May 18 Remember Dayமானிட நாகரிகம் மிக அதீதமாக வளர்ந்த இந்த நூற்றாண்டில் மிக மோசமானதும் கொடூரம் மிக்கதுமான நிகழ்வு இலங்கையில் குறிப்பாக முள்ளிவாய்க்காலில் 2009 ம் ஆண்டில் நடந்தேறிய நிகழ்வு மிக உச்சமானது என்று துணிந்து கூறலாம்!

இலங்கையில் வாழும் மிக பழங்குடி மக்களான தமிழ்ச்சமூகத்தை, பெரும்பான்மையாக வாழும், ஆளும் சிங்களம் முற்றாக அழித்தொழிக்க எடுத்த நடவடிக்கை நாள் 18 மே 2009 ஆகும்.

சிங்களத்தின் மிகப்பெரிய கெட்டித்தனம் என்னவெனில் “பயங்கரவாதத்தை ஒழித்தல்” என்ற மகுடத்தின் கீழ் தனது யுத்த ஏற்பாட்டை ஆரம்பித்தது. கூடவே சர்வதேச சமூகத்தையும் நம்பவைத்து ஏற்றுக்கொள்ள வைத்தது. பின்னராக தனது நெடுங்கால இலட்சியமான “தமிழின அழிப்பை” மேற்கொள்ள ஆரம்பித்தது. இன அழிப்பா அல்லது பயங்கரவாத ஒழிப்பா என்ற பதத்தை சர்வதேச சமூகம் பகுத்தாய்ந்து இனம்காண முன்பே இன அழிப்பு நடந்தேறிவிட்டது.

ஏன் இவ்விரண்டிற்குமான பேதத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அடங்கலாக தமிழர் சார்ந்த ஏனைய அமைப்புகளும் புரிந்துகொள்ள நீண்ட காலம் தேவைப்பட்டிருந்தது. இந்த இழுபறிக்குள் மாபெரும் இனவழிப்பை சிங்களம் வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொண்டது. இதில் கொடுமை என்னவென்றால் இதுவரைக்கும் புரிந்துகொண்ட ஒரு தீர்க்கமான ஒரு முடிவை நிறைவேற்ற தமிழர்களுக்கு உறுதுணையாக இருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு வேலிச்சண்டைக்குள் நிற்பதால் சிங்களம் புரியும் தமிழினவழிப்பு பாகம் பாகமாக வடிவங்களை மாற்றி மாற்றி தமிழினவழிப்பை இன்றுவரை செய்து வருகின்றது. சிங்களத்தின் இந்த தந்திரத்தை சர்வதேசம் புரிந்துகொள்ள முன்னர் எமது தமிழர் சார்ந்த அமைப்புகள் புரிந்துகொள்ளல் அவசியமாகின்றது.

ஈழத் தமிழ்மக்களின் சுயநிர்ணயம் சார்ந்து சிந்திக்கும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளும், ஈழத்திலுள்ள வடகிழக்கு தமிழர்கள், மலையக தமிழர்கள், இலங்கையின் பிற இடங்களில் சொரியலாக வாழும் தமிழர்கள், பிற நாடுகளில் வாழும் தமிழர்கள்(மலேசியா, இந்தியா, மொரீசியஸ் மற்றும் நாடுகள்) உட்பட அனைவருமாக ஒன்றிணைந்து உலக ஒழுங்கியல்களுக்கு ஏற்றவாறு சுயநிர்ணயம் பெறுவதற்கான, பெற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வுத் திட்டத்தை ஒற்றுமையாக ஏற்படுத்தவேண்டும் என்ற செய்தியை கடந்த முள்ளிவாய்க்கால் அனர்த்தம் கற்றுத்தந்த பாடமாக அமைகின்றது.

தணல் குழுமம்