ஸ்ரீலங்காவில் ஈழத்தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இனப்படுகொலையின் உச்சக்கட்டமாக 2009 ம் ஆண்டு மே மாதம் லட்சக்கணக்கான தமிழ்மக்கள் முள்ளி வாய்க்காலில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஐ.நா அறிந்துகொண்டே, படுகொலைகளுக்கு சாட்சியாக விரும்பாது தனது பணியாளர்களை தமிழீழ பகுதிகளில் இருந்து முதலில் விலக்கிக் கொண்டது. அதைவிடவும் உலகம் முழுவதும் உலகத்தமிழர்கள் கிழர்ந்தெழுந்து தொடர் போராட்டங்களை நடாத்தியும் சர்வதேசமும் தமிழர்களின் படுகொலையை வேடிக்கை பார்த்தது.

இந்தியாவும், பாகிஸ்தானும், சீனாவும் வேறு சில நாடுகளும் ஸ்ரீலங்கா அரசுடன் சேர்ந்து ஈழத்தமிழர்கள் மீதான படுகொலையை நடாத்தி முடித்தன. ஈழத்தமிழர்கள் மீதான ஸ்ரீலங்காவின் இனப்படுகொலையின் பின்னராக ஐ.நா மனிதஉரிமைச்சபையின் மாநாட்டில் ஈழத்தமிழர்கள் மீதான படுகொலைகள் போர்க்குற்றம் என்ற பெயரில்  பேசப்பட்டது.

போர்குற்ற விசாரணைகளை இந்தியாவும், பாகிஸ்தானும், சீனாவும் வேறு பல நாடுகளும் எதிர்த்தன. பின்னர் சனல் 4 ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்தது. அதன்பின்னர் ஐ.நாவின் மனித உரிமைச்சபையின் மாநாட்டில் போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்கவும், ஈழத்தமிழர்கள் மீதான இராணுவ அழுத்தங்களை நீக்க கோரியும் ஸ்ரீலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை பல நாடுகள் ஆதரித்ததனால் ஜெனீவாவில் வெற்றி பெற்றது.

ஆனால் இந்த தீர்மானம் எந்தவொரு வலுவான அழுத்தத்தையும் ஸ்ரீலங்கா அரசின் மேல் ஏற்படுத்தாதனாலும் இன்றுவரை ஸ்ரீலங்கா அரசு அந்த தீர்மானத்தில் சொல்லப்பட்ட எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாததனாலும் இந்தவருடமும் அதாவது 2013 பங்குனி மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நாவின் மனித உரிமைச்சபையின் மாநாட்டில் மீண்டும் அமெரிக்காவினால் உப்புக்குச்சப்பில்லாத மற்றுமொரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது

இந்த தீர்மானமும் வெற்றிகரமாக ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானமெல்லாம் ஸ்ரீலங்கா அரசின் மேல் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு விடக்கூடாதே என்பதற்காக இந்த உலக நாடுகள் எல்லாம் கூட்டாக சேர்ந்து செய்ததாகவும், சர்வதேசத்தினால் தாம் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் உலகத்தமிழர்கள் உணர்கிறார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் மாணவர்களின் சுயமான எந்தவொரு அரசியல் கலப்புமில்லாத புரட்சி போராட்டத்தின் காரணமாக தமிழ்நாட்டு அரசினால் அதன் சட்டசபையில் தமிழீழம் தான் ஒரே தீர்வு எனவே ஐ.நா அதற்கான வாக்கெடுப்பை நடாத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதாவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது ஈழத்தமிழர்கள் மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும், தாம் இந்த உலகில் கைவிடப்பட்ட, மறக்கப்பட்ட இனமோ அல்ல என்று உணர்கிறார்கள்.

தமிழ்நாட்டு சட்ட சபையில் எத்தனையோ அரசுகள் அமைக்கப்பட்டிருந்தும் அவை அத்தனையாலும் எத்தனையோ தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டிருந்தும் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் சாதகமான சூழ்நிலையில் தனது அரசு மத்திய அரசாங்கத்தினால் கலைக்கப்படலாம் என்ற அச்சத்தையும் கடந்து ஜெயலலிதாவினால் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானமானது அனைத்து உலகத்தமிழர்கள் தரப்பினாலும் பேதங்களை மறந்து வரவேற்கப்பட்டிருக்கின்றது.

இந்த தீர்மானத்தை தமிழர் நடுவம் சுவிசும் வரவேற்கின்றது. இதற்காக தமிழர் நடுவம் சுவிஸ் தமிழநாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

தமிழர் நடுவம் சுவிஸ்

நன்றி தமிழ்வின்