STC_Logo_2சிறிலங்கா அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 22 வது கூட்டத்தொடரில் கண்டனத் தீர்மானமொன்று கொண்டு வரப்படவுள்ள நிலையில், தமிழ் இனப்படுகொலை விவகாரத்துக்கு நீதி வேண்டி பாதுகாப்புச் சபைக்கு அறிவித்து, சர்வதேச ஆணைக்குழுவொன்றை நியமிக்க ஆவன செய்யுமாறு மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளையைக் கோரும் மகஜர் ஒன்று சுவிஸ் தமிழர் நடுவத்தினால் (Swiss Tamils Center) கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்றுக் காலையில் ஜெனீவா சென்ற சுவிஸ் தமிழர் நடுவத்தின் முக்கியஸ்தர்கள் தெற்காசியப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான மனித உரிமைகள் அலுவலர் ஜெனிபர் கிராப்ட் அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த மகஜரைக் கையளித்தனர்.

சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளைச் சுட்டிக் காட்டிய தூதுக் குழுவினர் பின்வரும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

1. இனப்படுகொலைத் தடுப்பு விவகாரத்துக்குப் பொறுப்பான விசேட தூதுவரால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையை வெளியிடுமாறு ஐ.நா. பொதுச் செயலாளரை வேண்டுவதுடன், தமிழ் இனப் படுகொலை விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் சென்று ஐ.நா. சாசனம் பிரிவு 99 இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு சிறி லங்காவில் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலையை விசாரித்தல்.

2. இனப் படுகொலை தொடர்பான பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ள நாடுகளிடம் பரப்புரை மேற்கொண்டு, 1948 டிசம்பர் 9 ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட இனப்படுகொலைக் குற்றங்களைத் தடுத்தலும் தண்டித்தலும் என்ற பிரகடனத்துக்கு அமைய சர்வதேச நீதிமன்றில் சிறிலங்கா அரசுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு கோருதல்.

3. தலையீடு செய்வதற்கான விருப்பு (W2I) பாதுகாப்பதற்கான பொறுப்பு (R2P) ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் தற்காலிகத் தீர்வு ஒன்றை வழங்குவதற்கான செயற்பாட்டைத் துரிதப்படுத்துமாறு கொள்கை வகுப்பாளர்கள், செல்வாக்குமிக்க நாடுகளின் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திரிகள் இடையே பரப்புரைகளை மேற்கொள்ளுதல்.

4. இனப் படுகொலைக்குப் பரிகார நடவடிக்கையாக, சுதந்திர நாட்டையா அல்லது சுய ஆட்சியையா விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறியும் சர்வசன வாக்கெடுப்பை நடத்துதல், சர்வதேச பாதுகாப்புச் செயன்முறையின் கீழ் தமிழர்கள் தமது கலாசார, பொருளாதார, சமூக அபிவிருத்திகளை நூறு வீதம் அடைவதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்துதல்.

5. அரசியல் தீர்வுக்குப் பிற்பாடு, எதிர்காலத்தில் மோதல்கள் எதுவுமின்றி தமிழ்த் தேசமும் சிங்களத் தேசமும் சகஜ வாழ்வு வாழ்வதை உறுதி செய்யும் வகையில் நேர்மையான நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

மேற்படி கோரிக்கைகளைச் சமரப்பித்து உரையாடிய தூதுக்குழுவில் அமைப்பின் தலைவர் புவனேந்திரன் மோகன்ராஜ், தியாகராஜா முரளிநடேசன், கனகசபை தேவகடாட்சம், அன்ரன் நிராஜ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.