன்” என சொர்ணம் கூறிய பதில் இன்னமும் பலர் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

எழிலனைப்போறுத்த வரையில் தமிழீழத் தலைநகர் திருக்கோணமலையின் பூர்வீக வரலாறு பற்றி அறிந்தவர் பலரிடமும் நிறையவே கேட்டும், படித்தும் அறிந்துகொண்டிருந்தார். மேடைகளில் அரசியல் சார்ந்து பேசும் போழுது மணித்தியாலக் கணக்காக அதுவும் ஆற்றொழுக்காக வரலாறு திரிபின்றி தமிழர் இருத்தல் பற்றிப் பேசுவார். அக்காலங்கள் பொன்னேட்டில் பொறிக்கப்படவேண்டிய காலங்கள்.

“கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்பதற்கமைய எழிலனின் அரசியல் அறிவை முழுமையாக உள்வாங்கியவர் அவரின் மனைவி அனந்தி ஆவார். இதனால் அரசியல் சார்ந்த விடயங்களில் அவர் சோரம் போகமாட்டார். எழிலனின் பிரதிபலிப்பு அவரிடம் முழுமையாகவே உள்ளது.

திருக்கோணமலை மக்கள் அனந்தியின் வெற்றியை, அனைத்தையும் தாண்டி தங்கள் வெற்றியாக கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு. அவருக்கு கிடைக்கும் உயர் பதவி, அந்தஸ்த்து திருக்கோணமலை மக்களையும் மகிழ்விக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெற்றியிலும் திருக்கோணமலை அரசியல்ப்பொறுப்பாளர் எழிலனின் மனைவி அனந்தியின் வெற்றியிலும் உவகையும் பெருமிதமும் திருக்கோணமலை மக்கள் கொள்வார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

மேலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இந்த பாரிய வெற்றி ஈழத்தமிழ் மக்கள் எதை இலக்காகக் கொண்டு பயணிக்கின்றார்கள் என்பதை தேர்தல் நாடித்துடிப்பு கூறுகின்றது. சுயநிர்ணயம் சார்ந்த தாயகத்தை காணவே எழுச்சி கொள்கின்றது.

எது எப்படி இருப்பினும் இது பற்றி தெளிவான அறிவுடன் முதலமைச்சர் வேட்பாளராக நின்ற திரு க. வி. விக்னேஸ்வரன் அவர்கள் சரியான பாதையில் ஈழத்தமிழ் மக்களின் தேசியத்தை இறுதி வரை கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையில் ஈழத்தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் கூடவே நல்நோக்கம் கொண்ட சிங்கள மக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.

கூட்டமைப்பின் வரலாறு காணாத வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

வாழ்க தமிழர்கள்!

வெல்க தமிழர் இலட்சியம்!

தசக்கிரீவன்