இந்தியாவில் தொடரும் தமிழ் மாணவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இந்தியா முழுவதுமான போராட்டமாக புரட்சி வெடித்திருக்கின்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் மாணவர் சமூகங்கள் தமிழ்நாட்டின் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அடையாள உண்ணாவிரதங்களை தொடங்கியிருப்பது மிகவும் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையையே காட்டுகின்றது.

டெல்கி, மும்பை போன்ற மாநகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் கல்விபயிலும் தமிழ் மாணவர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரத்தில் குதித்துள்ளார்கள்.

அதேபோல் இலண்டனிலும் ஈழத்தமிழ் இளையோரால் தமிழ்நாட்டு மாணவர்களிற்கு ஆதரவாக அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதேபோல் ஜேர்மனி, டுஸ்சல்டோர்வ் மாநகரத்திலும் ஈழத்தமிழ் இளையோரால் ஒரு கவனயீர்ப்பு போராட்டமும் ஒன்றுகூடலும் நடாத்தப்பட்டது.

உலகம் முழுவதும் இது போன்ற புரட்சி வெடிக்கவேண்டும் அதன்மூலம் எமது இலட்சியக் கனவான ஈழம் மலரவேண்டும். மாணவர்களினதும், இளையோரினதும் இந்த போராட்டங்களிற்கான ஆதரவையும், ஊக்கத்தையும் அளிக்கும் முகமாக புலம்பெயர்ந்து வாழும் மக்களும் மாணவர்களும் கவனயீர்ப்பு நிகழ்வுகளையும் ஆதரவுப்போராட்டங்களையும் பரவலாகவும், அடுத்து அடுத்து குறுகிய கால இடைவெளிக்குள் நடாத்திக்கொண்டே இருக்கவேண்டும்.

ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கியநாடுகளின் மனிதஉரிமை கூட்டத்தொடரில் பார்வையாளராக பங்கேற்க வந்திருக்கும் சீமான் அவர்களை ஈழ விடுதலையை நோக்காகக் கொண்ட பல அமைப்பினர் சந்தித்தனர். அச்சந்திப்பின்போது எமது ஈழ விடுதலைப் போராட்டமும் எதிர்காலமும் பற்றி கலந்துரையாடப்பட்டது.

புலம்பெயர் தமிழர்கள் செயற்பாடுகள் எவ்வாறு அமையவேண்டும் மற்றும் தமிழ்நாட்டு அரசியலில் ஈழத்தமிழர்களின் பங்கு என்ன என்பவை பற்றியும் கலந்துரையாடப்பட்டது. தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராக வருபவர் ஒரு தமிழனாக இருப்பதோடு மட்டுமல்லாது தமிழ் உணர்வுள்ளவராகவும் தமிழரின் விடுதலை நோக்கி முனைப்புக் கொண்டவராகவும் இருக்க வேண்டும். கூடவே ஈழ விடுதலை போராட்டத்தின் போக்கிலும், ஈழம் விடுதலைபெறும் கால இடைவெளியிலும் என்ன மாற்றங்கள் ஏற்படலாம் என்பதை பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

தணல் குழுமம்